வலைஞர் பக்கம்

தேநீர் கவிதை: பகையொன்றுமில்லை பறவைகளே!

செய்திப்பிரிவு

எனக்கும்

என் குடியிருப்புப் பகுதியின்

பறவைகளுக்கும்

பல ஆண்டுகளாகவே

பகை நிலவுகிறது!

மின் தடையால்

ஊர் இருண்ட

ஒரு முன் இரவு நேரத்தில்

நெருப்பு விளக்கேந்தி - நான்

தெருப் பக்கம் வந்தபோது

குபீரெனப் பறந்த - என்

வாசல் மரத்துப் பறவைகள்,

அந்த சம்பவத்திற்குப் பிறகு

ஏனைய பறவைகளையும்

எனக்கெதிராகத்

தூண்டி வருகின்றன!

அலைபேசியைத்

தூக்கிக் கொண்டு

வீட்டுக்கு வெளியே - நான்

ஓடிவரும் நேரங்களில்

வேண்டுமென்றே அவை

கூடுதல் ஒலியோடு

கூச்சலிடுவதால்,

உற்ற நண்பர்களோடு

உரையாட முடிவதில்லை!

செலவு செய்து

சலவை செய்த

வெள்ளைச் சட்டையோடு

வெளியே கிளம்பி

வீதியைக் கடப்பதற்குள்

தலையிலும் தோளிலுமாக

என் வெண்மைகளின் மீது

எச்சங்கள் விழுகின்றன!

வானத்தைப் பார்த்தபடியே

வளைந்து வளைந்து

வீதியில் நடக்கும் என்னை,

கண்ணாடிக்குள்ளிருந்து

கண்டிக்கிறார்கள்

காரில் போகிறவர்கள்!

மேலும் மேலும் காரணங்கள்

கூடிக்கொண்டேயிருந்தால்

முற்பகை வலிமை பெற்று

மூர்க்கமாகும் என்பதைப்

புரிந்துகொள்ளவேயில்லை... அந்த

அப்பாவி பறவைகள்!

நான்

புரிந்துகொள்கிறேன்!

போயும் போயும்

பறவைகளோடு

பகை வேண்டாமென

கசப்புணர்வுகளை

கை விடுகிறேன்!

என் வாழ்விடத்தில்

எதைச் செய்யவும்

அவற்றுக்கு உரிமையளிக்கிறேன்!

போதாக்குறைக்கு

பொங்கலுக்கு எடுத்த

இரண்டு புதிய வெள்ளைச் சட்டைகள்

இப்போது என்னிடம் உள்ளன!

வரச்சொல்லுங்கள் - அந்த

வாயாடிக் கூட்டத்தை!

‘வார்தா’வுக்குப் பிறகு

வரவே இல்லை அவை!

SCROLL FOR NEXT