வலைஞர் பக்கம்

மகளிர் தின வாழ்த்து சொல்ல நமக்கு தகுதி இருக்கா?

ப.கோமதி சுரேஷ்

இன்று மகளிர் தினம். பெண்மையை போற்றும் நாள்.....,பெண்களுக்கு ஒரு திருநாள்.. அப்படித்தான் சொல்கிறார்கள்.

இதையே காரணமாக்கி நிறைய விளம்பரம், வியாபாரம் வேறு. உண்மையிலேயே பெண்கள் தினத்தை கொண்டாடக்கூடிய நிலையில் தான் இன்றைய பெண்கள் இருக்கிறார்களா?

பெண்கள் கால் பதிக்காத தடமே இன்றைக்கு இல்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் அது மட்டுமே இந்த கொண்டாட்டத்திற்கு போதும் என்று சொல்லிக்கொள்ள முடியுமா?

இன்றைக்கு ஒரு விவரம் அறியாத பெண் குழந்தையை யாரிடமாவது நம்பி கொடுத்துவிட்டு செல்லக்கூடிய சூழல் உள்ளதா?

போன தலைமுறைகளில் விடுமுறை நாட்களில் யார் வீட்டு குழந்தைகள் எந்த வீட்டில் விளையாடுகிறார்கள் என்றுகூட கவலைப்படாத பெற்றோர்கள் இருந்ததுண்டு. ஆனால் இன்று நம் நெருங்கிய உறவுக்காரர்கள் வீட்டிலும் கூட ஒரு ஆத்திர அவசரத்திற்கும் நமது பெண் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாத ஆபத்தான சமூகத்தில் நாம் இருக்கிறோம்.

நாம் எதற்காக தாக்கப்படுவோம் என்றே சொல்ல முடியாது. கழுத்தில் இருக்கும் நகைக்காகவா, இல்லை உடற் பசிக்கு இரையாகவா? எந்த முனையில் இருந்து தாக்கப்படுவோம், எந்த வயதில் தாக்குதல் நடக்கும் என்பது ஒன்றும் தெரியாது. அது எட்டு மாத குழந்தையாக இருந்தாலும் சரி, 80 வயது மூதாட்டியாக இருந்தாலும் சரி. அவர்களை வல்லூறுகள் வட்டமிட்டு கொண்டு தான் இருக்கின்றன.

காதலில்கூட நமக்கான நபரை தேர்ந்தெடுக்கும் உரிமைகூட நம்மிடம் இல்லை. நம்மை யார் காதலிப்பதாக சொல்கிறார்களோ அவர்களுக்கு சரி என்று தலையாட்ட வேண்டும். இல்லையென்றால் அமிலமோ ...கத்திக் குத்தோ, பெட்ரோல் அபிஷேகமோ நடக்கும். உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் உயிர் இழக்கும் பரிதாபம் தான் மிச்சம்.

நேற்று திருச்சியில் உஷா என்ற இளம் பெண்ணிற்கு நடந்த கொடூரமான மரணம் ( கொலை?)  நம்மை நிறைய சிந்திக்க வைக்கிறது. நம்முள் பல கேள்விகளை எழுப்புகின்றன.

சட்டம் ஏழை, பணக்காரர், அரசியல்வாதி, தொழிலதிபர்கள் என எல்லோருக்கும் பொதுவாகதான் தனது கடமையை செய்துக் கொண்டிருக்கிறதா?

ஹெல்மெட் அணிய வேண்டும்தான், நம் பாதுகாப்பிற்கு. ஆனால் விரட்டிப் பிடித்து ஒருவரை கொடூரமாக தாக்கும் அளவிற்கு அது ஒரு கொலைக் குற்றமா?

அப்படி கடமை தவறாமல் (?) பணியாற்றிய அந்த அதிகாரி அப்போது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறதே? போதையில் பணியாற்ற அதிகாரம் கொடுத்தது யார்?  காவல்துறை பொதுமக்கள் நன்பன் என்பது வெற்று முழக்கம் தானோ?

பொதுவாகவே இரு சக்கர வாகனத்தில் ஓர் ஆண், குடும்பத்தினருடன் செல்லும்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் பட்சத்தில் பின்னால் இருக்கும் மனைவி, மகள், தாய் அல்லது குழந்தைகளின் முகத்திற்காக நாசுக்காக கண்டித்து அனுப்பும் மனித நேயம் இப்போது இல்லையா?

ஒரு ஹெல்மெட் அணியாத குற்றத்துக்கு  ஒரு அப்பாவி உயிர் தான் இணையா?

மாமுல் கொடுக்கும் ரவுடிகளுக்கும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் அரசியல்வாதிகளுக்கும் தான் எப்போதும் காவல்துறை நண்பனா? சாமானியனுக்கு இல்லையா?

வாழ்க்கையில் எத்தனையோ கனவுகளுடன் இருந்த அந்த பெண்ணிற்கும், அவள் வயிற்றில் பூக்கும் முன்னரே கருகிப் போன அந்த மொட்டுக்கும் என்ன நியாயம் கிடைக்கப் போகிறது?

இதுவே பாதிப்புக்குள்ளான அந்த நபர், கடமையுணர்ச்சி (?) தவறாத அந்த அதிகாரிக்கு ஏதாவது கையூட்டு கொடுத்திருந்தால் இந்த அவலம் நேர்ந்து இருக்காதோ?

அடிப்படை மனித உணர்வில்லாத ஒருவருடன் போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால், அவருடைய மனைவியும், முகமறியா அந்த பிஞ்சும் மிஞ்சியிருக்குமோ?

ஆண்டு முழுவதும் பெண்கள் மீதான தாக்குதல்கள் கொஞ்சமும் குறைவில்லை. பணியிடத்தில், பொது இடத்தில் எங்கும் முறையான பாதுகாப்பு இல்லை. இத்தனை இல்லைகள் நிறைந்திருக்கும் சமூகத்தில் நமக்கு மகளிர் தின வாழ்த்து கூற தகுதி இருக்கிறதா?

SCROLL FOR NEXT