வலைஞர் பக்கம்

அன்றைய சென்னை: மெரீனா கடற்கரை

சரித்திரன்

மெரீனா, உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், மனதை லேசாக்கும் காற்றை அள்ளித்தருவதுடன் உங்கள் கால்களை நனைத்து உள்ளத்தைக் குளிரச் செய்யும் மெரீனா தோன்றிய கதை தெரியுமா?

மவுண்ட் ஸ்டூவர்ட் என்னும் ஆங்கிலேயர் 1870-ம் ஆண்டு சென்னை வந்துள்ளார். வரும் முன் தன் நண்பரிடம் சென்னை போகும் விஷயத்தைச் சொல்லியுள்ளார். உடனே அவர், “மறக்காமல் அங்கிருக்கும் கடற்கரைக்குச் செல். கொஞ்ச நேரம் அங்கிருந்தால்கூடப் போதும். அதுவே நல்ல அனுபவமாக இருக்கும்” என்று சொல்லியிருக்கிறார்.

சென்னைக் கடற்கரை ஸ்டூவர்ட்டை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. குளிர்ந்த கடல் காற்றைத் தேடி தினம் ஆயிரக் கணக்கான மக்கள் வந்துபோகும் கடற்கரை இன்னும் அழகாக இருக்க வேண்டாமா என்று நினைத்தார். தனக்கு அதற்கான அதிகாரம் கிடைத்தால் தானே அதைச் செய்ய வேண்டும் என்றும் நினைத்துக்கொண்டார்.

1881-ல் அவர் சென்னையின் ஆளுநராகப் பதவியேற்றார். சென்னைக் கடற்கரையை அழகு படுத்தும் எண்ணத்தை உடனே செயல்படுத்தினார். கடற்கரையைச் சுற்றி அழகான சாலை உருவானது.

எல்லா வேலைகளும் முடிந்த பிறகு, கடற் கரைக்கு ஒரு பெயர் சூட்ட வேண்டுமே என்று நினைத்திருக்கிறார். சிசிலித் தீவின் ஓவியங்களின் அடிப்படையில் மெரீனா என்ற பெயர் அவர் நினைவுக்கு வந்தது. அந்தப் பெயரையே, நம் கடற்கரைக்கு வைத்துவிட்டார்.

SCROLL FOR NEXT