வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1959 செப்டம்பர் 15: சோவியத் பிரதமர் குருச்சேவ் அமெரிக்காவுக்குச் சென்ற நாள்

சரித்திரன்

இரண்டாம் உலகப் போரின் முடிவில் மிகப் பெரிய சக்திகளாக உருவெடுத்த அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவது, விண்வெளி ஆய்வு உள்ளிட்ட விஷயங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

சோவியத் அதிபர் ஸ்டாலின் மறைந்த பின்னர், 1958-ல் அந்நாட்டின் பிரதமரானார் குருச்சேவ். இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முக்கியமான நடவடிக்கையில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதிதான் அமெரிக்காவுக்கு அவர் மேற்கொண்ட பயணம். அமெரிக்காவுக்குப் பயணம் செய்த முதல் சோவியத் தலைவர் அவர்தான்.

1959-ல் இதே நாளில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாஷிங்டன் சென்றடைந்தார் குருச்சேவ். விமான நிலையத்தில் பேசிய அவர், “சோவியத் மக்கள் அமெரிக்காவுடன் நட்புறவுடன் இருப்பதையே விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டார். அமெரிக்கா சென்ற முதல் நாளே, அந்நாட்டின் அதிபர் டுவைட் ஐசனோவருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்.

மொத்தம் 13 நாட்கள் அவர் அமெரிக்காவில் இருந்தார். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள்குறித்து, அமெரிக்க அதிபர் ஐசனோவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நியூயார்க், லாஸ் ஏஞ்சலீஸ், சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களுக்கும் அவர் பயணம்செய்தார். புகழ்பெற்ற பொழுதுபோக்குப் பூங்காவான டிஸ்னிலேண்டையும் பார்க்க விரும்பினார். எனினும், பாதுகாப்புக் காரணங்களால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை.

பயணத்தின் முடிவில், சோவியத் ஒன்றியத்துக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஐசனோவருக்கு அழைப்பு விடுத்தார் குருச்சேவ்.

SCROLL FOR NEXT