‘எங்கெங்கும் தொல்லைகள்!’ என்று அலுத்துக் கொள்பவர்களிடம் சென்று ‘தியானம் செய்யுங்கள், உங்கள் சுவாசத்தை கவனியுங்கள்! யோகா பழகுங்கள்! பரிகாரம் செய்யுங்கள்!’ என்று பல விதங்களில், உலகத் தொல்லைகளிலிருந்து விடுபடும் முறைகளைப் பயிற்சியாக்கி, பல ஆன்மிக இயக்கங்கள் புகழுற்றுத் திளைப்பதை நாம் நாள்தோறும் கண்டு வருகிறோம். இந்த ஆன்மிகக் குரல்கள் ஒருவகையில் நமது பழந்தமிழ் இலக்கியங்களை அடையாளம் காண உதவுகின்றன. அவர்கள் கூற்றுகளும் இலக்கிய வாசகங்களும் ஒன்றாக நினைவுக்கு வருகின்றன. வள்ளுவரும் தனது எழுதுகோலோடு நம் அகக்கண்களில் தோன்றுகிறார்.
‘அவன் [வள்ளுவர்] அழைத்துச் செல்லாதது இல்லை
திருக்குறளில் இல்லாதது இல்லை’ என்ற பாரதிதாசன் கூற்று தவறாகவா இருக்கும்? எல்லாத் தொல்லைகளிருந்தும் விடுபடும் வழி, வள்ளுவத்தில் கிடைக்கிறது. வள்ளுவர் யோகப் பயிற்சியை நமக்கு காட்டவில்லை; சுவாசப் பயிற்சியை நமக்கு அறிமுகம் செய்யவில்லை; அதற்கும் அடிப்படையான, உயிர்நோக்கும் கலையை நமக்கு வழங்குகிறார். மனிதனின் அடிப்படையான உயிர்க்கு உறுதியாக, வள்ளுவர் அறத்தைக் காட்டுகிறார்.
'அறமே உயிர்க்கு ஆக்கம்’ என்ற வள்ளுவர் அதோடு நிற்கவில்லை. இதை விட வேறொன்றும் அவர் சொல்கிறார். உயிர்க்கு வேறு ஆக்கம் இல்லை என்று பொருள்படும்படி, ‘அறத்தினை விட ஆக்கம் எவனோ?’ என்று வினாவாகத் தொடுகிறார். அதைத் தவிர வேறெதுவும் ஆக்கம் தராது என்றே கூற வருகிறார். ஆக்கம் என்பதை அடிப்படை வளர்ச்சி எனக் கொள்ளலாம். அறமே மனித உயிர்க்கு முதல் துணை என்கிறார். அதையே பற்றிக் கொள்ள வேண்டும் என்பது அவர் கொள்கை.
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு (31)
உயிர்த்துடிப்பின் போக்கை உணர்ந்து அதை அறத்தின் வழி செலுத்தினால் மக்களுக்கு யாதொரு துன்பமும் நேராது என்பது அவர் உளக்கருத்து. உயிருக்கு அறத்தைத் தவிர வேறு பற்றுக்கோள் வேண்டாம் என்கிறார். அறம் அத்தகைய வலிமை படைத்திருப்பதாக அவர் கருதியாதாலேயே அதிகாரத்தையும் அறன் வலியுறுத்தல் என்றெழுதினார். அவர் வேறொன்றையும் சொல்கிறார். கேட்போம்!
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு (32)
அறவழி மறத்தலின் கேடில்லை என்கிறார். ஆக்கம் என்ற சொல் இரு குறள்களிலும் பயின்று வருவதை நோக்க வேண்டும். இரண்டு குறள்களையும் ஒன்றாக கற்க வேண்டும் என்பதே அவர் எண்ணம். உயிருக்கு அடிப்படை உறுதி அறமே என்று அவர் கூறுகிறார். மாந்தரின் மனநிலை அறிந்த வள்ளுவர், அவர்கள் உயிர்குணங்களால், அறத்தை மறந்து செயல்படத் துணிவர். அதனாலேயே இரண்டு குறட்பாக்கள் வழியாக, உயிர் ஆக்கத்தை மக்கள் கவனிக்கும் பொருட்டு எடுத்துரைத்தார்.
"கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கு" என்று பாண்டிய நெடுஞ்செழியன் ஆராயாமல், அடிப்படை சிந்தனை செலுத்தாது வழங்கிய தீர்ப்பு நிகழ்த்தியதால் ஏற்பட்ட பேரழிவு மதுரை நகரையே தீக்கிரையாக்கியது. அறப்பிறழ்வு நடத்திய பெருங்கேடு அது. மனைவியின் ஊடலை தணிக்க எண்ணி, அவள்பின் செல்வதற்கிடையில், சிலம்பை விரைந்து கைக்கொள்ளும் ஆவலில், பாண்டிய நெடுஞ்செழியன் அந்தப் பெருந்தவற்றை இழைக்கிறான். ஒரு சிறு துளி சிந்தையை உயிரின் போக்கிலே அவன் செலுத்தியிருப்பானேல் கோவலனும் கொல்லப்பட்டிருக்க மாட்டான், அத்தனை இன்னல்கள் நடந்திருக்காது, மதுரையும் அழிந்திருக்காது.
உயிர்குணமான சினமும், காமமும் ஒன்றே கூடும் காட்சி அது. அவ்விடத்தில் நடந்த தவறு மன்னன் தன் உயிர் போக்கை அறியாததே! மன்னன் தானும் உயிர்விட்டு, அரசியும் இறந்து, ஆட்சியும் கவிழும் காட்சி அது. வேறொரு இடத்திலும் அவர் மனிதர்கள் இயற்கை குணத்தை பற்றிக் குறிப்பிடுவது எண்ணத்தக்கது. அவர் அன்பில்லா மாந்தர்களை என்பில்லா புழுவோடு ஒப்பிடுகிறார். என்பில்லா புழுவானது, ஊக்க மிகுதியால் அறிவின்மையால் வெயிலில் பயணித்து எங்கனம் துன்புறுமோ, அங்ஙனம் அன்பைப் போற்றா மனிதர்கள் வருத்தமுறுவர் என்பார். அதாவது, உயிரின் போக்கு கட்டற்று, புழு போல அறிவற்றுச் செல்லும் வகைத்து.
அதைக் கைக்கொள்ளாவிடின் பெருந்துன்பம் விளையும் என்பதே வள்ளுவர் கண்ட முடிபு. இதனால், மானுடர் நலன் காக்கக் கருதிய வள்ளுவர், இரண்டு குறள்களில், அறம் உயிர்க்கு உறுதியாய் இருப்பதை வலியுறுத்தும் வண்ணம் கூறியுள்ளார். அறத்தை மறந்து ஊக்க மிகுதியால் செயல்பட்டால் பெருங்கேடு விளைவது உறுதி, அதை விட வேறு கேடில்லை என்பதைக் காட்ட ‘மறத்தலின் ஊங்கில்லை கேடு’ என்கிறார். வள்ளுவர் பிறவிடங்களில், உயிரை வளப்படுத்தும் செல்வங்களாக மனநலத்தையும் அதோடு தொடர்புடைய தீநெறிக்கண் செல்லாத அடக்கமுடைமையையும் காட்டுகிறார்:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு (122)
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும் (457)
உயிருக்கு வளம் தரும் செல்வங்களாக இவற்றைப் போற்றி அறத்தை உறுதிப்பொருளாக உயிர்மேற்கொண்டால், உயிர் உய்யும் என்பதே வள்ளுவர் உரைப்பது. உயிருக்கு ஊதியமாக அதாவது பயனாக அமைவது ஈகையும் அது சான்ற புகழும்
மற்றொரு வள்ளுவர் குறிப்பிடுவது, இவ்விடத்தில் எண்ணத்தக்கது. வள்ளுவர் வகுத்த வழி மிக எளியது. ஒருவர் உயிர் போக்கினை நோக்கிச் செயல்படுவரேல், அவரை வருத்தமடையச் செய்கின்ற துன்பங்கள் அணுகா என்பதாம். யாதொரு செயலை செய்யப் புகும்போதும், அது அறன் வழிபட்டதா, என்று ஒரு கணம் எண்ணிச் செயல் வேண்டும். இந்த உயிர் நோக்கும் பயிற்சியை அனைவரும் கைக்கொள்ள வேண்டும். இதை செயல்படுத்தினால் நமக்கு வேறெந்த ஆன்மிக குருவிற்கும் அவசியமில்லை. வாழும் கலை மன்றங்களும் உள்நோக்கிய பயண இயக்கங்களும் அவசியமில்லை. வள்ளுவர் வாக்கொன்றே போதுமானது.
நமது தமிழ் இலக்கியங்கள் போல, வரலாற்றின் மைல் கற்களாக அமைந்துள்ள இலக்கிய வளங்கள், வேறெந்த மொழியிலும் இல்லை என்று உறுதியாக சொல்லலாம். காலவெளியெங்கும், மற்ற உலக இலக்கியங்கள் போலன்றி தமிழ் இலக்கியங்கள் நிறைந்து நிற்கின்றன. அதில் கிடைக்காத தீர்வுகளே இல்லை என்று சொல்லலாம். அதைப் பயில்வதே நம் வாழ்வை செம்மையாக்குதற்கான முதல் வழியாகும். வள்ளுவம் அதில் முதன்மையானது என்றால் மிகையாகாது. - மு.பொன்னியின் செல்வன், ஐஐஎஸ் அதிகாரி