“சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?” எனும் கேள்வி, தமிழக அரசியல் களத்தில் முன்னெப்போதையும் விடத் தற்போது அதிகமாகவே கேட்கப்படுகிறது. இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் கையாளாத, சாமானியர்களுக்கு நெருக்கமான பேச்சு மொழியைச் சீமான் கைக்கொண்டதே காரணம் என்பதை, அவரது மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானிக்கும் எவரும் உணரமுடியும்.
வெகுமக்களுக்கான நல அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சாமானியர்கள் அரசியல் பேசுவதையே தவிர்த்து, அது அறிஞர்களுக்கானது, பேரறிஞர்களுக்கானது என்று, கிட்டத்தட்ட வாக்கு செலுத்துவதைத் தவிர அரசியல் விருப்பற்று ஒதுக்கிய வாழப் பழகினர். தங்களையொத்த குரலற்றவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் துன்புறுவது குறித்துப் பேசவும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கத் துணிவற்றும் வாழும் நிலையே அவர்களிடம் இருந்து வந்துள்ளது.
இப்படிப்பட்ட தருணத்தில்தான் கடந்த 2009-இல், தமிழ்நாட்டின் தொப்புள் கொடி மனிதர்களான சாமானிய ஈழத் தமிழர்கள் 70 ஆயிரம் பேர் இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டனர். ‘முள்ளிவாய்க்கால் படுகொலை’ என்று ஒட்டுமொத்த உலகமும் ஓர் இனப்படுகொலைக்குப் பெயர் சூட்டிவிட்டு, நீதிகேட்டு ஈனக்குரல் எழுப்பிய எஞ்சியிருந்த இலங்கைத் தமிழர்களுக்கு மவுனத்தை மட்டும் பதிலாக அளித்தது. அந்த ‘மாஸ் கில்லிங்’ இனப் படுகொலையில் இதயம் நொறுங்கி ரத்தம் கொதித்த ஒருவனின் நீதி கேட்கும் குரல், கோபம் கொந்தளிக்கும் எளியவர்களுக்கான மொழியாடலாக வெடித்துச் சிதறத் தொடங்கியது.
அந்த மொழியும் குரலும்தான் சீமானுடையது... சாமானிய வியாபாரிகள், தினக்கூலிகள், சீரியல் பார்க்கும் பெண்கள், சினிமாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என்று ஒரு கூட்டம் சீமானின் அந்த மொழியாடலால் ஈர்க்கப்பட்டு, மொழிவழி தேசியமும் அதன் வழியான அரசியல் இறையான்மையும் தமிழர்களுக்கும் உரியதே; அதை ஏன் இழந்தோம் என அறிந்து தெளிந்து அரசியல் கற்றுக்கொண்டு, சீமான் பேசுவதைக் கூர்ந்து கேட்கத் தொடங்கியது. சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் இணையாவிட்டாலும் அந்த ஜனநாயக அரசியல் அமைப்பின் பெரும் ஆதரவு சக்தியாக அவர்களை உருமாற்றியிருக்கிறது.
அந்த வகையில், சீமானைத் தங்களுடைய அரசியல் எதிரியாகக் கருதும் யாரும், ‘சீமானின் குரல் என்பது சீமான் என்கிற தனி மனிதனின் குரல் அல்ல; அது உரிமையிருந்த, வாய்ப்பிழந்த, வேலையும் அதிகாரமும் மறுக்கப்பட்ட பெரும்பான்மையான தமிழர்களின் குரல்’ என்பதை அறிந்தே உள்ளனர்.
திராவிடக் கட்சிகளின் திராவிட மாடல் அரசியல், விஜய் முன்னெடுத்துள்ள திராவிட - தமிழ் தேசிய அரசியல், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு நடுவேதான் தமிழ்த் தேசியமும் வீறுகொண்டு வளர்ந்து வருகிறது. அந்த வளர்ச்சியின் ஆணிவேராக இருக்கிறது சீமான் முன்வைக்கும் ‘உரிமை இழந்தவர்களுக்கான அரசியல்’.
அதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய புரிதலோடு நாம் தமிழர் கட்சியையும் அதன் முக்கிய இலக்கான தமிழரின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுத்தல் என்பதையும் நோக்கி தனது மொழியாடலைக் கூர் திட்டி வருகிறார். அந்தக் கூர்தீட்டலில் இப்போது பெரியார் ஈ.வே.ராவை மறுதளித்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.
பெரியார் மறுப்பையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதன்மைப் பிரச்சாரமாகவும் மேற்கொண்டது. பெரியார் மறுப்பைச் சாமானியர்களுக்கான மொழியில் சீமான் முன்வைத்த காரணத்தாலேயே இன்று வெகுமக்களிடம் அது பேசுபொருளாகியிருக்கிறது.
பெரியாரைக் கடந்த காலத்தில் எத்தனையோ பேர் விமர்சித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் சட்டை செய்யப்படாத எதிர்ப்பு, இப்போது எழக் காரணம், சீமானின் எளியவர்களுக்கான மொழியாடலே. அந்த மொழியாடலே அவரது அரசியல் எதிரிகளுக்கு கோபத்தையும் பதற்றத்தையும் உருவாக்கிவிட்டது.
- சந்திரன் ராஜா - ஒரு தமிழ் தேசியர், அரசியல் விமர்சகர். | தொடர்புக்கு: Krishjai2006@gmail.com