வலைஞர் பக்கம்

உறவுகள் தொடர்கதை... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

நேஷனலிதா

மன்னர்கள் பலர் ஆண்ட பூமி இது. நாடு அடிமைப்பட்டுக் கிடந்தபோது தன்னலமற்ற தலைவர்கள் பலர் வழிநடத்திச் சென்ற மண் இது. ஆண்டாண்டு காலமாக தலைமையில் இருந்தவர் தவறாமல் கொண்டாடப்பட்டு இருந்திருக்கின்றனர். ஆட்சியில் இருப்பவர் மீதான தங்கள் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்த ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குலோத்துங்க இன்னும் பல அடைமொழிகளையும் சேர்த்து பாடிய நம் மக்கள், ஜனநாயகம் மலர்ந்த போதும்கூட மாறவில்லை.

அந்தவகையில், தமிழக அரசியல் களம் அதீத சுவாரஸ்யம் நிறைந்தது. இங்கு மட்டும்தான் அரசியல் தலைவர்களை அன்புடன், உரிமையுடன் முறைவைத்து அழைக்கும் பழக்கம் மிகுதியாக இருக்கிறது. அம்மா, அய்யா, அண்ணன், அண்ணியார், அக்கா இதெல்லாம் வீட்டுக்குள் கூப்பிட்டுக் கொள்ளும் உறவுமுறைகளைவிட அதிக பாசப் பினைப்புடன், பந்தத்துடன் தொண்டர்களால் உச்சரிக்கப்படுகின்றன.

அம்மா... அம்மா என்று அதிமுக-வினர் உருகும்போதும், அய்யா என அடிமட்ட தொண்டர் ஒருவர் ராமதாசை பார்த்து கையசைக்கும் போதும், எங்கள் அண்ணன் என அழகிரிக்கு ஊர் முழுதும் சுவரொட்டிகளை பெருமையாக ஒட்டியபோதும், அண்ணியார் என அன்போடு விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை அழைத்தபோதும், லேட்டஸ்டாக 'டாக்டர் அக்கா' என தமிழிசை சவுந்தரராஜனுக்கு அடைமொழி வழங்கியபோதும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

இது பிரியாணிப் பொட்டலத்துக்காக சொல்லப்படுவது, 'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா!' என்றெல்லாம் கலாய்க்கப்பட்டாலும் கடைசித் தொண்டனின் அந்த வார்த்தைக்குள் ஆழ்ந்த அன்பு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

பேச்சால் ஆட்சியைப் பிடித்த பெருமையும் நம் தமிழகத்திற்கே உரித்தானது. 'உடன் பிறப்புகளே' என அண்ணாதுரை அழைத்தது ஓட்டுகளாக மாறியதும், 'தோழர்களே' என்ற ஜீவாவின் அறைகூவல் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வலுசேர்த்ததும், என் 'ரத்தத்தின் ரத்தமே' என்ற எம்.ஜி.ஆரின் பாசக்குரலுக்கு மகுடி முன் பாம்பாக மயங்கிய மக்களும் தமிழக அரசியல் வரலாற்றின் சிறப்புகள்.

அன்றுபோல் தான் இன்றும் இருக்கிறதா? இன்று திமுக தலைவர் கருணாநிதி விளிக்கும் 'உடன் பிறப்புகளே'வும், முதல்வர் ஜெயலலிதா உரைக்கும் 'எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களே... உங்கள் அன்புச் சகோதரி பேசுகிறேன்' என்ற வார்த்தைகளும், விஜயகாந்தின் 'மக்களே'வும் இதே வலுவுடன் இருக்கிறதா என நினைத்துப் பார்த்தால் கேள்விகள் பல எழுகின்றன.

அந்தச் சம்பவம், இந்தச் சம்பவம் என கண்முன் பல சம்பவங்கள் நிழலாடுகின்றன. சில சமரசங்களும், ஒரு மேடையில் பேசியதை இன்னொரு மேடையில் அப்படியே மாற்றிப் பேசியதும் காதுக்குள் ஹார்ன் அடித்துச் செல்கின்றன. கடைநிலைத் தொண்டன் எப்போதுமே ஒரே மாதிரியாகவே இருக்க, தலைவர்கள் மற்றும் நிலை மாறும் நிலை ஏன்?

யோசனை நீள்கிறது.

SCROLL FOR NEXT