1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், மொத்தம் 565 பிரதேசங்கள் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தன. அவற்றில் ஹைதராபாத், மைசூர், பரோடா மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய நான்கு பிரதேசங்கள் மிகப் பெரியவை. அவற்றை இந்தியாவுடன் இணைக்கும் நடவடிக்கையில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் ஈடுபட்டார்.
இந்தியாவுடன் சேர, ஹைதராபாத் நிஜாமான உஸ்மான் அலி கான் மறுத்துவந்தார். இதையடுத்து, ஹைதராபாத் மீது ‘போலீஸ் நடவடிக்கை’ எடுக்க சர்தார் வல்லபபாய் படேல் முடிவுசெய்தார். அதன்படி, 1948 செப்டம்பர் 13-ல் ஹைதராபாத் மீது இந்தியப் படைகள் போர் தொடுத்தன. ஹைதராபாத் படையில் மொத்தம் 24,000 பேர்தான் இருந்தனர். அவர்களில் முழுமையான போர்ப் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 6,000 தான். அதேசமயம், ஹைதராபாத் படையினருடன் ரசாக்கர்களும் இணைந்து போரிட்டனர். மொத்தம் ஐந்து நாட்கள் நடந்த இந்தப் போரின் இறுதியில்,1948 செப்டம்பர் மாதம் இதே நாளில் ஹைதராபாத் சரணடைந்தது.
இதையடுத்து, இந்தியாவுடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது. மன்னர்கள் ஆண்ட பிரதேசங்கள் இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட பின்னர், மன்னர்களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அதற்கு மன்னர் மானியம் என்று பெயர். இந்த மன்னர் மானியத்தைப் பிற்காலத்தில் பிரதமர் இந்திரா காந்தி ரத்துசெய்துவிட்டார்.