புத்தருடையவை போதனைகள் அல்ல!
பெற்றவர்களைப் பிள்ளைகள் போற்ற வேண்டும் என்கிற கருத்தை தனது வாழ்வின் எல்லா பக்கங்களிலும் ஆழமாகப் பதிவு செய்கிறார் புத்தர். அதுமட்டுமல்ல பிள்ளைகளும் தங்களை பெற்றெடுத்த தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய கடமைகளையும், பொறுப்புகளையும் ஆழமாக வலியுறுத்துகிறார். புத்தர் தன் வாழ்நாளில் ஏராளமான நல்ல அறச் சிந்தனைகளைச் சொல்லியிருக்கிறார். இவற்றை எல்லாம் பின்னாளில் தொகுத்தளித்தவர்கள் அவற்றை ‘புத்தரின் போதனைகள்’ என்றனர்.
ஆனால், உண்மையில் புத்தர் தன்னுடைய எந்தக் கருத்துகளை யும் போதிக்கும் தன்மையில் பிறருக்குச் சொல்லவில்லை. அவரது நற்சிந்தனைகளாகத்தான் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். 'போதனைகள்' என்று அவற்றுக்கு புனித முகமூடி போடுவதை புத்தர் விரும்பியதே இல்லை.
அப்படி தனது கருத்துகளை, பின்னாட்களில் புனிதக் கருத்துகளாக சொல்லிவிடக்கூடும் என்பதற்காகவே, முன்கூட்டியே ''என்னுடைய கருத்துகள் எல்லாம் போதனைகள் அல்ல; உங்களுக்கான வழிகாட்டி வார்த்தைகளும் அல்ல. இவை எல்லாம் ஒரு பாதை என்கிற அளவில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விரும்பியவர்கள் மட்டும் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். அதுவும் அதை அவர்கள் விரும்பி நற்பாதை என நம்பினால் மட்டும்தான். நம்பிக்கை கொள்ளாதவர்கள் ஏற்க வேண்டும் என்கிற கட்டாயம் துளியும் இல்லை. எனவே என்னுடைய கருத்துகளுக்கு மகா தன்மையை, அடைமொழியை, புகழ்ச்சியைக் கொண்டு நிழற்குடை பிடிக்க வேண்டாம்'' என்று சொன்னார் புத்தர்.
ஒரு குழந்தை வளர்ந்து பருவ வயதை அடைந்து, வளர்ச்சி பெற்ற மனிதனாக உருமாற்றம் கொள்கிறபோது அந்த மனிதனுக்கு பெற்றோர் முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்கிற புத்தர், அதே சமயம் அவர்களைக் கண்காணிக்கிற பொறுப்பில் இருந்தும் நழுவிவிடக் கூடாது என்றும் கருத்துரைக் கிறார்.
தங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிற பெற்றோருக்கு பிள்ளைகள் கைமாறாக நன்றியுடன் இருக்க வேண்டும் என்கிற கருத்தை விதைக்கவில்லை புத்தர். அதற்கு மாறாக பிள்ளைகள் பெற்றோருக்கு மதிப்பளிப்பதை தங்கள் அன்பின் கடமையாகக் கொள்ள வேண்டும் என்கிறார். பிள்ளைகளிடம் பெற்றவர்களோ, பெற்றவர்களிடம் இருந்து பிள்ளைகளோ கைமாறு மற்றும் எதிர்பார்ப்பின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பது, அன்பு செலுத்துவது கூடாது என்பதையும் கவ னப்படுத்துகிறார்.
புத்தர் கனவாடா ஆற்றுப்படுகையில் அமர்ந்திருந்தார்.
சுற்றிலும் வளர்ந்திருந்த கோரைப் புற்களை அங்குள்ள பழங்குடி மக்கள் பறித்துச் சென்று கொண்டிருந்தனர். அக்காட்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த புத்தரின் கண்களில் இன்னொரு காட்சி விரிந்தது.
ஆற்றுப்படுகையின் கீழே சமவெளிப் பகுதியில் ஒரு இளைஞன் நான்கு திசைகளைப் பார்த்து வணங்கிக் கொண்டிருந்தான். திரும்பத் திரும்ப அந்த வணங்குதலை அவன் தொடர்ந்து செய்து முடித்தபோது ஒரு மணிநேரமாவது ஆகியிருக்கும். அவ்வாறு நான்கு திசைகளையும் வணங்கிவிட்டு கனவாடா ஆற்றில் முக்கி முக்கி குளித்தெழுந்தான்.
அப்படி அவன் செய்வதையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த புத்தர், அந்த இளைஞன் குளித்து முடித்து கரைக்குத் திரும்பியவுடன்... அவனைத் தன்னருகே அழைத்தார். அவனிடத் தில் ''ஏனப்பா இப்படி நான்கு திசைகளையும் இப்படி வணங்கித் தொழுகிறாய்... இது என்ன இந்தப் பகுதியின் மரபார்ந்த வழக்கமா?'' என்று வினவினார்.
அதற்கு அந்த இளைஞன் சொன்னான்:
''இப்படி திசைகளை நாள்தோறும் வணங்க வேண்டும் என்று எனது பெற்றோர் என்னைச் சிறு வயதில் இருந்து வழக்கப்படுத்தியுள்ளனர். அதனால் நானும் தொடர்ந்து இச்செயலை தொடர்ந்து செய்து வருகிறேன்!’’ என்றான்.
''சரி... இளைஞனே! இந்தச் செயலை ஏன் செய்ய வேண்டும் என்று உனது பெற்றோர் உனக்குச் சொல்லியிருக்கிறார்களா?’’ என்று கேட்டார் புத்தர்.
''இல்லை ஒருநாளும் சொன்னது இல்லை!’’ என்றான்.
''சரி... அவர்கள்தான் இதற்கு காரணத்தைச் சொல்லவில்லை; நீயாவது ஏன் இதனை இப்படி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறாயா?’’ என்று வினவினார் புத்தர்.
''இல்லை... கேட்க வேண்டும் என்று ஒருபோதும் எனக்குத் தோன்றியதே இல்லை. ஏனெனில், அவர்கள் எனது பெற்றோர். அவர்கள் சொல்வது என் மீதான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே, அவர்களுடைய நம்பிக்கையை நான் தகர்க்க விரும்பியதில்லை!’’ என்றான்.
அந்த இளைஞனிடத்தில் புத்தர் சொன்னார்:
''நீ பெற்றவர்களுக்கு அளிக்கும் மதிப்பை மெச்சுகிறேன். வாழ்க. அதே சமயம் எந்த ஒரு செயலுக்கும் காரணத்தைத் தெரிந்து கொள்வது எப்படி நம்பிக்கைத் தகர்ப்பாக இருக்க முடியும்? காரணத்தின் அடிப்படையில் ஒரு செயலைத் தெரிந்துகொண்டு மேற்கொள்வது ஒன்றும் இழிவல்ல. அதனைப் பெற்றோரை அவமதிப்பதாகவும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
இளைஞனே... இப்போது சொல்கிறேன் கேள். உனது பெற்றோர் உனக்கு நல்லதொரு பழக்கத்தைதான் கற்றுத் தந்திருக்கிறார்கள். நான்கு திசைகளையும் வணங்கினாய் அல்லவா? அதற்கு மேலான ஒரு காரணம் உள்ளது. கிழக்கு திசையை நீ வணங்குவது தாயை வணங்குவதற்குச் சமம். மேற்கு திசையை வணங்குவது தந்தையை வணங்குவதற்குச் சமம்.
மூன்றாவதாக தெற்கு திசையை வணங்குவது உனது ஆசிரியரை வணங்குவதற்குச் சமம். நான்காவதாக நீ வடக்கு திசையை வணங்குவது என்பது...’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அந்த இளைஞன் இடைமறித்து, ''நான் சொல்கிறேன்... வடக்குத் திசையை வணங்குவது என்பது கடவுளை வணங்குவதற்குச் சமம்.’’ என்றான்.
அந்த இளைஞனைப் பார்த்து மெல்லிய புன்னகையைப் படர விட்ட புத்தர் சொன்னார்:
''நான்காவதாக வடக்குத் திசையைப் பார்த்து நீ வணங்குவது என்பது கடவுளை வணங்குவது என்பதாகாது. உன் மனைவியை வணங்குவதற்குச் சமம்’’ என்றார்.
புத்தர் இப்படிச் சொன்னதும் அந்த இளைஞன் விக்கித்து நின்றான்.
அவன் அப்படி நிற்பதைக் கண்ட புத்தர், அவனிடத்தில் சொன்னார்:
''உறவுகளின் மேன்மையை வலியுறுத்தவும், உறவுகளுக்கு இடையே அழுத்தமான மதிப்பீட்டை உருவாக்குவதற்காகவே உனது பெற்றோர் அந்த நான்கு திசைகளையும் வணங்கச் சொல்லியிருக்கிறார்கள்!’’ என்றார்.
- இன்னும் நடப்போம்...
மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in