ஆயிரக்கணக்கான பேர் சுட்டுக் கொல்லப்பட்ட ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு காரணமான பஞ்சாப் மாகாண ஆளுநர் மைக்கேல் ஓட்வியரை 21 ஆண்டுகள் காத்திருந்து, அவரது சொந்த நாட்டிலேயே சுட்டுக் கொன்ற மாவீரன்தான் உத்தம்சிங்.
பஞ்சாப் மாநிலம் சாங்ரூர் மாவட்டத்தில் உள்ள சுனம் என்ற ஊரில் கடந்த 1899 டிசம்பர் 26-ம் தேதி பிறந்தார் உத்தம்சிங். 7 வயதில் தாய் - தந்தையரை இழந்தார். ஆதரவற்றோர் இல்லத்தில் அண்ணனுடன் வளர்ந்தார். தனது 18 வயதில் ஒரே அண்ணனையும் இழந்தார். பிறகு, அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலா பாக் அருகே பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
1917-ல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒடுக்க நீதிபதி சிட்னி ரவுலட் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பரிந்துரை அடிப்படையில், 1919 மார்ச் 18-ம் தேதி ரவுலட் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்கீழ் எந்த ஒரு இந்தியரையும், எந்த காரணமும் இல்லாமல் கைது செய்து, விசாரணை நடத்தாமல் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடியும்.
இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பஞ்சாப் மாகாணம் அமிர்தசரஸ் நகரின் ஜாலியன்வாலா பாக் பகுதியில் 1919 ஏப்ரல் 13-ம் தேதி அறுவடை திருநாளாம் பைசாகி நாளில் கண்டன கூட்டம் நடைபெற்றது. சுமார் 20 ஆயிரம் பேர் கூடியிருந்த அந்த இடத்தில், அனைவருக்கும் குடிநீர் கொடுத்தார் உத்தம்சிங்.
பழி தீர்க்க சபதம்: ஜாலியன்வாலா பாக்கில் நாலாபக்கமும் வீடுகளின் பின்புற சுவர்கள் இருந்தன. உள்ளே செல்ல 5 மிகக்குறுகிய சந்துகள். ஒரேயொரு பெரிய சந்து. அதன் வழியே ஒரே நேரத்தில் 6 பேர் நுழையலாம். இதன் வழியாக ஜெனரல் டயர் நுழைந்து, மண் மேடை மீது ஏறி, 10 நிமிடத்துக்குள் 1,650 ரவுண்டுகள் சுட்டான். இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பிணங்களுக்கு அடியில் கிடந்த 20 வயது உத்தம்சிங், சிரமப்பட்டு எழுந்து நின்று கதறி அழுதான். “என் மக்கள் இறப்புக்கு பழிதீர்ப்பேன்” என சபதம் ஏற்றான்.
துப்பாக்கிச் சூட்டில் 1,800 பேர் உயிரிழந்ததாக அமிர்தசரஸ் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுமித் தெரிவித்தார். ஆனால், வெறும் 369 பேர் மட்டுமே தனது துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாக ஜெனரல் டயர் அறிக்கை அனுப்பினார். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு முன்அனுமதி தராத பஞ்சாப் மாகாண ஆளுநர் மைக்கேல் ஓட்வியர், அந்த அறிக்கையில் Ratified (ஏற்கப்பட்டது) என்ற ஒரு வார்த்தையை எழுதி, பின்னேற்பு வழங்கிய பாவத்தை செய்தார்.
மக்கள் கொதித்தெழுந்தனர். ஆனால், ஹண்டர் விசாரணை குழு யாரையும் தண்டிக்கவில்லை. ஜெனரல் டயர் இங்கிலாந்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார் அவ்வளவுதான். 1919-ல் பணிக்காலம் முடிந்ததால் மைக்கேல் ஓட்வியர், ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு சரி. இந்த கொடுமைகளை பொறுக்காத உத்தம்சிங், அவர்களை பழிதீர்க்க 1933-ல் இங்கிலாந்து சென்றார். 1937-ம் ஆண்டு முதல் லண்டன் ஷெப்பர்ட் புஷ் குருத்வாராவில் இருந்து செயல்பட்டார். இடைப்பட்ட காலத்தில் பக்கவாத நோயால் ஜெனரல் டயர் காலமானார். அதனால் மைக்கேல் ஓட்வியரை பழிதீர்க்க காத்திருந்தார் உத்தம்சிங்.
1940 மார்ச் 13-ம் தேதி லண்டன் மாநகர், காக்ஸ்டன் ஹாலில் மைக்கேல் ஓட்வியரின் நிகழ்ச்சி நடைபெற்றது. கோட், சூட், வேறொருவரின் அடையாள அட்டை, துப்பாக்கியுடன் அங்கு வந்த உத்தம்சிங், 4-வது வரிசையில் காத்திருந்தார். மைக்கேல் ஓட்வியர் பேசி முடித்ததும், மக்கள் கலையத் தொடங்கினர். உத்தம்சிங் கையில் ரிவால்வருடன் அவரை நெருங்கினார். தன்னிடம் கைகுலுக்க வருவதாக நினைத்தார் மைக்கேல். கொஞ்சமும் தாமதிக்காமல் மைக்கேலை சுட்டு வீழ்த்தினார் உத்தம்சிங்.
‘தோட்டாக்கள் மைக்கேல் ஓட்வியரின் விலா எலும்புகளை துளைத்து இதயத்தின் வலதுபக்கமாக வெளியேறியது’ என ‘THE PATIENT ASSASSIN’ (A True Tale of Massacre, Revenge and the Raj) என்ற நூலில் அனிதா ஆனந்த் எழுதியுள்ளார்.
தூக்கு தண்டனை: உத்தம்சிங் ஓடி ஒளியவில்லை. உண்மையை ஒப்புக்கொண்டார். சிறையில் 41 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவரது வாயில் உணவு திணிக்கப்பட்டது. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை கேட்டதும் மகிழ்ச்சியடைந்தார். இந்திய மண்ணில் தனது உடல் புதைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். 1940 ஜூலை 31-ம் தேதி லண்டனின் பென்டோ சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். அங்கேயே அவரது புகழுடல் புதைக்கப்பட்டது. இந்திய மண்ணில் தன் உடல் புதைக்கப்பட வேண்டும் என்ற அவரது ஆசை 1947-ல் இந்திய அரசின் நடவடிக்கையால் நிறைவேறியது. இந்திய சுதந்திர வரலாற்றில் உத்தம்சிங்கின் உயிர்த்தியாகம் ஈடு இணையற்றது.
கட்டுரையாளர்: முனைவர் எம்.எஸ். முத்துசாமி, முன்னாள் காவல்துறை தலைவர்