வலைஞர் பக்கம்

யூடியூப் பகிர்வு: ஒருவனுக்கு ஒருத்தி?

க.சே.ரமணி பிரபா தேவி

அரேஞ்ச்ட் மேரேஜில் விருப்பம் இல்லாத ஆணும் இளம்பெண்ணும் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் சந்திக்கின்றனர். பெண் பார்க்கும் படலம் முடிந்த பிறகு இருவரும் தனியாகப் பேச ஆரம்பிக்கின்றனர்.

காதல், கல்யாணம், வாழ்க்கை என பேச்சு நீள்கிறது. எனினும் எதிர்பாராத தருணத்தில் இருவரும் மனம் திறந்து பேச ஆரம்பிக்கின்றனர். அப்போது இருவரின் வாழ்க்கையிலும் சில அடர் அத்தியாயங்கள் இருந்தது தெரியவருகிறது. அது...

படம் நெடுகிலும் இரண்டே இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே. அவர்கள் அம்மாக்களின் குரல்கள் மட்டுமே ஒலிக்கின்றன. ஆனாலும் போர் அடிக்காமல், கவனம் சிதறாமல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் விமல். அறை முழுக்க வியாபித்திருக்கும் வெள்ளை நிறத்திலும் காற்றிலாடும் செடிகளின் அசைவிலும் தினேஷ் பாபுவின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது.

''மனசுல இருக்கறதை இவ்வளவு டைரக்டா சொல்றவங்ககிட்ட பேசி ரொம்ப நாளாச்சு''

''இந்த மாதிரி இருந்தா கஷ்டமா?- நம்மூர்ல கஷ்டம்தான்''

''மனுஷ உணர்வு ரொம்ப சிக்கலானது-  பிடிக்கறது பிடிக்காமப் போகும், சுத்தமா பிடிக்காதது பிடிக்க ஆரம்பிக்கும்''

''நம்ம மைனாரிட்டில ஒரு மைனாரிட்டி- நமக்கு மார்க்கெட்டே கிடையாது''

''ஒரு பொண்ணு யோசிச்சு முடிவெடுத்தா அதுக்கு பேரு திமிரா?'' உள்ளிட்ட வசனங்கள் சபாஷ் ரகம். ''இதுங்க'' என்று பெற்றவர்களைச் சொல்வது கொஞ்சம் உறுத்தல்.

LGBT (Lesbian, Gay, Bisexual, Transgender) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கான மாதம் ஒவ்வோர் ஆண்டும் ஜூனில் கொண்டாடப்படுகிறது. தொன்றுதொட்டு ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண் என்ற கற்பிதத்தையே கடைபிடித்திருக்கிறோம். ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் என்றாலோ, இரண்டுமே என்றாலோ அதை இந்த சமூகத்தால் ஜீரணிக்க முடிவதில்லை.

திருநங்கைகளையே இப்போதுதான் சக மனிதர்களாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அதேபோல எல்ஜிபிடி சமூகத்தினருக்கும் உணர்வுகள் இருக்கும், அதில் வலிகள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வோம். அவர்களையும் நம் சமூகத்தில் வாழ விடுவோம் என்று பொட்டில் அடித்தாற்போலச் சொல்கிறது 'ஒருவனுக்கு ஒருத்தி'.

SCROLL FOR NEXT