ஆகஸ்ட் 14, 1947. நள்ளிரவு நேரம். டெல்லியில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு உரையாற்ற ஆரம்பித்தார்.
“பல ஆண்டுகளுக்கு முன்பே லட்சியத்தை நோக்கியப் பயணத்தை முடிவு செய்து கொண்டோம்.
முழுமையாக இல்லாவிட்டாலும் அந்த லட்சியத்தில் கணிசமான அளவில் செயல்படுத்தும் காலம் இப்போது வந்திருக்கிறது. இந்த நள்ளிரவில், ஒட்டுமொத்த உலகமும் உறங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், தன் விடுதலைக்காகவும் வாழ்வுக்காகவும் இந்தியா விழித்துக்கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு தருணம் வரலாற்றில் அரிதாகவே இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது. நாம் பழையதிலிருந்து புதியதை நோக்கி அடி எடுத்து வைக்கும்போது, ஒரு யுகம் முடிவடைகிறது. நான்கு நூற்றாண்டுகளாக நசுக்கப்பட்ட இந்தியாவின் குரல், இன்று உரத்து ஒலிக்க இருக்கிறது.
இந்த அற்புதமான தருணத்தில் இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதற்கு அர்ப்பணிப்புடன் உறுதிமொழி எடுப்பது பொருத்தமானது. வரலாற்றின் விடியலில், இந்தியா தனது முடிவில்லாத் தேடலை ஆரம்பித்துள்ளது. இன்றுடன் நமது மோசமான காலக்கட்டம் முடிவடைகிறது. இந்தியா மீண்டும் தன்னைக் கண்டுகொண்டது. இன்று நாம் கொண்டாடும் வெற்றி, எதிர்காலத்தில் நமக்குக் கிடைக்கப் போகும் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்குமான முதல் படி.
கடந்த காலத்தில் ஏராளமான வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக் கொண்டோம். அந்த வலிகளில் சில இப்போதும் தொடர்ந்தாலும் கடந்தகாலம் முடிந்துவிட்டது. இப்போது நம்பிக்கை அளிக்கும் எதிர்காலம் நம்மை வரவேற்கிறது. வறுமை, அறியாமை, நோய், சமத்துவமின்மை ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
கசியும் ஒவ்வோர் இந்தியரின் கண்களில் இருந்தும் கடைசிச் சொட்டுக் கண்ணீரைத் துடைப்பதே எங்கள் தலைமுறையின் உயர்ந்த லட்சியமாக இருக்கும். ஒருவேளை அது எங்களால் சாத்தியப்படாமல் போகலாம். ஆனால், சாத்தியப்படும் நாள்வரை இந்தக் கடமை நிறைவடையாது.
என் அருமை இந்தியர்களே, எங்களோடு இந்தப் பயணத்தில் ஒன்றுசேருங்கள். தன் குழந்தைகளைப் பாதுகாக்க இந்தியத் தாய் துணிந்துவிட்டார். நமது கனவுகளை நனவாக்க நாம் உழைக்க வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். அந்தக் கனவுகள் இந்தியாவுக்கானவை மட்டுமல்ல, உலகத்துக்கானவை.
நாம் ஒரு சிறந்த நாட்டின் குடிமக்கள். நாம் அனைவரும் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சம உரிமைகள், சம சலுகைகள், சம கடமைகளைக் கொண்ட இந்தியாவின் குழந்தைகள். வகுப்புவாதத்தையோ குறுகிய மனப் பான்மையையோ நாம் ஊக்குவிக்க முடியாது.
ஏனென்றால், சிந்தனையிலோ செயலிலோ குறுகிய மனமுடைய மக்களைக் கொண்ட தேசம் சிறந்ததாக இருக்க இயலாது. அமைதி, சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் உறுதியாக இருப்போம். உலக நாடுகளுக்கு நம் அளவற்ற மகிழ்ச்சியையும் நன்றியையும் கடத்துவோம். தேச சேவைக்கு நம்மை அர்ப்பணிப்போம். ஜெய் ஹிந்த்!
(நேருவின் சுருக்கப்பட்ட உரை)