வலைஞர் பக்கம்

ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியம்... இப்ப தும்முனாதான் கரெக்ட்டு!

செய்திப்பிரிவு

காரணமே இல்லாமல் ஏதாவது ஒரு வாக்கியத்தை, போட்டோவை இணையவாசிகள் திடீரென சமூக வலைதளங்களில் வைரலாக்குவது வழக்கம். அப்படி, இளையராஜாவின் இசையில் உருவான ஒரு பாடலின் வரி இப்போது டிரெண்டாகி உள்ளது. 1992-ல் வெளியான ‘சின்னத்தாயி’ என்கிற படத்தில் இடம்பெற்ற ‘நான் ஏரிக்கரை...’ என்கிற பிரபலமான பாடலின் ஒரு வரி மட்டும் தற்போது வைரலாகியுள்ளது. ‘ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியம், என்னைப் பொறுத்தவரை காவியம்’ என்கிற வரிதான் அது.

இந்த வரியைப் பதிவிட்டு நெட்டிசன்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்களை, பாடல்களைப் பற்றி பகிர்ந்து வருகின்றனர். அதாவது ‘யார் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை இவை எனக்குப் பிடித்தவை’ என்கிற அர்த்தத்தில் புரிந்துகொண்டு சில விஷயங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

‘எனக்கு ‘கங்குவா’ படம் பிடித்திருந்தது, ஆனால் இணையச் சமூகம் ஒதுக்கி வைத்துவிட்டது’ எனப் பதிவிட்டு ‘கங்குவா’ படத்துக்கு சிலர் புரொமோஷனும் செய்தனர். இப்படி ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியாகி ‘ஃப்ளாப்’ ஆன திரைப்படங்கள், கொண்டாடப்படாத பாடல்களின் பெயர்களைப் பதிவிட்டு ‘இப்ப தும்முனாதான் கரெக்ட்டா இருக்கும்!’ என்கிற தொனியில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்! - தீமா

SCROLL FOR NEXT