தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மூலம் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்டத் தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி. முனியன் விளக்குகிறார்.
நலவாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறதா?
தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் பயிற்சி எதுவும் அளிக்கப்படுவதில்லை. எனினும், கட்டுமானம் சார்ந்த தொழிற்பயிற்சிகளை தமிழ்நாடு கட்டுமானக் கழகம் அளித்து வருகிறது. கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் வாழ்க்கைத் துணை (கணவன் அல்லது மனைவி) மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு மட்டும் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் கட்டுமானம் சார்ந்த இந்த தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
தொழிற்பயிற்சி மையங்களில் எந்தவிதமான பயிற்சி அளிக்கப்படுகிறது?
கட்டுமானம் சார்ந்த தொழில்களான பிளம்பிங், எலெக்ட்ரீஷியன் பணி, செங்கல் தயாரிப்பு, பிட்டர் பணி, கட்டிடம் கட்டுதல், கான்கிரீட் மிக்ஸிங் ஆபரேட்டர் பணி போன்ற தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த பிறகு, தேசிய தொழில் நெறிக்கல்வி பயிற்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 100 பேர் வீதம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொழிற்பயிற்சி பெறுவதற்கு கால அளவு உள்ளதா?
ஆம். அந்தந்த பயிற்சியை பொறுத்து கால அளவு நிர்ணயம் செய்யப்படும். இது முழு நேரப் பயிற்சி அல்ல. பகுதி நேரப் பயிற்சியாகவே அளிக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் இத்தகைய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இப்பயிற்சியில் சேர கல்வித் தகுதி, வயது வரம்பு என்ன?
பயிற்சியில் சேர கல்வித் தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வயது 18 முதல் 60-க்குள் இருக்கவேண்டும். பயிற்சியில் சேருபவர்களுக்கு உதவித்தொகையும் எதுவும் வழங்கப்படுவதில்லை.
தொழிற்பயிற்சி சேர்க்கைக்கான வழிமுறைகள் என்ன?
தொழிற்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) பெறலாம். www.dget.gov.in/mes என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தொழிலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பம் சென்னையில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழகத்துக்கு அனுப்பப்படும். பின்னர், அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)