கட்டிடக் கலை நிபுணர்
இந்தியக் கட்டிடக்கலை சிற்பி எனப் போற்றப்படும் லாரி பேக்கர் (Laurie Baker) பிறந்த தினம் இன்று (மார்ச் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிரிட்டனில் பிறந்தார் (1917). இவரது முழுப்பெயர், லாரன்ஸ் வில்பர்ட் பேக்கர். கிங் எட்வர்ட் கிராமர் பள்ளியில் பயின்றார். பள்ளிப் படிப்புக்குப் பிறகு பிர்மிங்ஹாம் வரைகலைக் கல்லூரியில் கட்டிட வரைகலைப் பயின்றார்.
* பட்டப்படிப்பு முடித்த உடன் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ராணுவத்தில் சேர்ந்தார். அனஸ்தடிக் பயிற்சி பெற்று சீனா, பர்மா நாடுகளில் அறுவை சிகிச்சைக் குழுவுடன் பணியாற்றினார்.
* 1944-ல் பர்மாவிலிருந்து லண்டன் செல்வதற்காக மூன்று மாதங்கள் கப்பலுக்காகக் காத்திருக்க நேர்ந்தபோது காந்திஜியைச் சந்தித்தார். இவரிடம் வீடு, தொழில் பற்றி காந்தியடிகள் விசாரித்தார். குறைந்த செலவில் எளிமையான வீடுகளை உருவாக்க விரும்புவதாக இவர் கூறினார்.
* அதுகுறித்து காந்தியடிகள், நவீன வீடுகளின் மிகப்பெரிய சிக்கல், அவை கட்டுவதற்காகும் செலவில் பெரும்பகுதி அதற்கான பொருள்களைக் கொண்டுவந்து சேர்ப்பதற்குப் போய்விடுகிறது என்றும் அதைத் தவிர்த்துவிட்டால், குறைந்த செலவில் வீடுகளைக் கட்டலாம் என்றும் கூறினார்.
* 1945-ல் உலகத் தொழுநோய் பணிக்கழக அமைப்பின் கட்டிட வரைகலையாளராக இந்தியா வந்தார். உற்பத்தி, நுகர்வு இரண்டும் ஒரே இடத்தில் நிகழ வேண்டும் என்ற காந்திஜியின் பொருளியல் கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படத் தொடங்கினார். உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான, தரமான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார்.
* இரும்புக் கம்பிகளுக்குப் பதிலாக மூங்கில்களைப் பயன்படுத்த முடியும் என்பதைக் கண்டறிந்தார். உள்வெளியையும் வெளி இடத்தையும் தனித்தன்மை வாய்ந்த முறையில் பயன்படுத்தினார். இது ‘லாரி பேக்கர் பாணி’ என்று பிரபலமடைந்தது.
* 1966-ல் பீர்மேட்டுக்கு வந்து தங்கி, பழங்குடி மக்களுக்கு வீடுகளை வடிவமைத்தார். பெரிய மரங்களை வெட்டாமல் கட்டிடங்களை உருவாக்கும் உத்தி, மழைநீர் சேமிப்பு வழிமுறை ஆகியவற்றைப் பின்பற்றினார். 1970-ல் திருவனந்தபுரத்தில் குடியேறினார். அங்கு இவர் வடிவமைத்த வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையம் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது.
* வீடுகள், விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் இவரது பாணியைப் பின்பற்றிக் கட்டப்பட்டன. தனது உத்திகள் குறித்து எளிய செயல் விளக்கப் புத்தகங்களைத் தானே வரைந்த ஓவியங்களுடன் வெளியிட்டார். பல கட்டிட கலைஞர்கள் இவரது செயல்படும் பாணியால் ஈர்க்கப்பட்டனர்.
* ‘ஏழைகளின் பெருந்தச்சன்’ என அன்புடன் குறிப்பிடப்பட்டார். விரைவில் ‘பேக்கர் பாணி’ வீடுகள் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தன. தன் வடிவமைப்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமானங்கள் நடைபெறும் இடங்களில் ஆஜராகிவிடுவார்.
* 1988-ல் இந்தியக் குடியுரிமை பெற்றார். 1990-ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
* பிரிட்டிஷ் அரசின் ‘ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர்’ விருது பெற்றார். சர்வதேச கட்டிடக்கலை ஒன்றியத்தின் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றார். ‘லாரி பேக்கர் – லைஃப், ஒர்க்ஸ் அண்ட் ரைட்டிங்ஸ்’ எனும் இவரது வாழ்க்கை வரலாற்று நூலை கவுதம் பாட்டியா எழுதியுள்ளார். வடிவமைப்பது, எழுதுவது என இறுதிக் காலம்வரை சுறுசுறுப்புடன் இயங்கி வந்த லாரி பேக்கர் 2007-ம் ஆண்டு 90-வது வயதில் மறைந்தார்.