வலைஞர் பக்கம்

அந்த ஆண்டில் | 1943 : கைதானார் முசோலினி

சரித்திரன்

இந்த ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யாவின் ஸ்டாலின் கிராடில் நடந்த சண்டையில் ஜெர்மனி சரணடைந்தது. ஹிட்லரின் முதல் பெரும் தோல்வி அது. மே மாதம் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி யில் நடந்த சண்டையில், ஜெர்மனியின் ‘யூ-போட்’ எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டன் கப்பல்களால் அழிக்கப்பட்டன. தொலைதூரத் தாக்குதல் நடத்தும் போர் விமானங்களும் ‘யூ-போட்’களைக் கடலுக்குள்ளேயே மூழ்கடித்தன. மே மாதம் முடிவில் ஜெர்மனியின் கப்பல்படை நேச நாடுகளின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது. ‘கருப்பு மே’ என்று அந்தச் சம்பவம் வர்ணிக்கப்படுகிறது.

வட ஆப்பிரிக்காவில் ஜெர்மனி மற்றும் இத்தாலிப் படைகள் சரணடைந்தன. ஜூலை மாதம் இத்தாலியின் பிரதமர் பதவியிலிருந்து முசோலினி நீக்கப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்ட சம்பவம், பாசிச வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந் தது. செப்டம்பர் மாதம் நேச நாடுகளிடம் இத்தாலி சரணடைந்தது. இதையடுத்து, ஜெர்மனி ராணுவம் இத்தாலியின் வடக்குப் பகுதியை ஊடுருவியது. ஓட்டோ ஸ்கோர்செனி என்ற நாஜி ராணுவத் தளபதியின் தலைமையில் முசோலினியை ஜெர்மனி மீட்டது. வடக்கு இத்தாலியில் ஒரு அரசையும் நிறுவியது.

பசிபிக் பிராந்தியத்தில் குவாடல்கானல் பகுதியில் ஜப்பான் படைகளை அமெரிக்க ராணுவம் முறியடித்தது. நியூகினியா, சாலமன் தீவுகளில் அமெரிக்காவின் வெற்றி தொடர்ந்தது.

ஆகஸ்டில் ரஷ்ய வீரர்கள் கார்கிவ் மற்றும் கீவ் (தற்போது உக்ரைனில் உள்ள நகரங்கள்) பகுதி யிலிருந்து ஜெர்மனி வீரர்களை விரட்டியடித்தனர். ஜெர்மனி நகரங்கள் மீது நேச நாடுகளின் விமானங்கள் குண்டுவீசித் தாக்கின.

SCROLL FOR NEXT