ஜப்பானின் டொகைமுரா அணு மின்உலையில், 1997-ல் அணுக் கசிவு விபத்து நிகழ்ந்தது. டொகைமுராவின் டொனென் உலையில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 40 தொழிலாளர்கள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். 1999-ல் இதே நாளில், டொகைமுராவின் ஜே.சி.ஓ. உலையில், இதே நாளில் ஏற்பட்ட விபத்துதான் மோசமானது. எத்தனையோ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் இந்த அசம்பாவிதத்துக்குக் காரணமாக அமைந்தது மனிதத் தவறுதான்.
டோக்கியோ நகரிலிருந்து 140 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டிருந்த இந்த டொகைமுரா அணு மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம், சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. சம்பவம் நடந்த அன்று, திரவ வடிவிலான யுரேனியத்தைக் கொள்கலனில் நிரப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள். 5 பவுண்டு யுரேனியத்துக்குப் பதிலாக, தவறுதலாக 35 பவுண்டு யுரேனியத்தை அவர்கள் நிரப்பிவிட்டனர். இதையடுத்து ஏற்பட்ட வேதியியல் தொடர்வினைகளின் முடிவில் அணுக்கதிர்கள் வெளியேறத் தொடங்கின. உடனடியாக, ஒருவர் மயக்கமடைந்தார். ஆபத்தை உணர்ந்த மற்றவர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினரும் கதிர்வீச்சின் வீரியம் தாங்க முடியாமல் வெளியேறினார்கள்.
அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த ரயில்கள், சரக்கு லாரிகள் உட்பட அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. மற்றொரு தவறாக, முக்கியமான அடைப்புகளைத் தொழிலாளர்கள் மூட மறந்துவிட்டனர். இதனால், காற்றில் கலந்து வெளியேறிய அணுக்கசிவு அருகில் இருந்த நகரங்களுக்கும் பரவியது. இதனால் அந்த நகரங்களில் வசித்த ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள். பல வாரங்களுக்கு அவர்களால் வெளியே வர முடியவில்லை.