வலைஞர் பக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு யோகா, தியானப் பயிற்சிகள்

கி.பார்த்திபன்

இலவசக் கல்வி, தொழிற்பயிற்சிகள், மருத்துவ உதவிகள், தொழில் தொடங்குவதற்கான உதவிகள், பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் என பல வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன. அவை குறித்து ஒவ்வொன்றாக பார்த்து வருகிறோம். அரசுப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகள், சுய தொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் சலுகைகள், பயிற்சிகள், விமான கட்டணச் சலுகை உள்ளிட்டவை குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

அரசுப் பணியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறதா?

அரசு ஊழியர்களாகப் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு போக்குவரத்துப் படியாக மாதம் ஆயிரம் ரூபாய்வரை வழங்கப்படுகிறது. மேலும், அரசுப் பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வுக் கட்டணங்களில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

சுயமாக தொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு மானியம் உள்ளதா?

சுயதொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும்வகையில் சலுகைகள், வரிவிலக்கு ஆகியவை அளிக்கப்படுகின்றன. அவர்களுக்கான வங்கிக் கடனில் பல்வேறு திட்டங்களின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு தொழில் வரியில் இருந்தும் முழுவதுமாக விலக்கு அளிக்கப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் தங்களது பாதிப்புகளில் இருந்து குணமடையும் வகையில் பயிற்சிகள் ஏதேனும் அளிக்கப்படுகிறதா?

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முடநீக்குப் பயிற்சி அளிக்கப் படுகிறது. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு கவுன்சலிங் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சில மையங்களில் யோகா, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திற னாளிகள் நல அலுவலகத்தை அணுகினால் வழிகாட்டப்படும்.

வயது குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் மாத உதவித் தொகை வழங்கப்படுகிறதா?

45 வயதுக்குமேல் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முதியோர் உதவித் திட்டத்தின்கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதுபோல, 45 வயதுக்குக் குறைவான மாற்றுத் திறனாளிகளும் தங்கள் இயலாமைச் சூழலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்துக்கு தெரியப்படுத்தினால், மாவட்ட அளவில் உள்ள தேர்வுக் குழு மூலம் வயது தளர்வு செய்யப்பட்டு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

ரயில் கட்டணம்போல விமானக் கட்டணத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை உண்டா?

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு விமானக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. உள்நாட்டில் பயணம் மேற்கொள்ளும் பார்வையற்றவர்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT