வலைஞர் பக்கம்

ஆகஸ்ட் 1, 1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டறியப்பட்ட நாள்

செய்திப்பிரிவு

காற்றில் கலந்துள்ள ஆக்சிஜன்தான், உயிரினங்களின் சுவாசத்துக்கு அடிப்படை. எனினும், ஆக்சிஜன் பற்றி, 18-வது நூற்றாண்டில்தான் தெரியவந்தது.

கிரேக்க மொழியில் ஆக்சிஸ் என்றால் அமிலம் என்றும் 'ஜென்' என்றால் உற்பத்திசெய்தல் என்றும் பொருள். அமிலங்களிலிருந்து உற்பத்தி ஆவது என ஆரம்பத்தில் புரிந்துகொள்ளப்பட்டதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது. தமிழில் பிராணவாயு, உயிர்மூச்சு என்றெல்லாம் அழைக்கப்படும் இந்தத் தனிமத்தை சுவீடனைச் சேர்ந்த கார்ல் வில்லெம் சீலெ என்பவர் 1773-ல் கண்டறிந்தார்.

இது தொடர்பாக ‘வளியும் தீயும்’ என்று ஆய்வுக் கட்டுரை எழுதி, 1775-ல் அனுப்பினார். ஆனால், அது 1777-ல்தான் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாகவே 1774-ல் இதே நாளில் பிரிட்டனைச் சேர்ந்த மதகுருவும் வேதியியலாளருமான ஜோசப் பிரீஸ்ட்லே ஆக்சிஜனைக் கண்டுபிடித்ததாக, செய்தி வெளியாகிவிட்டது. இன்றும் ஜோசப் பிரீஸ்ட்லீக்குத்தான் ஆக்சிஜன் கண்டுபிடிப்பாளராக முன்னுரிமை தரப்படுகிறது.

பாதரச ஆக்சைடைச் சூடுபடுத்தி, அதிலிருந்து வெளியேறிய ஆக்சிஜன், எரியும் மெழுகுவத்தியை மேலும் பிரகாசமாக எரியச் செய்ததை பிரீஸ்ட்லீ கண்டறிந்தார். அத்துடன் ஆக்சிஜனைச் சுவாசித்த எலிகள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் நீண்ட நாட்கள் வாழ்வதையும் அவர் கவனித்தார். தனது கண்டுபிடிப்பை 1775-ல் ‘வளி தொடர்பான கண்டுபிடிப்புகள் பற்றிய கூடுதல் விபரங்கள்' என்னும் கட்டுரையாக அவர் வெளியிட்டார்.

SCROLL FOR NEXT