சமூகநலத் துறையின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் குறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் விளக்குகின்றனர்.
சமூகநலத் துறையில் என்னென்ன திருமண நிதியுதவித் திட்டங்கள் உள்ளன?
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு கணவரை இழந்தோரின் மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு கணவரை இழந்தோர் மறுமண நிதியுதவித் திட்டம் ஆகியவை உள்ளன.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை எவ்வளவு?
இதில் இரு வகை உள்ளன. திட்டம்-1, திட்டம்-2 ஆகியவற்றின் கீழ் பெண்களுக்கு திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. திட்டம் 1-ன் கீழ் ரூ.25 ஆயிரம் மற்றும் நான்கு கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதே நேரம், தனியார் டுடோரியல் மையத்தில், பள்ளி வாயிலாக அல்லாமல் நேரடியாக 10-ம் வகுப்பு படித்தவர்கள் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பழங்குடியினப் பெண்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் 5-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
மூவலூர் ராமாமிர்தம் திட்டம் 1-ன் கீழ் நிதியுதவி பெற, திருமணத்தின்போது 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். திருமணம் முடிந்த பின்னர் விண்ணப்பித்தால் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பதாரர் தாங்கள் வசிக்கும் பகுதியின் உள்ளாட்சி நிர்வாக ஆணையர் அல்லது அந்தந்த மாவட்ட சமூகநல அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்று நகல், மதிப்பெண் பட்டியல் நகல், வருமானச் சான்று, திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நிதியுதவி திட்டம் 2-ல் வழங்கப்படும் உதவித் தொகை எவ்வளவு?
திட்டம் 2-ன் கீழ் பட்டம், பட்டயம் படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி, 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. கல்லூரி, தொலைதூரக் கல்வி மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தநிலைப் பல்கலைக்கழங்களில் படித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டயப் படிப்பை பொறுத்தவரை தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியும்.
(மீண்டும் நாளை சந்திப்போம்)