சென்னை: மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் கற்பகாம்பாளை போற்றும் எண்ணற்றப் பாடல்களை எழுதி குறுந்தகடுகளாக வெளியிட்டிருப்பவர் கற்பகதாசன் எனும் புனைப்பெயரைக் கொண்ட மருத்துவர் ஸ்ரீதரன். கடந்த 1998-ல் முதன் முதலாக கற்பகாம்பாளை தரிசித்த கணம் முதல் அன்னையால் ஆட்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு பாடலையும் ஒட்டி அவருக்குள் எழுந்த ஆன்மிக அனுபவங்களை பக்திச் சுவையுடன் ரசிகர்களுடன் தரன் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, “கற்பகாம்பாள் குறித்த பாடல்களை குறுந்தகடாக வெளியிடும் முயற்சியைத் தொடங்கியபோது, முகப்பு ஓவியத்தை ஓவியர் பத்மவாசன் வரைந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தக் கொண்டிருந்தேன். கற்பகாம்பாளை மையமாக வைத்து ஓர் ஓவியக் கண்காட்சி நடத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பத்மவாசன் தானாக முன்வந்து, முகப்பு ஓவியம் வரைந்து தரட்டுமா? என்று கேட்டது தெய்வ சங்கல்பம்தான்” என்று கூறினார்.
கற்பகாம்பாளைத் தவிர, அண்ணாமலையார், முருகன், காஞ்சி பெரியவர் உள்ளிட்ட பலரைப் பற்றியும் மருத்துவர் ஸ்ரீதர் எழுதியிருக்கும் பாடல்களை பிரபல பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் பாடியுள்ளனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.வி. தர்மகிருஷ்ணன், “மருத்துவராக அறிமுகமான ஸ்ரீதர், மருத்துவர் என்பதைத் தாண்டி ஆன்மிகப் பணிகளையும் சமூகப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறார். இந்தப் பணிகளைச் செய்வதற்காகவே அறக்கட்டளை ஒன்றையும் நிறுவியிருக்கிறார்” என்றார்.
நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக, மருத்துவர் ஸ்ரீதர் எழுதிய ‘அம்புலியின் முகத்தில் அழகு முகம் கண்டேன்’ பாடலுக்கு ஏ.வி. தர்மகிருஷ்ணனின் மகள்வழிப் பேத்தி திரிஷ்யா நேர்த்தியான அபிநயங்களுடன் பரதநாட்டியம் ஆடினார்.
முன்னதாக, ஆர்.ஆர். சபாவின் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். சபாவின் தலைவர் ஏ.ஆர்.சந்தானகிருஷ்ணன், ‘அற்புதமே கற்பகம்’ என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்தியது” என்றார்.