இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல், 2020-ல் நடன கலைஞர் தனஸ்ரீ வர்மாவைக் காதலித்து கரம்பிடித்தார். ‘புகழ், பணத்திற்காகத்தான் சாஹலை தனஸ்ரீ திருமணம் செய்துகொண்டார், சாஹல் மீது அவருக்கு உண்மையான அன்பும் காதலும் இல்லை, பணத்தைப் பிரதானமாக கொண்டுதான் இத்திருமணம் நடைபெற்றது’ என்று நெட்டிசன்கள் எல்லை மீறி மூக்கை நுழைத்தனர்.
தன் மீதான சோஷியல் மீடியா தாக்குதல்களுக்கு தனஸ்ரீ பதில் அளித்தும், ஆணாதிக்க மனநிலை கொண்ட நெட்டிசன்கள் சிலர் அவரைத் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். அண்மையில், சாஹலின் பழைய வீடியோ ஒன்றைப் பதிவிட்டு அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகத் தீர்ப்பு எழுதியது ஒரு கூட்டம். ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து தீர்ப்பு எழுதுவது நாகரிகமான செயல் இல்லை என்பதை உணர்ந்து இணையவாசிகள் எப்போதுதான் இதையெல்லாம் நிறுத்தப்போகிறார்களோ! - சிட்டி