வலைஞர் பக்கம்

அந்த ஆண்டில்| 1940: பிரிட்டன் மீது தாக்குதல்

சரித்திரன்

பிரிட்டனில் 1940-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே அத்தியாவசியப் பண்டங்களை ரேஷன் முறையில் வழங்கத் தொடங்கினர். மேற்கு ஐரோப்பாவில் வசந்தகாலம் வரை போரின் தீவிரம் உணரப்படவில்லை. ரஷ்யா, பின்லாந்து இடையில் நடந்த குளிர்காலப் போர் மார்ச் மாதம் முடிந்தது. அதற்கடுத்த மாதம் டென்மார்க், நார்வே மீது ஜெர்மனி படையெடுத்தது.

1940 மே 10-ல் பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து நெவில் சேம்பர்லின் விலகி, வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமரானார். பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து நாடுகள் மீது ஜெர்மனி படையெடுத்து மின்னல் வேகத் தாக்குதல் நடத்தியது.

ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டது பிரான்ஸ். பிரான்ஸின் தெற்கு, கிழக்குப் பகுதிகள் மார்ஷல் பெடைன் என்பவர் தலைமையிலான பொம்மை அரசால் நிர்வகிக்கப்பட்டன. எஞ்சிய பகுதிகளை ஜெர்மனி தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டது.

பிரான்ஸைக் கைப்பற்றிய ஹிட்லர், தன்னுடைய கவனத்தை பிரிட்டன் மீது திருப்பினார். பிரிட்டனின் போர் விமானங்களையும் கடலோர வான் தற்காப்பு நிலைகளையும் அழிக்க உத்தரவிட்டார். ஜூலை முதல் செப்டம்பர் வரையில் இத்தாக்குதல் தொடர்ந்தது.

பின்னர், பிரிட்டனின் பெரிய நகரங்களைத் தாக்கத் தொடங்கினார். பிரிட்டன் விமானப்படை ஜெர்மன் போர் விமானங்களுக்குக் கடும் சேதத்தை ஏற்படுத்தினார்.

லண்டன் மாநகரில் அரச குடும்பத்தின் பங்கிங்காம் அரண்மனை உட்பட எல்லா நகரங்களின் முக்கிய இடங்கள் மீதும் கவென்ட்ரி என்ற மிகப் பெரிய பிரிட்டிஷ் நகரத்தின் மீதும் ஜெர்மன் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ஜெர்மனியின் விமானத் தாக்குதலில் மட்டும் 40,000 பேர் இறந்தனர்.

SCROLL FOR NEXT