வலைஞர் பக்கம்

வலை வாசம்: நாங்கள் என்ன செய்ய வேண்டும், தோழர்களே?

லிவிங் ஸ்மைல் வித்யா

ஏப்ரல் 15 திருநங்கைகள் தினம் கொண்டாட்டத்துக்கு முதல் நாள் நடந்த ஒரு சம்பவம் இது. திருநங்கை ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்ட காரணத்துக்காக, கடமை தவறாத காவல் துறை உயரதிகாரி ஒருவர், நடுச்சாலையில் ஐந்து உதவி காவலர்களுடன் சேர்ந்து அவரைச் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். கையெலும்பு உடைந்த அவர், “இது மனித உரிமை மீறல்” என்று புலம்பியபோது, தாக்குதல் அதிகரித்தது. அத்துடன், அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ஒப்படைத்து, வழிப்பறி செய்ததாக (ரூ.320) பொய்வழக்கு பதிவுசெய்துவிட்டுச் சென்றுவிட்டார் அந்த அதிகாரி.

அவரை மீட்டு வரப் போராடிய திருநங்கைகள், பெண் வழக்கறிஞர் மற்றும் தமுஎகச தோழர்கள், சைதை, கிண்டி, தி.நகர், அடையாறு என உதவி ஆணையர் அலுவலகம் முதல் துணை ஆணையர் அலுவலகம் வரை பல அதிகாரிகளிடம் அலைக்கழிக்கப்பட்டனர். ஒருவழியாக, ‘இனி யாரும் குறிப்பிட்ட அந்த இடத்தில் பாலியல் தொழிலுக்கு நிற்கக் கூடாது’ என மிரட்டப்பட்டு ரூ.5,000 அபராதத் தொகையுடன் அந்தத் திருநங்கை விடுவிக்கப்பட்டார்.

இதுபோலப் பல திருநங்கைகள் இன்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மட்டுமன்றி, ரயிலில் பிச்சையெடுக்கும் திருநங்கைகளையும் லத்தி சார்ஜ் செய்தும், லாக்கப்பில் அடைத்தும் வருகின்றனர். அதாவது நண்பர்களே! நாகரிகச் சமூகத்தால் சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்படாதபோதும், கல்வி-வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், குடும்பத்தால் வாரிசுகளாகவே பாதுகாக்கப்படாதபோதும், திரைப்படங்களில் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டு அவமானத்தைச் சுமந்தபோதும், திருநங்கைகள் மட்டும் நாகரிகச் சமூகத்துக்கு எந்தத் தொந்தரவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதையே காவல் துறை கண்ணும் கருத்துமாகச் செய்துவருகிறது.

மேற்கூறிய பொய் வழக்கிலிருந்து சம்பந்தப்பட்ட திருநங்கையை விடுவிக்கக் கோரியபோது, ஒரு காவல் அதிகாரி “உங்களுக்குத்தான் அரசாங்கம் நெறைய பண்ணுதே அப்புறம் ஏன் இன்னும் இப்படிக் கேவலமா நிக்கிறீங்க?” என்று கேட்டார். இதைச் சொன்ன அந்த ‘நல்ல அதிகாரி’ அதற்கும் சற்று முன்புதான் எங்களிடம் ரூ.500 லஞ்சம் பெற்றுக்கொண்டவர் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அரசு எங்களுக்குச் செய்திருக்கும் நலத்திட்டங்கள் போதுமானவையா என்று பாருங்கள். நலவாரியம் தொடங்கிய மூன்று ஆண்டு பலனாகத் திருநங்கைகள் அல்லாத பொது மனிதர்கள் சிலருக்கு நிரந்தர அரசாங்க வேலையும், திருநங்கைகளில் 13 பேரை வாரிய உறுப்பினர்களாக நியமித்தும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.1,500 சம்பளமும் கொடுக்கப்பட்டது. தொடர்ச்சி யாக, திருநங்கைகளில் சிலருக்கு அடையாள அட்டையும் கிடைத்தது. அந்த அடையாள அட்டையால் ஒரு சிம் கார்டுகூட வாங்க முடியாது. உண்மையில், பெரிய உதவிகளை நாங்கள் இன்னும் பெற்றுவிடவில்லை.

எங்களிடம் இருப்பது ஒரே ஒரு கேள்விதான். இந்தியக் குடிமக்களுக்குரிய அடிப்படை உரிமைகளான நல்ல குடும்பம், நல்ல கல்வி, நல்ல வேலைவாய்ப்புக்கான சகல வாய்ப்புகளுடன் வாழ்பவர்கள் நீங்கள். கூடுதலாக, லட்சங்களில் லஞ்சமும், கோடிகளில் ஊழலுமாக, போதாக்குறைக்கு அதிகார துஷ்பிரயோகம், கற்பழிப்பு, கொள்ளை, மதத் துவேஷம், சாதித் திமிர் என நவநாகரிகமாகவே வாழுங்கள்.

உங்களின் காமாலைக் கண்களால் மனிதர்களாகவே இனம்காண முடியாத திருநங்கைகளான நாங்கள், பிச்சையெடுக்கும் நாங்கள், பாலியல் தேவைக் காக அலையும் காமாந்தகர்களிடம் பிழைப்புக்காகப் பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகளான நாங்கள் என்னதான் செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?

SCROLL FOR NEXT