வலைஞர் பக்கம்

ஊர் சண்டையை இழுத்துவிட்ட கோவை உணவுத் திருவிழா..!

செய்திப்பிரிவு

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கொங்கு உணவுத் திருவிழா சொதப்பலில் முடிந்ததால், ஊர் சண்டையை மூட்டிவிட்டு வேடிக்கைப் பார்த்து வருகிறது இணையச் சமூகம்.

தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் சார்பில் பல்வேறு கேட்டரிங் நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்திய இத்திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் மூலம் சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்படும் எனவும், ரூ. 799-க்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் 400 வகையான உணவுகளை ருசிக்கலாம் எனவும் ‘விளம்பி’யிருந்தார்கள். வீக் எண்ட் என்பதால் திருவிழாவில் இரண்டு நாளும் கூட்டம் அள்ளியது.

அந்தக் கூட்டத்தில் பலர் உணவுக்காக தட்டுடன் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவின. இதைப் பகிர்ந்து ‘கோவையன்ஸ்னா இப்படித்தான், ஈமு கோழி ஸ்கேம் போல இது உணவுத் திருவிழா ஸ்கேம்’ என மற்ற ஊர் இணையவாசிகள் கலாய்க்க, ‘2023-ல் சென்னையில் நடைபெற்ற கான்சர்ட் ஸ்கேம் மறந்து போச்சா?’ என கோவைவாசிகள் திருப்பித் தாக்க, சமூக வலைதளங்களில் ‘ஊர் சண்டை’ பஞ்சாயத்து காரசாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது! - தீமா

SCROLL FOR NEXT