வலைஞர் பக்கம்

திண்ணை: விட்டல் ராவுக்கு விளக்கு விருது

செய்திப்பிரிவு

எழுத்தாளர் விட்டல் ராவ் பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளி. ஓவியம் பயின்றவர். சினிமா பற்றி நுட்பமான அறிவும் கொண்டவர். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். ஆனால், தமிழில் எழுதியவர். ஓவியர்கள், அந்தக் கலையின் சவால்கள் சார்ந்து இவர் எழுதிய ‘காலவெளி’, தமிழின் தனித்தன்மை கொண்ட நாவல்.

தொழிற்சங்க அனுபவத்தில் ‘காம்ரேடுகள்’ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். ஒரு சிற்றூரில் தாதுப் பொருள் கண்டெடுத்த பின் மாறும் வாழ்க்கையை ‘போக்கிடம்’ நாவலில் பதிவுசெய்துள்ளார். தமிழகக் கோட்டை, சென்னை பழைய புத்தகக் கடைகள் பற்றிய இவரது கட்டுரை நூல்கள் வழி இவரது வரலாற்று ஆர்வம் புலப்படும். தமிழில் அதிகம் கவனம்பெறாத மெல்லிய நடைக்குச் சொந்தக்காரர் விட்டல் ராவ். விளக்கு விருது அவர் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. இவருடன் சங்க இலக்கியத் தொகை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்டும் விருது பெறுகிறார். இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும் நினைவுப் பரிசும் அளிக்கப்படும்.

ஊட்டி புத்தகக் காட்சி

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 27ஆம் தேதி வரை நீலகிரி புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது. இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி இலக்கிய உரைகளும் வழங்கப்படவுள்ளன. இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை பதிப்பகம் (அரங்கு எண் 26) கலந்துகொண்டுள்ளது. இங்கு இந்து தமிழ் திசை வெளியீடுகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்

SCROLL FOR NEXT