இன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினம். பாரதியின் உடலை சுமந்து சென்ற அந்த பதினோரு பேர் அவருக்கு விடைகொடுத்து இன்று 104 வருடங்களாயிற்று.
பாரதி யார்? - சின்ன பாரதி என்று வ.வே.சு. ஐயரால் அழைக்கப்பெற்ற யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதி, “பேச்சுக்கு சிதம்பரம் பிள்ளை, பாட்டுக்கு பாரதியார், எழுத்துக்கு ஐயர். இம்மூவரும் தமிழ்நாட்டின் மும்மணிகள். பாரத மாதாவின் திரிசூலங்கள். இவர்களை தமிழர்கள் மறக்கமுடியாது. உலகமே மறக்கமுடியாது.” என்று கூறுகிறார்.
பாரதியின் பரிமாணங்கள்: பாரதி ஒரு பன்மொழி வித்தகர், சிறந்த மொழிபெயர்ப்பாளர்.
செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் - அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக
இது பாரதியின் மிகச் சிறந்த படைப்புக்களில் ஒன்றான பாஞ்சாலி சபதம், 153-வது பத்தியில் வரும் செய்யுள். இது வேறொன்றுமில்லை, காயத்ரி மந்திரம். இதை அரவிந்தர் ஆங்கிலத்தில், “We choose the supreme light of the divine sun, we aspire that it may impel our minds” என்று ஓரிடத்தில் மொழிபெயர்க்கிறார்.
1904-ல் பாரதி சென்னை வந்தார். சுதேசி மித்ரனில் துணை ஆசிரியர் வேலை. சுதேசி மித்திரனை நடத்தி வந்த சுப்ரமணிய ஐயர் தான், தன் பத்திரிகை துறைப் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு, நல்ல பத்திரிகை ஆசிரியன் என்பவன் யார் என்ற சூட்சுமத்தை கற்றுக்கொடுத்தவர் என்று கொண்டாடுகிறார் பாரதி.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், சுதேசி மித்ரனில் பாரதி சுயமாய் ஒரு கட்டுரை கூட எழுதவில்லை.
சுப்ரமணிய ஐயருக்கு, பாரதியின் சுதந்திர தாகத்தை கண்டு பயம். பாரதி எதையாவது எழுதப்போய், அதனால் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. அதனால் அவர் பாரதிக்கு ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் வேலை மட்டுமே கொடுத்தார்.
தன் ஆங்கிலம் சீர்பட சுப்ரமணிய ஐயரே காரணமென்கிறார் பாரதி. மேலும், தன் தமிழபிமானம் கூடுவதற்கும், தாய்தமிழின் அருமை பெருமைகளை உணருவதற்கும், மொழிபெயர்ப்பிற்காக இணை வார்த்தைகள் தேடும் படலம் உதவியது என்கிறார் அவர்.
புதுச்சேரியில் இருந்தபோது மீண்டும் ஒரு பத்திரிகையைத் தொடங்குகிறார் பாரதி. அந்த பத்திரிகையின் பெயர் அரவிந்தரிடம் இரவல் வாங்கப்பட்ட, கர்மயோகி.
இப்பத்திரிகையில் வந்த மிகச்சிறப்பான விஷயம், பதஞ்சலி யோக சூத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. இதை பாரதியின் நீண்டநாள் தவமென்று கூறலாம். இதற்கான உந்துதல் சுவாமி விவேகானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அது அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது பாரதியின் கருத்தாக இருந்தது. அதனால், ஒரு சீரிய தமிழ் மொழிபெயர்ப்பை செய்யவேண்டும் என்பது அவரது விருப்பம். அரவிந்தர் இந்த மொழிபெயர்ப்பைக் கொண்டாடினார் என்பது பாரதிக்கு அதீத அனந்தத்தைக் கொடுத்தது.
மொத்தத்தில் பாரதி ஒரு கவிஞன் மட்டுமல்ல, ஒரு பன்மொழி வல்லுநர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், ஆசிரியர், கார்ட்டூன் வரைபவர், சரித்திர ஆராய்ச்சி கட்டுரையாளர். ஆங்கிலத்தில் சொல்லப்போனால், Jack of all trades.
பாரதி ஓர் உண்மையான சமூக நீதிக் காவலர்: எட்டயபுர கட்டய மணியக்காரர் பாரதியின் உற்ற தோழர். ஆனால் ஊருக்கு, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஒருநாள் தோழரை வீட்டிற்கு அழைத்து வந்து இலையிட்டு விருந்து பரிமாறினார் பாரதி. கூட்டுக் குடும்பத்தில் பாரதியின் மாமா கைலாசம் ஐயரும் ஒருவர். பாரதியின் செயல் பிடிக்காத அவர், உணவிற்கு நடுவில் இருவரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு ஏசினார். பாரதி செல்லம்மாவுடன் வெளியேறினார். இதுவே மகாகவியின் எட்டயாபுர வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்.
1906-ல் பிபின் சந்திர பாலரை சென்னைக்கு அழைத்துவந்தார் பாரதி. மெரினா கடற்கரையில் நடந்த ஒரு கூட்டத்தில், பாரதத்தில் முதன் முறையாக அந்நியன் தயாரித்த துணிகளை எரிக்கும் படலம் சிறப்பாக அரங்கேறியது.
புதுச்சேரி படலத்தின்போது பட்டியலினத்தைச் சார்ந்த கனகலிங்கம் எனும் பாலகனுக்கு உபநயனம் செய்வித்தார் பாரதி. ஊரார் யாரும் கேட்டால் தான் ஒரு பிராம்மணர் என்றும், பாரதியால் ப்ரம்மோபதேசம் செய்விக்கப்பட்டவர் என்றும் உரக்க அறிவிக்கும்படி கூறினார்.
பாரதியின் சமூக நீதியைப் பற்றி எழுதி மாளாது. அதுமட்டுமல்ல, பெண் விடுதலையும் பாரதியின் உயிர் மூச்சாக இருந்தது.
சுதந்திர தாகி: சுதேசி மித்ரனில் இருந்து வெளியேறிய பாரதி, இந்தியா என்னும் வார இதழை துவக்கினார். இந்த இதழ் சிகப்புக் காகிதத்தில் அச்சிடப்பட்டது. இதற்கு மேல் இது பற்றி விளக்க வேண்டுமா என்ன? தீப்பிழம்பாய் வெளிவந்த இந்தியா 1906-ல் வாரத்திற்கு 4,000 பிரதிகள் விற்றது.
எரிமலையைப் போன்ற தலையங்கங்கள், சூடான செய்திகள், அரசியல் நய்யாண்டி சித்திரங்கள், சரித்திர வரைவுகள் என அனல் கக்கிய 'இந்தியா'வை, ஆங்கிலேயன் திரும்பிப் பார்க்க வெகுநாட்கள் ஆகவில்லை. கைது செய்யப்படுவர் என்ற செய்தி கசிய, பாரதியை நண்பர்கள் புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
இச்சமயத்தில் இந்தியாவில் வெளியான பாடல் பாரதியை Most wanted ஆக மாற்றியது. கிருஷ்ண ஸ்தோத்ரம் என்று புகழ் பெற்ற, "என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்" என்ற அக்கினிக் கனல் கக்கும் பாடலே அது. இதன் பயனாய் 'இந்தியா' நின்றுபோனது.
சுதேசி மித்ரனுக்கும், புதுச்சேரிக்கும் இடையில் சூரத் நகரில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அங்கு காங்கிரசில் இருந்த மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே யுத்தம் ஒன்று நடந்தது. தமிழ்நாட்டின் அக்கினி பிழம்புகளாம், வ.உ.சி, பாரதி போன்றோர் சூரத் சென்றனர்.
கொட்டும் மழைக்கிடையில் தமிழ்நாட்டு குழு, சூரத் போய் சேர்ந்தது. மழையிலும் பாரதிக்கு முதலில் தன் ஆதர்ச புருஷரான லோகமான்ய திலகரை கண்டு வணங்கவேண்டும் என்பது விருப்பம். மழையில் அலைந்து தேடி கடைசியில் ஒரு சிறு குழு ஒன்று மழையினால் ஏற்பட்ட அடைப்புக்களை சரி செய்வதைக் கண்டார் பாரதி.
“அங்கே யாரோ ஒருவர் ஒரு குடையின் கீழ் நின்று வேலை செய்வதைக் கண்டேன். காந்தக் கண்கள், அந்தக் கண்கள் எனும் பீராங்கிகளில் இருந்து ஸ்வராஜ்ய கணைகள் வருவதைக் கண்டேன். அவர் காலில் விழுவது தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை.” என்கிறார் பாரதி.
உயிரெலாம் இன்புற்றிருக்க வேண்டும்: தாயுமானவர், வள்ளலார் போல் பாரதியும் பிறர் நலன் பேணி வாழ்ந்த பெருமான். அதற்கு அவர் புதுச்சேரி மணக்குள விநாயகரை போற்றி இயற்றிய விநாயகர் நான்மணி மாலையும் சாட்சி.
பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்;
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
பாரதி போன்ற பித்த சந்யாசிகள் பலர் தன்னையும், தன் குடும்பதையும் மறந்து நாட்டிற்காக உயிர் நீத்ததனால் பெற்ற சுதந்திரக் காற்றையே நாம் இன்று சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். பாரத சமுதாயம் வாழ்கவே!
- ராஜா பரத்வாஜ்