முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தவரும், அவசரநிலை காலகட்டத்தை எதிர்த்து கடுமையாகப் போராடியவருமான மூத்த அரசியல்வாதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக் குறைவால் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 88.
1930ம் ஆண்டில் மங்களூருவில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் 1946-ம் ஆண்டு கத்தோலிக்க மதபோதகராக பயிற்சி எடுத்துக் கொள்ள அனுப்பப்பட்டார். ஆனால் இவர் பூசாரி லட்சியத்தைக் கைவிட்டு நலிந்தோருக்கான தொழிற்சங்கத் தலைவர் பொறுப்பை ஏற்றார். சம்யுகத் சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் 1967 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சக்தி வாய்ந்த வேட்பாளர், தலைவர் எஸ்.கே.பாட்டீலை தெற்கு மும்பை பகுதியில் தோற்கடித்து ஜெயண்ட் கில்லர் என்ற பெயர் பெற்றார்.
1975-ல் ரயில்வேயின் மிகப்பெரிய ஸ்ட்ரைக்கை ஜார்ஜ் பெர்னாண்டஸ்தான் ஏற்பாடு செய்து நடத்தினார். தீவிர காங்கிரஸ் எதிர்ப்பாளர் ஆவார்.
எமெர்ஜென்சிக்குப் பிறகான தேர்தலில் மொரார்ஜி தலைமை ஜனதா கட்சி அரசில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழிற்துறை அமைச்சராகப் பணியாற்றினார். கோககோலா நிறுவனத்தை இந்தியாவிலிருந்து வெளியேற்றியவர் என்பதாக இவர் அறியப்படுகிறார்.
ஆனால் ஒருவிதத்தில் இந்திரா காந்தி தலைமை காங்கிரஸ் அரசு அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டு சட்டமான ஃபெராவைக் கொண்டு வந்து இந்திய அன்னியச் செலாவணி ரிசர்வை பாதுகாக்க முயற்சி செய்த காலக்கட்டம்.
ஃபெரா சட்டம் வருவதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் கிளை நிறுவனங்கள் முழுதும் அதன் அயல்நாட்டு தாய் நிறுவனத்தின் உரிமையிலேயே இங்கு வர்த்தகம் செய்து வந்தது. இந்தியாவில் சம்பாதிக்கும் லாபங்களை வெளிநாட்டுக்கு எளிதாகக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். இதனால் இந்தியப் பொருளாதாரம் பின்னடைவு கண்டது. அதாவது லாபங்களை மீண்டும் இந்தியாவில் அவர்கள் முதலீடு செய்வதில்லை. இதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பலவீனமான அன்னியச் செலாவணி ரிசர்வ்களும் மேலும் பலவீனமடையத் தொடங்கின. இந்தியாவிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு தங்கள் லாபங்கள் வருவாய்களைக் கொண்டு சென்ற போது அதனை தங்கள் நாட்டு பணமாக மாற்றி எடுத்துச் செல்வார்கள், இதனால் இந்திய அன்னியச் செலாவணி ரிசர்வ் குறைய ஆரம்பித்தது.
இந்நிலையில் ஃபெரா சட்டம் என்ன ஒழுங்குமுறையைக் கொண்டு வந்ததெனில் குறிப்பாக நுகர்வோர் பொருட்களில் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கும் கிளை நிறுவனங்களில் தங்கள் பங்கினை 40% ஆகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. அதாவது உள்நாட்டு பங்குதாரர்களுக்கு பங்குகளை விற்பதன் மூலமே பன்னாட்டு நிறுவனங்கள் இதனைச் செய்ய முடியும். உயர் தொழில் நுட்ப நிறுவனங்களான கணினி ஹார்டுவேர் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அதிகம் வைத்திருக்கலாம்.
ஆனால் இந்த விதிமுறையை ஏற்காத கோககோலா நிறுவனம் தங்களை உயர் தொழில்நுட்ப நிறுவனம் என்றும் கோககோலா உள்பொருட்கள் என்பது மிகமிக ரகசியமானது ஃபெரா சட்டம் தங்கள் ரகசியத்தை காக்க உதவாது என்று கோககோலா நினைத்தது, ஆனால் இது அரசு தரப்பினரை ஆட்டி அசைக்கவில்லை. தங்களிடம் முழு கட்டுப்பாடு இல்லையெனில் தங்கள் ஃபார்முலாவை இன்னொரு நிறுவனத்துடன் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று கோககோலா நினைத்தது. இதனையடுத்து 2 நிறுவனங்களை நடத்த கோககோலா முயன்றதாகக் கூறப்படுவதுண்டு, ஒன்று அதன் குளிர்பான பாட்டில் நிரப்பும் தொழிற்சாலை இன்னொரு நிறுவனம் அதன் பார்முலாவை பாதுகாக்கும் கான்செண்ட்ரேட் தயாரிக்கும் நிறுவனம். இது தொழில்நுட்பப் பிரிவு என்று முயற்சி செய்தது. இதில் தொழில்நுட்பப் பிரிவ்ல் 100% பங்கினை தங்களிடம் வைத்துக் கொள்ள கோககோலா முடிவெடுத்தது, ஆனால் மத்திய ரிசர்வ் வங்கி ஃபெரா சட்டத்தின் கீழ் இதனை அனுமதிக்க முடியாது என்று கைவிரித்தது. இதனையடுத்து 40% பங்கினை இந்தியாவில் வைத்திருக்க வேண்டும் என்ற முடிவை ஏற்காத கோககோலா மூட்டையைக் கட்டியது.
அப்போது தொழிற்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் “பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை எங்கள் கொள்கை ஒருபடித்தானது. இந்தியாவில் தொழில் செய்ய வேண்டுமெனில் இந்த மண்ணின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டால்தான் முடியும்” என்று கூறியதை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மேற்கோள் காட்டியதாகக் கூறப்படுவதுண்டு.
கோககோலா இந்தியாவை விட்டு வெளியேறியதில் பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோனது, இதனையடுத்து டபுள் செவன் என்ற புதிய குளிர்பானத்தை உற்பத்தி செய நடவடிக்கை மேற்கொண்டார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். ஆனால் இந்த முயற்சி நீண்ட நாள் பலன் தரவில்லை.
இன்று தாராளமயப் பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு பெற்றுக்கொண்டிருக்கும் அதிசலுகைகள், அதனை ஊக்குவிக்கும் அரசாங்கங்களுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் நினைவில் இருப்பது அவசியம்