வலைஞர் பக்கம்

நம் சட்டம்...நம் உரிமை: குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தால் சிறை

கி.பார்த்திபன்

குழந்தை தொழிலாளர்களை மீட்க தொழிலாளர் துறை சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள், மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளிகள், குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோருக்கு என்ன தண்டனை ஆகியவை குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆர்.மாதேஸ்வரன் விளக்குகிறார்..

தொழிலாளர் துறை மூலம் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றனர்?

தொழில் நிறுவனங்கள், கடை, வீடுகளில் வேலையில் ஈடுபடுத்தப்படும் 14 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தை தொழிலாளர்களே. 14 வயது முதல் 18 வயது வரையிலானவர்கள் வளர் இளம்பருவத்தினர் என வகைப்படுத்தப்படுகின்றனர். 14 வயதுக்கு உட்பட்டவர்களை எந்த விதத்திலும் தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. அது சட்டப்படி குற்றமாகும். குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவதைத் தடுக்கும் விதமாக அந்தந்த மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அளவிலான அதிகாரிகள் தொழில் நிறுவனம், கடை போன்றவற்றில் தொடர்ந்து ஆய்வு செய்வார்கள். குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது தெரிந்தால், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

குழந்தை தொழிலாளர்களுக்கென சிறப்புப் பள்ளிகள் உள்ளதா?

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்டத்தில் சிறப்புப் பள்ளிகள் செயல்படுகின்றன. அந்த பள்ளிகளில் குழந்தை தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது. பின்பு, அவர்களது வயதுக்கு ஏற்ப வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவர். அவ்வாறு மீட்கப்பட்டு பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு, அவர்களது கல்வியைத் தொடர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோர் மீது என்ன குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது?

குழந்தை தொழிலாளர்களை பணியில் வைத்திருக்கும் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பின்பு, நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு 3 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி, 2-வது முறையாக கண்டறியப்பட்டால் நீதிமன்றம் மூலம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

வளர் இளம்பருவ தொழிலாளர்களுக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்படுகிறது?

14 - 18 வயதுக்கு உட்பட்டோர் தொழிலாளர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர். எனினும், அவர்கள் வளர் இளம்பருவத்தினர் என்பதால் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஓய்வு நேரம் உட்பட 6 மணி நேரம் மட்டுமே வேலை அளிக்கவேண்டும். அதன் பிறகு ஓய்வு அளிக்கவேண்டும். வாரம் ஒருநாள் கட்டாயம் விடுப்பு அளிக்கவேண்டும். இதுகுறித்த தகவல்கள் அடங்கிய பதிவேட்டை சம்பந்தப்பட்ட நிறுவனம் பராமரிக்க வேண்டும். அதை தொழிலாளர் துறையினர் ஆய்வு செய்வார்கள்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT