இத்தாலி நாட்டு வானியல், தாவரவியலாளர்
இத்தாலி நாட்டைச் சேர்ந்த வானியலாளரும், ஒளியியல் கருவிகள் வடிவமைப்பாளருமான ஜியோவன்னி பாட்டிஸ்டா அமிசி (Giovanni Battista Amici) பிறந்த தினம் இன்று (மார்ச் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
இன்றைய இத்தாலியில் மொடேனா என்ற பகுதியில் பிறந்தார் (1786). பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, பொலோனா பல்கலைக்கழகத்தில் கட்டிடப் பொறியாளர் பட்டம் பெற்றார். படிப்பை முடித்த உடனே மொடேனா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1831-ல் கல்வி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.
சிறுவயது முதலே ஒளியியல் கருவிகளில், குறிப்பாக தொலைநோக்கிகள் அவற்றின் லென்ஸ்கள் தயாரிப்பிலும் மேம்பாட்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். வானியலிலும் ஆர்வம் கொண்டிருந்தார். முதன்முதலாகப் பிரதிபலிக்கும் தொலைநோக்கியை உருவாக்கினார். இரண்டாவதாக இவர் தயாரித்த தொலைநோக்கி அதுவரை இத்தாலியில் தயாரிக்கப்பட்டத் தொலைநோக்கிகளிலேயே சிறந்ததாகப் போற்றப்பட்டது.
ஃபிளாரன்சில் உள்ள வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநராக வும் இயற்பியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான ராயல் அருங் காட்சியகத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதிபலிக்கும் தொலைநோக்கி மற்றும் நுண்ணோக்கிக் கண்ணாடிகளில் பல முக்கிய மேம்பாடுகளை உருவாக்கினார். தொலைநோக்கிகளைத் தயாரிக்க சிறிய தொழிற்சாலையை தொடங்கினார்.
இங்குப் பல்வேறு தொலைநோக்கிகள் மற்றும் ஒரு புதிய இரட்டை-இமேஜ் மைக்ரோமீட்டர் (Dipleidoscope) உருவாக்கினார். ஒளிவிலகல் ஸ்பெக்ட்ரோஸ்கோப்புகளில் பயன்படுத்துவதற்கான கனப்பெட்டகங்களையும் (prisms) மேம்படுத்தினார்.
தொலைநோக்கியில் வாட்டர்-இம்மர்ஷன் தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்தார். இரட்டை நட்சத்திரங்கள் மற்றும் ஜுபிடரில் பல கண்காணிப்புகளை நிகழ்த்தினார். இவர் பெயரால் வழங்கப்படும் அமிசி பிரிசம் இப்போதும் ஒளிவிலகல் நிறப்பிரிகை கருவியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தனது நுண்ணோக்கி மூலம் புரோட்டோபிளாசம் சுழற்சியை ஆராய்ந்தார். தாவரத்தின் மகரந்தக் குழாயை (pollen tube) முதன்முதலாக ஆராய்ந்தவர் இவர்தான். மேலும் உடற்கூறியல், உடலியல், தசைக்கூறுகள் பற்றிய ஆய்வு, நோயியல் மற்றும் இலை அமைப்பியல் மற்றும் விலங்கு உயிரியல் உள்ளிட்ட பல்வேறு களங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள அறிவியலாளர்களைச் சந்தித்து தான் கண்டறிந்த சாதனங்களை அங்கு அறிமுகப்படுத்தினார். 1838-ல் அரைக்கோள முன் லென்சைக் கண்டறிந்தார். 1845-ல் நிறம் நீக்கி லென்சைக் (achromatic lens) கண்டறிந்தார். இத்தாலிய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற ‘ஆன் ஃபெர்டிலைசேஷன் ஆஃப் ஆர்சிட்ஸ்’ என்ற ஆய்வுக்கட்டுரையை வாசித்தார்.
இதில் ஒரு தாவரத்தின் மகரந்தச் சேர்க்கை முதல் கருவின் வளர்ச்சி வரை அனைத்து கட்டங்களையும் முதன்முறையாக விவரித்திருந்தார். இவரது பல கண்டுபிடிப்புகள் நவீன தொலைநோக்கிகள் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தன. நிலாக்குழிப்பள்ளத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
வால்நட்சத்திரத்தைத் தனது ஒளிவிலகல் தொலைநோக்கி கொண்டு ஆராய்ந்தார். கேட்டடியோப்டிக் மற்றும் ஆக்ரோமாடிக் தொலைநோக்கிகளில் பல்வேறு மேம்பாடுகளைக் கொண்டுவந்தார்.
மேலும் பிரதிபலிக்கும் மற்றும் ஒளிவிலகும் நுண்ணோக்கிகளையும் உருவாக்கினார். 19-ம் நூற்றாண்டின் தலைசிறந்த வானியலாளர், நுண்ணோக்கியாளர், தாவரவியலாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட ஜியோவன்னி பாட்டிஸ்டா அமிசி 1863-ம் ஆண்டு 77-வது வயதில் மறைந்தார்.