இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் தங்கள் அன்பை பல்வேறு வகைகளில் வெளிபடுத்தி வருகின்றனர்.
இந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமான அல் ஜசிரா உலகம் முழுவதும் நிகழ்ந்த ஒன்று சேர்ந்த காதலையும், இழந்த காதலையும் இணைத்து ஆவணப்படத் தொகுப்பை ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. இதில் லெபனான், ஜப்பான், மெக்சிகோ, சைஃப்ரஸ், நார்வே, கோமோராஸ், இந்தியா ஆகிய நாடுகளில் நடந்த காதல் சம்பவங்கள் இடப்பெற்றுள்ளன.
இதில் இந்தியாவின் மறுக்கப்பட்ட காதல் என்ற பெயரில் உடுமலைபேட்டை சங்கர் கவுசல்யா ஆகியோரது ஆவணத் தொகுப்பு இடப்பெற்றுள்ளது.
சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கணவர் சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் கவுசல்யா கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.