வலைஞர் பக்கம்

ரசிகர்களுக்குப் பெருமை சேர்த்த இளையராஜா | இப்படிக்கு இவர்கள்

செய்திப்பிரிவு

இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி தாயப்பன் அழகிரிசாமி எழுதிய ‘இளையராஜா அடுத்த நூற்றாண்டுகளுக்குமானவர்’ கட்டுரையைப் படிக்கும்போதே ஒரு பிரமிப்பு! பண்ணைபுரம் என்ற கிராமத்தில் இருந்து வந்த இசைப் பிரவாகம், இன்று உலகம் முழுதும் பயணித்து ஓய்வின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறது. இளையராஜா என்கிற பெயர் தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஒன்றிவிட்டது.

தமிழ்த் திரைப்பட உலகில் 50ஆம் ஆண்டைத் தொடும் அந்த எளிய மனிதர், தான் நேசிக்கும் இசைத் துறையில் 83 வயதிலும் புதிதாகக் கற்றுக் கொள்ளும் பாலகனைப் போலத் துள்ளிக் குதித்து, ஆர்மோனியப் பெட்டி முன் மணிக்கணக்கில் நின்றுகொண்டு நிகழ்ச்சி நடத்தி, எண்ணற்ற இசை ஜாலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அவரின் பாடல்களை மட்டுமல்லாமல், பின்னணி இசைக் கோவைகளையும் தனி ஆல்பமாகப் போடலாம். அவர் புகைப்படக் கலைஞராகவும் தன் எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

கோவையில் நடைபெற்ற அவரது புகைப்படக் கண்காட்சியைப் பார்த்து ரசித்திருக்கிறேன். விருப்பு வெறுப்பின்றித் தன் மனதில் பட்டதைக் குழந்தை போல் வெளிப்படுத்தும் அவர், எப்போதும் தன் கருத்துக்கு ரசிகர்களை ‘ஆமாம் சாமி!’ போட வைக்காத கலைஞரும்கூட. அவரின் இசைத் திறமைக்கும் நீண்ட கால சாதனைக்கும் மத்திய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிப் பெருமை சேர்க்க வேண்டும்.

ஒருமுறை அவருடைய இசை வாரிசு யார் என்று கேட்கப்பட்டதற்கு, “நான் உருவாக்கியதை யார் ஆண்டு அனுபவிக்கிறார்களோ அவர்கள்தான் வாரிசு. அந்த வரிசையில் என் இசை கேட்கும் அனைத்து ரசிகர்களும் என் வாரிசு” என்று ரசிகர்களுக்குப் பெருமை சேர்த்த இந்த மகா கலைஞன் நூறாண்டுகள் கடந்து வாழ வேண்டும். அவரது இசை நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த பூமிப் பந்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பது உறுதி. - அன்னூரார் பொன்விழி, அன்னூர்.

SCROLL FOR NEXT