வலைஞர் பக்கம்

தேசிய அறிவியல் நாள் பிப்.28 : அறிவியல் அறம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பாரம்பரியம் என்பது 5000  ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகும்.  இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் இந்தியா ஒரு மறுமலர்ச்சியைக் கண்டது.  அதன் பின்னர் அணுவியல் மற்றும் விண்வெளி அறிவியல், உயிரித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் பாதுகாப்பு முதலிய பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.  இந்தியா விடுதலை அடைந்தபோது, அதன் மரபுரிமைச் சொத்தாக சிதறுண்ட பொருளாதாரமே இருந்தது.   அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான கட்டமைப்பு வசதிகள் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை; தொழில் துறைக்கு உறுதியான அடித்தளம் கிடையாது; விவசாய உற்பத்தி என்பது மிக மோசமான நிலையில் இருந்தது;  கிட்டத்தட்ட சுகாதாரத்துறை என்பது இல்லாமலே இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட உணவு தானியங்களைக் கொண்டே மக்கள் தங்கள் பசியைப் போக்கினர். 

கடும் பஞ்சங்களும், வறட்சியும் ஏற்பட்டன.  ஆனால், இந்தத் தடைகளை எல்லாம் எதிர்த்துப் போராடி அலையைப்போல ஆர்ப்பரித்து எழுந்து அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் இந்தியா வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்துள்ளது.  இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு அறிவியலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அறிவியல் மட்டுமே  பசி  மற்றும் வறுமைக்கான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் எனவும்,  சுகாதாரக் கேடுகள், கல்வியறிவின்மை, மூட நம்பிக்கைகள் மற்றும் அழிந்து வரும் பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அறிவியலால் மட்டுமே முடியும் என்று மிகுந்த நம்பிக்கையோடு அறிவித்துள்ளார். அவரது தலைமையின் கீழ் இயங்கிய அரசு எண்ணற்ற சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உருவாக்கியது.

பசுமைப் புரட்சி, கல்வி மேம்பாடு, நூற்றுக்கணக்கான அறிவியல் ஆய்வகங்கள் ஏற்படுத்துதல், தொழில்துறை மற்றும் ராணுவம் தொடர்பான ஆய்வுகள், பெரிய அளவிலான நீர் சக்தித் திட்டங்கள் மற்றும் விண்வெளியின் அனைத்து எல்லைகளிலும் காலடி வைப்பது போன்ற அனைத்து முயற்சிகளுக்கும் உயர்தரத் தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொள்ள இந்த ஆரம்ப கால முடிவுகளிலிருந்தே உருவாக்கப்பட்டன.  இந்தியா சுதந்திரம் பெற்றபோது அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை இன்று பல ஆயிரம் கோடிகளாக உயர்ந்துள்ளது. 

உலக அளவில் தொழில்நுட்பச் செயல்பாடுகளுக்காக அதிக அளவில்  முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளுக்கிடையே இந்தியா மூன்றாம் இடத்தை வகிக்கிறது.  அறிவியல் தொழில் நுட்பம் என்பது எந்த ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், அதன் மக்களை அறிவியல் சார்ந்தவர்களாக ஆக்குவதற்கும் ஓர் உறுதியான முன்னுரிமைத் துறையாகும். பொருளாதார வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய அம்சம் என்பதை நன்கு உணர்ந்ததால்தான், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் மீது ஒரு சிறப்புக் கவனத்தை நவீன இந்தியா கொண்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையை சமூக-பொருளாதார வளர்ச்சியின் ஒரு முழுமையான அங்கமாக அமையும்போது அது அந்த நாட்டின் பெரும் வளர்ச்சிக்கு மூளையாக அமைகிறது. சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் மூலம் நாட்டின் திறமையை மேம்படுத்துவதற்கு இவை ஒன்றே வழியாகும் என்று இன்றைய நிலையில் அதிகமாக உணரப்பட்டுள்ளது.

அறிவியல் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக புதிய நிறுவனங்களை ஏற்படுத்துதல்  சீர்மிகு  மையங்கள் உருவாக்குதல், கல்வி நிறுவனங்கள் மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்கள் ஆகியவற்றில் உரிய வசதிகளை ஏற்படுத்துதல், இன்ஸ்பயர் முதலிய புதிய மற்றும் கவர்ச்சிகரமான ஆய்வறிஞர்களுக்கான நிதியுதவித் திட்டங்களை உருவாக்குதல், பல்கலைக்கழகங்களில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், அரசு தனியார் துறைகள் பங்கேற்கும் ஆய்வு மற்றும் மேம்பாட்டுக்கான பங்காளர்களை ஊக்கப்படுத்துதல், தலைசிறந்த ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தேசிய விருதுகள் வழங்குதல் முதலியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும். 

இந்தியாவை “உலகில் ஒரு மிகப்பெரிய அறிவியல் அதிகாரம்” கொண்ட நாடாக உருவாக்குவதற்கு பல்வேறு முன் முயற்சிகள் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்.  இந்தியப் பொருளாதார அமைப்பு முறையைப் புதிதாக மாற்றியமைப்பதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முன்னணி இடத்தில் இருப்பது ஒரு நல்ல அறிகுறியாகும்; இதன்மூலம்  நாட்டிற்கு உதவுவது என்பது, வளர்ந்து வரும் நாடுகளுக்கிடையே அறிவியல் தொழில்-நுட்பத் துறையில் உலகளவில் உள்ள போட்டிகளைச் சமாளிக்கக் கூடிய அதிகார மையமாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகின் மூன்றாவது பெரிய அறிவியல் மனித ஆற்றலைக் கொண்டுள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை உலகின் சராசாரி அளவுக்கு மேல் நன்றாக வளர்ந்து வருகிறது.  நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் 100 கோடி டாலர் அளவுக்கு மேல் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை ஏற்படுத்துவதற்கு மொத்தமாக முதலீடு செய்துள்ளன. 160க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் ஆயிரக்கணக்கான முனைவர் பட்டங்களையும் 5க்கும்  அதிகமான பட்ட மேற்படிப்புப் பட்டங்களையும் வழங்குகின்றன.  அதே வேளையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் (கவுன்சில்) நாற்பதுக்கும் அதிகமான ஆய்வுக் கூடங்களையும் நிர்வகித்து வருகிறது.  இந்த ஆய்வகங்கள் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டில் சில குறிப்பிடத்தக்க சாதனைகளையும் செய்துள்ளன.

அறிவியலுக்கான தரம் மற்றும் எண்ணிக்கைக்கான எழுத்துப் பூர்வக் குறியீடு (SCI) அமைப்பால் அளவிடப்பட்ட ஆய்வு அறிக்கைகள் மூலம் தெரியவருவது என்னவென்றால் கடந்த மூன்றாண்டுகளில்  8 சதவிகிதம் என்ற அளவில் வளர்ந்து வருகிறது.  உலகின் சராசரி அளவு வெறும் 4 சதவிகிதம் மட்டுமே.  மேலும் தொழில்நுட்பப் பணித் திறமையும் ஒரு விரைவான பிடிப்புடன் வேகமாக வளர்ந்து வருகிறது; இதன் மூலம் நமது நாட்டினுடைய வேலை திறன் பல லட்சம் புள்ளிகளை அடைந்து அது நமது மனித வளத்தை மேன்மைபடுத்தியுள்ளது.   இருப்பினும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான செயல்திறன் மிக்க கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

வேளாண்மை, தொழில் மற்றும் சேவைத்துறைகள் ஆகியவற்றின் பொருளாதாரத் திட்டமிடுதலுக்கான முக்கிய இடத்திற்கு இது கொண்டுவரப்பட்டுள்ளது. சமூகத்தின் நன்மைக்காகவும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைவதற்காகவுமே நாட்டின் வளங்கள் வழக்கமாகப் பெறப்படுவது என்பது அதன் மூலம் அதிகபட்சம் விளைவைப் பெறுவதற்காகவே.   அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான சுமார் 85 சதவிகித நிதியுதவிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசிடம் இருந்துதான் வருகிறது.  நாட்டிலுள்ள அறிவியல் தொழில் நுட்பக் கட்டமைப்புகள், நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியின் (GDP) அளவில் ஒரு சதவிகிதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.

அறிவியல் -தொழில்நுட்பத்துறையைப் போலவே இந்தியா ஒரு புதிய பாதையில் (எல்லையில்) அடி எடுத்துவைத்துள்ளது;  அணுவியல் ஆற்றல், அணுவியல் அறிவியல்துறை முதலியவற்றில் எண்ணற்ற தீவிர அறிவியல் செயல்பாட்டுத் துறைகளில்  உலகத்தரத்திலான பல சிறப்புமிக்க சாதனைகளை இந்தியா நிகழ்த்திக் காட்டியது இதற்குச் சான்றாகும். மேலும், அணு ஆயுதங்களைத் தயாரித்தலுக்குத் தேவையான திறமை தன்னிடம் உள்ளது என்பதையும் அது மேம்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி அணு ஆற்றல் உற்பத்தி செய்தல், அணுவியல் அறிவியலை மருத்துவத்துறையில் பயன்படுத்துவதையும் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்கான வசதிகளையும் அது மேம்படுத்தியுள்ளது. தனது சொந்த செயற்கைக்கோள் தொடர்புமுறைகளை வெற்றிகரமாக வடிவமைத்து உருவாக்கியதுடன் அதை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது, மற்றும் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கிய மேம்பாட்டை ஏற்படுத்தியதிலும் இந்தியா தனது ஆற்றலை மெய்ப்பித்துள்ளது. 

ஏவுகணைத் தொழில்நுட்பத்துறையில் உலகில் முன்னிலையிலுள்ள முதல் ஐந்து நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது சிறப்பானதாகும். இதற்காக பல அறிவியல் அறிஞர்களான, குறிப்பாக தமிழ் மக்களுக்குப் பெருமை சேர்த்த மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், எம்.என். சாஹா, சர்.சி.வி.ராமன், பீர்பால் சவிஹானி, ஜே.சி. போஸ், மஹலானோபிஸ், எஸ்.என்.போஸ், பி.சி. ரோ, ஹெச்.ஜே. பாமா, எம்.எஸ். சாமிநாதன் மற்றும் எஸ். ராமனுஜன் போன்ற புகழ்பெற்ற அறிவியல் அறிஞர்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் தங்கள் சாதனைகளால்  ஈர்த்துள்ளனர்.  அறிவியல் ஆய்வுத் துறையில் உலகில் மிகச் சிறந்து விளங்கும் நாடுகளுள் ஒன்றாக இருப்பதுடன் விண்வெளி ஆய்வுத் துறையில் உலகில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஐந்து நாடுகளுள் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது. 

செயற்கைக்கோள்களை நிலவுக்கு அனுப்பும் திட்டங்கள் மற்றம் புகழ்பெற்ற பி.எஸ்.எல்.வி. (PSLV) ராக்கெட் ஏவுதல் திட்டம் முதலிய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களையும் இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகள் பயன்படுத்திக்கொள்வதற்காகத் தனது விண்வெளி ஆய்வு தொடர்பான வசதிகளை வழங்குவதன் மூலம் வருவாயைப் பெருக்குவதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது;  அத்துடன் மிகவிரைவில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பில்  (SAARC) இடம் பெற்றுள்ள நாடுகளுக்குச் செயற்கைக் கோள்களைச் செலுத்தும் பணிகளிலும் இந்தியா முன்னணிப் பங்கு வகிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

மென்பொருள் வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்தியாவின் பலம் அனைவரும் நன்கு அறிந்ததே.  நம் நாட்டின்  பொருளாதார வளத்தை மேம்படுத்துவதற்கு உலக அளவில் தகவல் தொழில் நுட்ப வியாபாரத் திட்டங்களைக் கொண்டு வருவதற்கு இது ஒரு முடுக்கிவிடும் ஆற்றலாக  உருவெடுத்துள்ளது.  ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைகளுக்குச் செலவழிக்கப்படும் நிதியில்  பாதியளவு இந்தத் துறைகளிலிருந்தே பெறப்படுகிறது. இந்த முதலீடுகளிலிருந்து நிதியாதாரங்களைத் திரட்டுவதுடன், தொழில் நுணுக்கங்களை வளர்ப்பதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்;  அத்துடன் இத்தகைய ஆய்வு மையங்கள் மற்றும் பெருமளவிலான தொழில் நிறுவனங்களுக்கும் இடையே தொழில் நுட்பத்தை மாறுதல் செய்வதை ஊக்கப்படுத்துவதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.

ஒவ்வொரு  இந்திய குடிமகனும் பின்வரும் குறிக்கோள்களை அடைவதற்கு ஓரடி முன்னோக்கி எடுத்து வைத்தால், இன்னும் பல ஆண்டுகளில் இந்தியா உண்மையிலேயே அறிவியல் துறையில் மிகுந்த ஆற்றல் பெற்று வளர்ந்த நாடாக மாபெரும் சிறப்பு பெறும்.

 • பள்ளி மற்றும் கல்லூரி அளவில் அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் பற்றிக் கற்பிப்பதையும் செயல் முறைபடுத்துவதையும் மேம்படுத்துதல்.

• அறிவியல் தொழில் நுட்பச் செயல்பாடுகளில் நாட்டு மக்களின் அனைத்துப் பிரிவினரையும் பங்கேற்குமாறு  ஊக்கப்படுத்துதல்.

• மிகச் சிறப்பான தன்னாட்சி  அந்தஸ்துடனும், மிகுந்த பொறுப்புடனும் கல்வி நிறுவனங்களும், அறிவியல் தொழில் நுட்ப நிறுவனங்களும் செயல்படுவதை உறுதி செய்தல்.

• மிகப் பரந்த அளவில் காணப்படுவதும்,  தற்போதுள்ள அறிவு ஆகியவற்றுடன் அறிவியல் கற்பிப்பதையும் செயல்முறைப்படுத்துவதையும் ஒருங்கிணைத்தல்.

 • நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைச் சாமானிய மக்களுக்கு கிடைக்கும்படியாக செயல் வடிவம் ஆக்குதல் வேண்டும்.  அப்போதுதான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் விரைவான முன்னேற்றம் ஏற்படும்.

• ஆய்வு மற்றும் மேம்பாடு தொழில்துறை ஆகியவற்றில் உயர்ந்த அளவில் புதுமையான முயற்சிகளை ஊக்கப்படுத்துதல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தின் அனைத்துத் துறைகளிலும் தனியார் பொதுத்துறைக் கூட்டு முயற்சியை மேம்படுத்துதல்.

• இந்தியாவின் உலக அளவிலான போட்டி மனப்பான்மையுள்ள ஆற்றலை மேம்படுத்தும் பொருட்டு தேசியச் செயல்பாடுகளின்  அனைத்துச் செயல் எல்லைகளிலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை ஒருங்கிணைத்தல்.

 • தேசியப் பேரழிவுகள், குறிப்பாக  நிலநடுக்கங்கள், வெள்ளப் பெருக்குகள், புயல்கள் மற்றும் வறட்சி ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்காக அறிவியல் தொழில் நுட்பத்தின் முழு ஆற்றலையும் பயன்படுத்துவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளுதல்.

 • சர்வதேசக் கூட்டுறவு மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு அறிவியல் தொழில் நுட்பத்தை ஒரு ஊர்தியாகப் பயன்படுத்துதல்.

மேலும், பொதுநலக் கொள்கைகளுக்காக பொருள் சார்ந்த மற்றும் அறிவுசார் வளங்களை ஒன்றுதிரட்டுதல் மற்றும் பகிர்ந்தளித்தலை மேம்படுத்துதல். செயல்பாட்டளவில் தேசியச் செயல்பாட்டின் அனைத்து எல்லைகளையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்க இந்தியா திட்டமிடுகிறது.

மேலும் வறுமை ஒழிப்பு மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை முடுக்கிவிட்டுப் பெருக்குவதற்கும் இந்தியா திட்டமிடுகிறது.   ஒரு தனிமனிதர் உயிரோடு இருப்பதற்கும், ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கும் அறிவியலைக் குறைந்தபட்சமாவது புரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும்.  இது அறிவியல் மனநிலை என்று அழைக்கப்படுகிறது.

நமது அன்றாட வாழ்வின் அனைத்துச் செயல்பாடுகளிலும் அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள் தங்களது இருப்பை மக்கள் உணரும்படி செய்துள்ளன.  எனவே அனைத்து மக்களாலும் பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் அறிவியல் தேவைப்படுகிறது.  அன்றாடம் செய்து முடிக்க வேண்டிய பணிப்பொறுப்புகளை வெற்றிகரமாகச் செய்வதற்கு மட்டுமல்லாது திறமையை மேம்படுத்துவதற்கும் அவசியமாகிறது. 

எப்பொழுது ஒரு புதிய கண்டுபிடிப்பு நாம் செயல்படும் முறையை மாற்றுகிறதோ அப்போது புதுமை நிகழ்கிறது.  அறிவியல் தொழில்நுட்பம் மனித சமுதாயத்தைப் புதுமையான செயல்பாடுகளால்தான் நகர்த்துகின்றன. இதுவே ஒரு கண்டுபிடிப்பாளர் (அறிவியலாளர்) பெறக்கூடிய  மிக உயர்ந்த விருதாகும். நமது கற்பனைத்திறன்,  அறிவு மற்றும் உற்சாகம் ஆகியவற்றை மிகச் சரியாக  பயன்படுத்துவதன் மூலம் ஒரு புதிய பாதையில் செல்லும் கண்டுபிடிப்பாளர்களில் ஓர் அங்கமாக இணைவதுடன், இந்த உலகை மனித குலம் வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக கட்டமைத்திட முடியும்.  இதுவே இன்றைய மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் அளிக்கும் சிறந்த பங்களிப்பாக இருக்கும்.

முனைவர் ச. வின்சென்ட், மேனாள் உறுப்பினர்  செயலர்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம்.

ஆராய்ச்சித் துறைத் தலைவர்,

லயோலா கல்லூரி

தொடர்புக்கு: svincentloyola@gmail.com

SCROLL FOR NEXT