பூமியைச் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருட்களைக் கொண்டுசெல்லவும், விண்வெளி வீரர்களை அனுப்பவும் நாசாவால் பயன்படுத்தப்பட்டவை விண் ஓடங்கள் (ஸ்பேஸ் ஷட்டில்ஸ்). முதன் முதலாக, 1981-ல் விண் ஓடம் விண்ணில் ஏவப்பட்டது. சேலஞ்சர், கொலம்பியா, டிஸ்கவரி, அட்லான்டிஸ், எண்டவர் என்ற 5 விண் ஓடங்களை அமெரிக்க விண்வெளி மையமான நாசா பயன்படுத்திவந்தது.
1986-ல் ஏவப்பட்ட சேலஞ்சர் விண் கலம், புறப்பட்ட 73 வினாடிகளிலேயே விண்ணில் வெடித்துச் சிதறியது. இதில் ஏழு விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, விண் ஓடங்களை அனுப்புவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 1988-ல் இதே நாளில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக, ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து டிஸ்கவரி விண் ஓடம் ஏவப்பட்டது.
எஸ்.டி.எஸ்-26 என்று அழைக்கப்படும் இது, நாசா அனுப்பிய 26-வது விண் ஓடம். இதில் ஐந்து விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர். 4 நாட்கள், 1 மணி நேரம், 11 வினாடிகள் விண்வெளிப் பயணத்துக்குப் பின்னர், அக்டோபர் 3-ல் கலிஃபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப் படைத் தளத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது டிஸ்கவரி.
அதில் பயணம் செய்த வீரர்கள் முதல் முறையாக, அழுத்தம் தாங்கும் உடைகளை அணிந்தனர். நிலவுக்கு மனிதர்களைக் கொண்டுசென்ற புகழ்பெற்ற அப்போலோ-11 விண்கலத்துக்குப் பின்னர், முழுவதும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட முதல் குழு இதுதான். அத்துடன், மனிதக் குரலை அடையாளம் கண்டு, அதற்கேற்பச் செயல்படும் வி.சி.யூ. (வாய்ஸ் கன்ட்ரோல் யூனிட்) என்ற சாதனத்தைப் பயன்படுத்திய முதல் விண் ஓடமும் இதுதான்.