வலைஞர் பக்கம்

நம் சட்டம்...நம் உரிமை: பேச இயலாதவர்களுக்கு இலவச பேச்சுப் பயிற்சி

கி.பார்த்திபன்

காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கு பேச்சுப் பயிற்சி, காது கேளாதோர் கருவி, அவர்களுக்கான அரசு சிறப்புப் பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் உள்ள ஒதுக்கீடு, தபால் கட்டணச் சலுகை உள்ளிட்டவை குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

முடநீக்குப் பயிற்சிபோல காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி ஏதேனும் அளிக்கப்படுகிறதா?

ஆம். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலகத்தில் பேச்சுப் பயிற்சியாளர் ஒருவர் உள்ளார். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர் மூலம் பேச்சுப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. பேச்சுத் திறனை அளவிடும் ஆடியோமீட்டர் கருவியும் மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலகத்தில் உள்ளது. அதன்மூலம் மாற்றுத் திறனாளிகளின் பேச்சுத் திறன் அளவிடப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பேச்சுப்பயிற்சிக்குக் கால அளவு இல்லை. வயது வரம்பும் கிடையாது. சரியாகப் பேச்சு வரும்வரை பயிற்சி பெறலாம். எந்த வயதினரும் பயிற்சி பெறலாம். காது கேளாதோருக்கான கருவியும் இலவசமாக வழங்கப்படுகிறது.

காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கு சிறப்பு பள்ளி உள்ளதா?

ஒரு சில மாவட்டங்கள் நீங்கலாக பெரும்பாலான மாவட்டங்களில் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக அரசுப் பள்ளிகள் உள்ளன. அதுபோல தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் காது கேளாத, வாய் பேச இயலாதவர்களுக்கென தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. அந்தந்த மாவட்டத்தில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலகத்தை அணுகினால் பள்ளி, கல்லூரிகள் குறித்து வழிகாட்டப்படும்.

சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனி ஒதுக்கீடு உள்ளதா?

ஆம். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காகவே ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரது நிதியிலும் ரூ.5 லட்சம் ஒதுக்கப்படுகிறது. அந்த பணம் முழுவதையும் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே வழங்க இயலும். அதில் இருந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரடியாக வேறு உதவிகள் எதுவும் வழங்க இயலாது. மாற்றுத் திறனாளிகள் துறை மூலமாகவே உதவிகளை வழங்கமுடியும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் கட்டணச் சலுகை உள்ளதா?

உள்ளது. ஆனால், இந்த சலுகை அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் கிடையாது. பார்வையற்றவர்கள் பிரெய்ல் எழுத்துகளில் அனுப்பும் ‘புக் போஸ்ட்’ (ரெஜிஸ்டர் போஸ்ட்) தபால்களுக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT