வலைஞர் பக்கம்

பெண் தொழிலாளர் மகப்பேறு நிதியுதவி பெறும் வழிமுறை

கி.பார்த்திபன்

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதுபோல் பார்வை குறைபாடு அடையும் தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடியும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி.முனியன் விளக்குகிறார்.

பெண் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் என்னென்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?

திருமண நிதியுதவித் திட்டம்போல் தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. முதல் இரு குழந்தைகளுக்கு பிரசவத்துக்கு மட்டும் இந்த நிதியுதவி வழங்கப்படும். கருக்கலைப்பு, கருச்சிதைவு ஆகியவற்றுக்கும் இரு முறை தலா ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கான அரசு திட்டத்தில் நிதியுதவி பெற்றிருந்தால், நலவாரியம் மூலம் வழங்கப்படும் இந்த உதவித்தொகையை பெற இயலாது.

மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

அசல் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அடையாள அட்டை ஆகிய பொதுவான ஆவணங்களுடன் பிறப்புச் சான்றிதழ் அசல், குறைப்பிரசவம் அல்லது கருக்கலைப்பு நேரிட்டால் உதவி சிவில் சர்ஜன் அளவில் பெறப்பட்ட மருத்துவச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) வழங்க வேண்டும்.

பார்வை குறைபாடு ஏற்படும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் உதவிகள் வழங்கப்படுகிறதா?

நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் 60 வயது பூர்த்தியடையாதவர்களாக இருந்தாலும், வேலை செய்ய முடியாத நிலையில் இருந்தால் அவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. விபத்தினால் பாதிக்கப்படுவர்களுக்கு செயற்கை உபகரணங்கள் தரப்படுகிறது. பார்வை குறைபாடு ஏற்படும் தொழிலாளர்களுக்கு ரூ.500-க்கு மிகாமல் கண் கண்ணாடி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாவட்டத்தில் முதலில் விண்ணப்பிக்கும் 65 தொழிலாளர்களுக்கு கண்ணாடி வழங்கப்படும். இந்தத் தொகையை பெற கண் மருத்துவரின் பரிசோதனைச் சான்று, கண்ணாடி வாங்கியதற்கான பில் ஆகியவற்றை இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர் சிகிச்சை பெற முடியுமா?

இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ரூ.1.50 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். இந்தத் திட்டத்தில் 1,016 சிகிச்சை முறைகள், 113 தொடர் சிகிச்சை மற்றும் 23 நோய் பரிசோதனை கண்டுபிடிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சிகிச்சை பெறலாம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT