தெலங்கானா மாநிலத்திலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் உறுப்பினர் கே. கவிதா ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.
"ஹைதராபாதும் காஷ்மீரும் இந்தியாவைச் சேர்ந்த பிரதேசங்கள் இல்லை; வலுக்கட்டாயமாகத்தான் இரண்டையும் சேர்த்துக்கொண்டார்கள்" என்பது அவருடைய முதல் கருத்து. "காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதால்தான் பக்கத்து நாட்டுடன் நமக்கு எல்லையில் தீராத தொல்லை; அவர்களுடன் பேச்சு நடத்தி சில பகுதிகளை விட்டுக்கொடுத்தாவது சமாதானம் செய்து கொண்டால் நம்முடைய ராணுவத்துக்காக ஆண்டு தோறும் செலவழிக்கும் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகிவிடும்" என்பது அடுத்த கருத்து.
அது மட்டுமா! ஆந்திரம், தெலங்கானா இரண்டுக்கும் ஹைதராபாதே சிறிது காலம் பொதுத் தலைநகரமாக இருக்கும் என்பதால் ஹைதராபாத் நகரின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் கூடுதல் பொறுப்பு ஆளுநருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதை தெலங்கானா ராஷ்டிர சமிதி ஏற்கவில்லை. தெலங்கானாவுக்கு ஹைதராபாத்தான் தலை நகரம் என்பது முடிவாகிவிட்டதால் அந்த நகரின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு தெலங்கானா முதல் வரிடம்தான் தரப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தியிருக்கிறார் கவிதா.
ஆந்திர அரசு தனக்கென்று தலைநகரை ஏற்படுத்திக் கொண்டு தலைமைச் செயலகத்தைக் கட்டி முடித்து, அதன் அலுவலகங்கள் ஹைதராபாதிலிருந்து இடம்பெயர்ந்த பிறகு அந்நகரின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு தெலங்கானா முதல்வருக்கு வந்துவிடும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித் திருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆந்திர மாநிலப் பிரிவினை, சீரமைப்பு மசோதாவைப் பக்கத்திலிருந்து தயாரித்துவிட்டு இப்போது அதன் அமலை எதிர்ப்பது சரியல்ல என்று சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியினர் இந்தக் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பலத்த எதிர்ப்புக்கும் ஆதரவுக்கும் மத்தியில் தெலங்கானா என்ற மாநிலம் எப்படியோ பிறந்துவிட்டிருக்கிறது. தெலங் கானா முழுவதுமே மிகவும் பின்தங்கிய பிரதேசம்தான். எல்லாமே முதலிலிருந்து தொடங்க வேண்டிய நிலையில் அந்த மாநிலம் இருக்கிறது. இந்தச் சூழலில் பிரிவினை வாதத்தை முன்னெடுத்தால் மாநிலத்தில் வளர்ச்சி எப்படி சாத்தியப்படும்? தற்போதைய காஷ்மீரின் நிலையைப் பற்றித் தெரிந்துமா கவிதா இப்படியெல்லாம் பேசியிருக்கிறார்?!