உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் அருகில் இருந்து கொண்டே அதன் ஆதிக்கத்தை எதிர்த்துவரும் சின்னஞ் சிறு நாடு கியூபா. இன்றுவரை அந்நாட்டின் சக்திவாய்ந்த தலைவர் ஃபிடல் கேஸ்ட்ரோ.
1959-ல் கியூபாவின் பிரதமராகப் பதவியேற்றது முதல், அமெரிக்க அரசின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளைக் கடுமை யாக விமர்சித்துவந்தார். இதனால், அவரது ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வுக்கு அமெரிக்க அதிபர் டுவைட் ஐசனோவர் உத்தரவிட்டார். அத்துடன், கியூபாவிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய் வதையும் தடைசெய்தார். இதையடுத்து, பொருளாதார உதவிகளுக்காக சோவியத் ஒன்றியத்தை நாடியது கியூபா. அந்நாடுகளுக்கு இடையிலான உறவு நெருக்கமடைந்ததும் அமெரிக்காவுக்கு அதிருப்தியளித்தது.
இந்தச் சூழ்நிலையில், 1960-ல் இதே நாளில் அமெரிக் காவுக்குச் சென்றார் ஃபிடல் கேஸ்ட்ரோ. நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் சென்றிருந்தார். ஹார்லெம் நகரின் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவரை, கருப்பின விடுதலைப் போராளியான மால்கம் எக்ஸ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
செப்டம்பர் 26-ல் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து 4 மணி நேரம் பேசிய அவர், அமெரிக்காவின் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடினார். இந்தப் பயணத்துக்குப் பின்னர்தான் கியூபாவுடனான ராஜ்ஜிய உறவை முற்றிலும் முறித்துக் கொண்டது அமெரிக்கா.