வலைஞர் பக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு அறுவை சிகிச்சை

கி.பார்த்திபன்

மாற்றுத் திறனாளிகள் தங்களது அன்றாட பணிகளை செய்துகொள்ள இலவச முட நீக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுபோல் அனைவருக் கும் கல்வி இயக்கம் மூலம் உதவி உபகரணம் மற்றும் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கான வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து மாற்றுத் திறனாளிகள் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

 மாற்றுத் திறனாளிகள் குணமடைய இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகிறதா?

ஆம். மனவளர்ச்சியின்மை, மூளை முடக்குவாதம் மற்றும் ஆட்டீஸம் போன்ற பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் தங்களது அன்றாட பணிகளை செய்து கொள்ள அந்தந்த மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலகத்தில் முட நீக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி 13 வயது வரையுள்ள மாற்றுத் திறனாளி களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியை மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் வழங்குவார்.

 மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிக்கான கால அளவு எவ்வளவு?

கால அளவுகள் எதுவும் இதற்கு நிர்ணயம் செய்யப்பட வில்லை. குளித்தல், பல் துலக்குதல், உணவு உண்பது, கை கழுவுவது என நாள்தோறும் செய்யக்கூடிய பணிகள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர் பயிற்சியின் மூலம் சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 50 சதவீதம் குணமடைவர். முழுமையாக குணமடைவர் என்று உறுதியாக சொல்ல முடியாது.

 கல்வித்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி ஏதேனும் அளிக்கப்படுகிறதா?

கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமும் மனவளர்ச்சி குன்றியவர்கள், மூளை முடக்கு வாதம் மற்றும் ஆட்டீஸம் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாசிரியர்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி 6 வயது முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது. அந்தந்த வட்டாரத்தில் (ஊராட்சி ஒன்றியம்) உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க மையத்தில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

 அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வேறு என்ன உதவிகள் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது?

அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களும் உள்ளூர் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பயிற்சி பெற்ற சிறப்பாசிரியர்கள் வழிகாட்டுதல்படி கல்வி கற்கலாம். மேலும், 6-14 வயதுள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி போன்ற உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவி யருக்கு அதற்கான ஏற்பாடுகளும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செய்யப்படுகின்றன.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

SCROLL FOR NEXT