வலைஞர் பக்கம்

மாதவிடாய் ’கப்’: ஒரு பெண்ணின் அனுபவம்

இந்து குணசேகர்

மாதவிடாய் காலங்களில்  உடல் ரிதீயாகவும், மன ரீதியாகவும் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சிறிதளவு குறைக்க முயற்சி செய்து வருகின்றன.

மாதவிடாய் காலங்களில் நம் அம்மா, பாட்டிகள் துணிகளைப் பயன்படுத்தினர். அவர்களைத் தொடர்ந்து  வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க நாப்கின்கள் பயன்படுத்தும் பழக்கம் வந்தது.

ஆனால், சமீபகாலமாக நாப்கின்களால் பெண்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதுடன் இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது என்று செய்திகள் வெளிவரதற்போது நாப்கின்களுக்கும் மாற்று வந்துள்ளது. அதுதான் மாதவிடாய் ’கப்’ ... வெளிநாடுகளில் பிரபலமான இந்த மாதவிடாய்  கப்கள் சமீபகாலமாக இந்திய நடுத்தரவர்க்க குடும்பப் பெண்களுக்கு அறிமுகமாகி வருகின்றன.

எனினும் சில பெண்கள் இந்த மாதவிடாய் ’கப்’பை உபயோகிக்கத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்தத் தயக்கத்துக்கான காரணம், இந்த மாதவிடாய் ’கப்’ களை எப்படிப் பயன்படுத்துவது என்ற அறிமுகம் அவர்களில் பெரும்பாலானவருக்கும் இல்லாமல் இருக்கலாம்.

அவர்களுக்காக தனது முதல் மாதவிடாய் கப் பயன்படுத்திய அனுபவத்தைப் பற்றி பகிர்ந்த பெண் ஒருவரின் பதிவு,  ”நான் அதிகமாக நாப்கின்களைத்தான் பயன்படுத்தி வந்தேன். இருப்பினும் நாப்கின்கள் எனக்குத் திருப்தியாக இல்லை. நான் பல முறை செத்துப் பிழைத்து வந்தேன். ஒருவழியாக இதிலிருந்து மாற்று தேட வேண்டும் என்று நினைத்தேன். அதன் பிறகு எனக்கு மாதவிடாய் கப்களைப் பற்றிய விமர்சனங்கள் கிடைத்தன.

ஆனால் அதனை எவ்வாறு பொருத்துவது உள்ளிட்ட குழப்பங்கள் இருந்தன. அதனை தொடர்ந்து எனது நண்பர் ஒருவர் மாதவிடாய் ’கப்’பை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். ஒரு கப்பையும் எனக்கு வழங்கினார் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்காக வீடியோக்களையும் எனக்கு அனுப்பினார்.

இரண்டு நாட்கள் அந்த கப் என்  முன்னால் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் எனது மாதவிடாய்  நாள் வந்தது. நான் அந்தப் பாக்கெட்டைத் திறந்தேன். பின்னர்அந்த ’கப்’பை முழுமையாகக் கவனித்தேன்.

அதில் அந்த கப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்காகக் கொடுக்கப்பட்டிருந்த விளக்கங்களைப் படித்தேன். அதன் பின் வீடியோக்களைப் பார்த்தேன்.

பின்னர் அந்த ’ கப் ’பை   C  வடிவில் பொருத்தினேன். அந்த கப் எவ்வாறு வேலை செய்கிறது என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அது சிறந்த அனுபவமாக இருந்தது. பின்னர் சிறிது நேரத்துக்குப் பின்னர் அந்த கப்பின் குழாய் முனையைக் கவனமாகப் பிடித்து அதனை  வெளியே எடுத்து அந்த கப்பை சுத்தம் செய்தேன்.

இடைவெளிகளில் அந்த கப்பை சுத்தம் செய்யவும் முடியும். பின்னர் மாதவிடாய் காலம் முடிந்த பிறகு அந்த கப்பிற்காக கொடுக்கப்பட்ட பையில் அதனை மூடி வைத்து விட வேண்டும்” எனப் பகிர்ந்து கொண்டார்.

மாதவிடாய் ’கப்’பை பயன்படுத்துவதில் இன்னும் சந்தேகங்கள் இருந்தால் இவை தொடர்பாக விளக்கமளிக்கக் கூடிய ஏராளமான வீடியோக்கள் யூடியூப்பில் உள்ளன. அவற்றைக் கண்டு முழு நம்பிக்கை ஏற்பட்ட பின் பெண்கள் மாதவிடாய் ’கப்’ களைப் பயன்படுத்தலாம்.

SCROLL FOR NEXT