பெருமாள் முருகனின் ‘பூனாட்சி’ ஐஸ்லாண்டிக் மொழியில் வெளிவந்துள்ள முதல் தமிழ் நூல். இதன் மொழிபெயர்ப்பாளார் எலிசா பியர்க். மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் ஐஸ்லாந்தின் உயரிய விருதான ஐஸ்லாண்டிக் டிரான்ஸ்லேசன் விருதுக்கு இந்த நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தைச் சேர்ந்த அங்குஸ்த்ரா பதிப்பகத்துடன் காலச்சுவடு பதிப்பகம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் வழி இந்த மொழிபெயர்ப்பு சாத்தியமானது. டெல்லியில் உள்ள ஐஸ்லாந்து தூதரகம் விருது குறித்துச் செய்தி வெளியிட்டுள்ளது.
தொ.ப.-75 கருத்தரங்கு
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை, வரும் புதன்கிழமை (05.03.25) பேராசிரியர், அறிஞர் தொ.பரமசிவனின் 75ஆம் ஆண்டை முன்னிட்டு ஒரு நாள் கருத்தரங்கை, சென்னைப் பல்கலைக்கழகப் பவளவிழாக் கருத்தரங்க அறையில் ஒருங்கிணைக்கிறது. பேராசிரியர்கள் வீ.அரசு, பக்தவத்சல பாரதி, ச.ஏழுமலை,
ஆ.ஏகாம்பரம், கோ.பழனி, அ.மோகனா, ந.இரத்தினகுமார், ஆய்வாளர்கள் தமிழ்க் காமராசன், ஏ.சண்முகானந்தம், இரா.கமலக்கண்ணன் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.
புக்கர் பட்டியலில் கன்னட நூல்
சர்வதேச அளவில் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்று புக்கர். இந்த விருதுக்கான நெடும் பட்டியலில் 13 நூல்களில் ஒன்றாக கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்கின் சிறுகதைத் தொகுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது ‘ஹசீனா மத்து இதர கதகளன்னு’ என்கிற அவரது கன்னடத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘ஹார்ட் லாம்ப்’ (Heart Lamp) என்கிற நூலாகும். தீபா பாஸ்தி இதை மொழிபெயர்த்துள்ளார். அண்ட் தி அதர் ஸ்டோரீஸ் என்கிற பிரிட்டன் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.