அண்ணா சாலையில், தீவுத் திடல் அருகே, குதிரை மீது கம்பீரமான அமைதியுடன் வீற்றிருக்கும் ஒரு ஆங்கிலேயரின் சிலையை, அவசர கதியில் கடந்து சென்றிருப்போம். தாமஸ் மன்றோ என்ற அந்த மனிதர், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், ஆற்றிய பணிகள் மகத்தானவை.
பிரிட்டன் குடியரசில் உள்ள ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில், 1761-ல் பிறந்தவர் மன்றோ. 1770-களில் சென்னைக்கு வந்த அவர், ஆங்கிலேயப் படையில் சாதாரண வீரராகப் பணிபுரிந்தார். தனது உழைப்பின்மூலம் ராணுவத்தில் படிப்படியாக உயர் பதவிகளை அடைந்தார். 1792-ல் திப்பு சுல்தானுக்கு எதிரான போரில், துணை நிலை ஆளுநராகப் பணியாற்றியவர்.
பாரமஹால் பகுதியின் நிர்வாகம் தளபதி அலெக்ஸாண்டர் ரிட் மற்றும் மன்றோவிடம் வந்தபோது, தனது நிர்வாகத் திறமையையும், மக்கள் மீதான அக்கறையையும் வெளிப்படுத்தினார் மன்றோ.
வரி வசூல் விஷயத்தில் மக்களிடம் இரக்கம் காட்டினார். நிலம் வைத்திருப்பவர்களுக்கும் அரசுக்கும் இடையில், ஜமீன்தார்கள் லாபம் பார்ப்பதைக் கட்டுப்படுத்தினார். அது மட்டுமல்லாமல், ‘கலெக்டர்’ என்ற நிர்வாகப் பதவியை அறிமுகப்படுத்தியவரும் மன்றோதான்.
மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து மனிதத்தன்மையுடன் நிர்வாகம் செய்ததால் அவர் புகழ் பெருகியது. ‘மன்றோலப்பர்' என்று குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் அளவுக்கு அவர் மக்களால் நேசிக்கப்பட்டார்.
1800-களில் பிரிட்டன் சென்ற அவர், சில ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பி வந்தார். பல்வேறு பதவிகளை வகித்த அவர், 1820-ல் சென்னை ஆளுநராகப் பொறுப்பேற்றார். சிறப்பான பல நடவடிக்கைகளை எடுத்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார். அந்த அறக்கட்டளை இன்றும் திருப்பதியில் மன்றோ பெயரில் நைவேத்தியம் வழங்கிவருகிறது.