தீபாவளி, பொங்கல் போன்று பண்டிகைகளுக்கு வெளியாகும் திரைப்படங்களின் மீது எப்போதும் ரசிகர்களுக்கு ஒருவித எதிர்ப்பார்ப்பு இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கு அஜித்குமாரின் திரைப்படம் வெளியாகும் எனக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. தவிர்க்க முடியாத சில காரணங்களால் ‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாகப் படக்குழு அறிவிக்கவே, தல ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கிவிட்டனர்.
பெரிய பட்ஜெட் படம் ஒன்று விலகியதை அடுத்துச் சரியான நேரம் பார்த்து சில படங்கள் பொங்கல் ரேஸுக்கு தயாராகிவிட்டன. ஐந்துக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில், 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆகத் தயாராக இருந்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொங்கலுக்குத் திரைக்கு வர உள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ள இப்படம் ஜனவரி 12-ல் வெளியாகிறது. ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளான அஜித் ரசிகர்கள், ‘ஒரு படத்தைத் தள்ளி வைத்துவிட்டு 6 படங்களுக்கு வழி விட்ட ‘தல’, ‘வாழு, மற்றவர்களை வாழ விடு’ எனக் கோஷமிட்டு ‘டமாரம்’ அடித்து வருகின்றனர். இதுக்குப் பேருதான் உருட்டா? - தீமா