"ஓடியாடி விளையாடுங்கள்", "வியர்வை சிந்த உழையுங்கள்", "கூகுள் அறிவை வளர்க்காது", "தேவையில்லாதபோது மின்விசிறியை அணைத்துவிடுங்கள்", "அரசியல் ஒரு தொழில் அல்ல, அது ஒரு சேவை", "ஒரு மாணவி கல்வி கற்றால் இரண்டு குடும்பங்கள் கல்வியறிவு பெறும்..."
இவ்வாறாக... பள்ளி மாணவர்கள் உடனான கலந்துரையாடலில், பிரதமர் நரேந்திர மோடி உதிர்த்த முத்துகள் ஏராளம். ஆனால், இந்த கலந்துரையாடல் முழுவதிலுமே பிரதமர் மோடி இந்தியில் மட்டுமே பேசியதால், இந்தி பேசாத மாநில மாணவர்களில் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லி மானெக்சா அரங்கத்தில் 100 மாணவர்கள் மத்தியில் இன்று மோடி பேசினார். அவரின் உரை நாடு முழுவதும் 18 லட்சம் அரசு, தனியார் பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, இந்தியாவின் பள்ளிக் கல்வி வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமும் தனித்துவமும் வாய்ந்தது.
இந்த பிரம்மாண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியை காத்திருத்து பார்த்த மாணவர்களில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், மணிப்பூர், அஸ்ஸாம் முதலான வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
இந்தி பேசாத இம்மாநிலங்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு அம்மொழி தெரியாது. ஆனால், சுமார் 2 மணி நேரத்துக்கு நீடித்த இந்தக் கலந்துரையாடல் முழுவதிலுமே பிரதமர் மோடி இந்தியில் மட்டுமே பேசினார். இந்த நேரலை ஒளிபரப்பில், ஆங்கிலத்திலோ அல்லது மாநில மொழிகளிலோ நிகழ்நேர மொழிபெயர்ப்பு வசதிகள் செய்யப்படவில்லை.
மோடி வெறும் உரையாற்றவில்லை. மாணவர்களுடன் கலந்துரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். ஆனால், தென்னிந்தியாவில் இருந்து பள்ளி மாணவர்களில் சிலர் தங்களுக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் கேள்விகளை கேட்டனர். அதற்குக்கூட ஆங்கிலத்தில் பதில் அளிப்பதைத் தவிர்த்துவிட்டு, அந்தக் கேள்விகளுக்கும் இந்தியிலேயே பதில் அளித்தார் மோடி. அவ்வாறு ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவருக்கு மோடி என்ன பதிலளித்தார் என்பதை, மறுநாள் நாளிதழ் பார்த்தோ அல்லது இந்தி தெரிந்த ஆசிரியர்கள், உறவினர்கள் மூலம்தான் அந்த மாணவர்களுக்குத் தெரிந்துகொள்ள முடியும் நிலை.
ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், மாணவர்கள் உடனான மோடியின் கலந்துரையாடல் நிகழ்வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேவேளையில், இந்தியில் மட்டுமே பேசி, பல லட்சம் மாணவர்களுக்கு புரியாமல் போய்விட்டதால், அவர்களுக்கு பயனளிக்கவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக, மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட இந்தி பேசாத மாநில பள்ளிகளில், மாணவர்கள் 2 மணி நேரம் சிரமப்பட்டு அமர்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
இந்தக் கலந்துரையாடலில், 'பிரதமர் ஆவது எப்படி?' என்று ஒரு மாணவர் கேள்வி கேட்டார். அதற்கு, பள்ளிக் குழந்தைகளுக்குப் புரியும்படி மிகச் சிறப்பாக பதிலளித்தார் மோடி. ஆனால், இந்தக் கலந்துரையாடலின் முடிவில், பிரதமர் ஆக வேண்டும் என்றால், நமக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற செய்தியை அவர் மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என்பதையே உணர்கிறேன்.
சிரவணன், தொடர்புக்கு siravanan@gmail.com