தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யும் முறை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணம், நலவாரிய அடையாள அட்டை புதுப்பித்தலுக்கான கால அளவு உள்ளிட்டவை குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு) பி.முனியன் விளக்குகிறார்.
நலவாரியத்தில் பதிவு செய்வதற்கான வழிமுறை என்ன?
கட்டுமான வாரியத்தில் பதிவு செய்ய, அரசு பதிவு பெற்ற ஒப்பந்ததாரர், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அரசு அமைப்புகள், பதிவு பெற்ற தொழிற்சங்கத்தினர் ஆகியோரில் ஒருவரிடம் விண்ணப்பத்தில் சான்று பெறவேண்டும். சென்னையை சேர்ந்த தொழிலாளர்களாக இருந்தால் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்று பெறவேண்டும். உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட இதர 15 நல வாரியங்களில் பதிவு செய்யவேண்டும் என்றால் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அல்லது தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை உதவி இயக்குநரிடம் சான்று பெறவேண்டும். தொழிற்சங்கத்தினர் பணிச்சான்று வழங்கினால், அந்த சங்கத்தின் பதிவு எண் மற்றும் முகவரியுடன் கூடிய முத்திரை அவசியம்.
நலவாரியத்தில் பெயரை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்துடன் என்ன ஆவணங்கள் இணைக்கவேண்டும்?
பள்ளி அல்லது கல்லூரிச் சான்று, வாகன ஓட்டுநர் உரிம நகல், குடும்ப அட்டை, அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட வயதுச் சான்று உள்ளிட்டவற்றில் சான்றொப்பம் பெற்று இணைக்கவேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண் குறிப்பிட வேண்டும். இதை அந்தந்த மாவட்டத் தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) வழங்கினால் அடையாள அட்டை வழங்கப்படும்.
நலவாரியத்தில் பதிவு செய்தபிறகு, எத்தனை ஆண்டுகள் கழித்து புதுப்பிக்க வேண்டும்?
2 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் புதுப்பித்தல் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதை சரிபார்த்த பிறகு, உறுப்பினரிடம் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை வழங்குவார்கள். புதுப்பித்தலுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
நலவாரியப் பதிவை எத்தனை வயது வரை புதுப்பிக்கலாம்?
நலவாரியத்தில் செய்த பதிவை 60 வயது வரை புதுப்பித்துக்கொள்ளலாம். 60 வயது நிறைவடைந்துவிட்டால், பதிவைப் புதுப்பிக்க இயலாது.
நலவாரிய அடையாள அட்டை தொலைந்துபோனால் மீண்டும் பெறமுடியுமா?
நலவாரிய அடையாள அட்டை தவறினால் மாற்று (Duplicate) அட்டை வழங்கப்படும். அதை பெற ரூ.20 கட்டணத்துடன் அந்தந்த மாவட்டத் தொழிலாளர் அலுவலத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) மனு அளிக்கவேண்டும். அதன் மீது தொழிலாளர் அலுவலர் விசாரணை நடத்தி மாற்று அடையாள அட்டை வழங்கப்படும்.