பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் போராடி, துன்பப்பட்டு, துயரப்பட்டு, தங்கள் இன்னுயிரை இழந்து சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். காந்திக்கு முன்பே இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆனால், இந்தியா முழுவதும் தனித்தனி இயக்கங்களாக அவை செயல்பட்டுக் கொண்டிருந்தன. 1915ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த காந்திதான், துண்டுதுண்டாகப் பிரிந்து கிடந்த சுதந்திரப் போராட்ட இயக்கங்களை ஒருங்கிணைத்தார்.
இதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தின் அடையாளமாக அவர் மாறினார். உலகம் எங்கும் அந்நியர்களின் ஆட்சியை அகற்றுவதற்கு, வன்முறை வழியைத் தேர்ந்தெடுத்த போது, ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றுவதற்கு ‘அகிம்சை’ வழியை காந்தி தேர்ந்தெடுத்தார். அதனாலேயே தனித்துவத்துடன் உலகம் கொண்டாடும் தலைவராக இன்றளவும் இருக்கிறார்.
1919 ஆம் ஆண்டு சந்தேகப்படும் யாரையும் விசாரணை இன்றி, சிறையில் அடைப்பதற்கு வசதியாக ஆங்கிலேய அரசு ‘ரெளலட் சட்டம்’ கொண்டுவந்தது. இந்தச் சட்டம் காந்தியின் போராட்ட வடிவத்தை மேலும் கூர்தீட்ட வழி வகுத்தது.
காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற தொடர் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, வழிநடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்களில் பல லட்சக் கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இதன் விளைவாக 1947இல் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்கிற கட்டாயம் பிரிட்டனுக்கு ஏற்பட்டது. இந்தியா வுக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகும் காந்தி ஓய்ந்துவிடவில்லை. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட வன்முறை களைத் தடுப்பதற்காகவும் ஒற்று மையை உருவாக்குவதற்காகவும் போராடிக்கொண்டே இருந்தார்.