ஏணிகளில் ஏறுவார்கள்
ஏணிகளோ ஏறுவதில்லை
- இது ஆசிரியர்களுக்குப் பொருந்தும் நய உரை நல்கை.
தமிழ்நாடு அரசு தேர்வாணைய உறுப்பினராக இருந்த பேராசிரியர் முனைவர் பாலசுப்பிரமணியன் தனது 81- வது வயதில் மறைந்துவிட்டார்.
நாமக்கல் நகரில் பிறந்த அவர், பள்ளிக்கல்வியை நாமக்கலிலும், பொருளாதார முதுகலைக் கல்வியை திருச்சி, புனிதஜோசப் கல்லூரியிலும் படித்து முடித்தார். நாமக்கல் நகரில் உள்ள அறிஞர் அண்ணா ஆண்கள் அரசினர் கலைக் கல்லூரியின் பேராசிரியரானார். அப்போது அந்த கல்லூரியில் தாவரவியல் பட்டப் படிப்பு மாணவனாக அடியேன் இருந்தேன்.
அக்காலகட்டத்தில் பிளானிங் ஃபோரம் எனப்படும் திட்டக்குழுவை, பாலசுப்ரமணியம் தான் தலைமை ஏற்று நடத்தி வந்தார். அதில் அவர் என்னையும் உறுப்பினனாகச் சேர்த்துக் கொண்டார். அவரின் பணிக் காலத்தில் அடியேனை முன்னிலைப்படுத்தி, ஏராளமான சமூக நலப் பணிகளை அரங்கேற்றி, நடத்தி முடித்தார். அத்தகைய முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும்.
நாமக்கல் கல்லூரிக்கு அருகே ஒரு கிராமப் பகுதி இருக்கிறது. அங்கே பார்த்தீனியம் செடிகள் புதர் புதராகப் பெருமளவில் மண்டிக் கிடந்தன. அவற்றால் அந்த கிராமத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் நொடிகள் நீடித்து வந்திருந்தன.
இவற்றைக் கவனித்த பாலசுப்பிரமணியம், "இதற்கு ஏதேனும் தீர்வு காண வேண்டும்" என்று திட்டமிட்டார்.
அதன்படி திட்டக் குழு உறுப்பினர்களாக இருக்கும் ஒரு படையை அழைத்துக் கொண்டு அந்த கிராமத்தில் முகாமிட்டார். அடியேனும் அதில் ஆஜர். பல நாட்கள் சமூகப் பணிகள் நடந்தன. பார்த்தீனியம் விஷச்செடிகள் பூரணமாக அகற்றப்பட்டன. கிராம மக்களும் நோய் நொடியில் இருந்து மீண்டு சுகச்சுழலைச் சுவாசிக்கத் தொடங்கினர்.
ஆனால் அந்தோ... பார்த்தீனியம் செடிகளை அகற்றுகின்ற பணிகளில் ஈடுபட்ட பாலசுப்ரமணியத்திற்கு நோய் தாக்கியது. அதனால் தோல் ஒவ்வாமை நோய்க்கு உள்ளானார். முகம் முழுவதும் கருமை படர்ந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். ஆனாலும் அவர், தன் உடல் நோயையும் பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே வந்தார். "எக்கோ பாலு சார்" என அவர் அன்போடு விளிக்கப்பட்டுவந்தார்.
இத்தகைய சூழலில் தான், "முனைவர் பட்டத்தைப் பெற வேண்டும்" என்ற துடிப்பு அவருக்கு ஏற்பட்டது. ஆகவே அவர் இதற்காக மேற்கல்வி விடுப்பு எடுத்துக்கொண்டு, சென்னைக்கு வந்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில்,அதன் தலைவர் மற்றும் பேராசிரியரான முனைவர் நாக நாதனைத் தொடர்பு கொண்டார்.
இருவருமே கலைஞருக்கும் முரசொலி மாறனுக்கும் நெருக்கமானவர்கள் என்ற காரணத்தால் நாகநாதனுக்கும் பாலசுப்பிரமணியனுக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது.
எனவே திட்டமிட்டபடி நாக நாதனை நெறியாளராகக் கொண்டு, தன் முனைவர் பட்டத்தை முறைப்படி வென்றெடுத்தார் டாக்டர் பாலசுப்பிரமணியன்.
அதன் பின்னர் திமுகவின் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் அவருக்கான மதிப்பும், மரியாதையும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வந்தது. நான் மாணவனாக இருந்தபோது அவருக்கு மதிப்பு மிகு சீடனாகவே இருந்தேன். அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் மாணவராக இருந்த போதும், நான் அவருடன் அதே பாணியிலேயே பழகினேன். ஆனால் அவரோ என்னை நண்பருக்குரிய தகுதியில் வைத்து பெருமிகு மரியாதை வழங்கி வந்தார்.
பிளானிங் ஃபாரம் அமைப்பில் என் மாணவப் பருவம் கழிந்து முடிந்த நேரத்தில், எனக்கான சான்றிதழைக் கொடுத்தார். எல்லோருக்குமான சான்றிதழாக அது இல்லாமல், தனிப்பட்ட முறையில் 'எக்ஸலண்ட் ' என்ற வார்த்தையோடு, மேலும் பல புகழ் வாசகங்களை எழுதிக் கையொப்பமிட்டு, சீலிட்டுக் கொடுத்தார். இன்னும் அதனை நான் மிகுந்த பெருமையோடு போற்றிப் பாதுகாத்து வருகிறேன்.
பணிமூப்பு ஒரு காரணமாக இருந்தாலும், அவரின் அனுபவங்கள் காரணமாக, அவர் மறைவைத் தாங்க முடியாமல் அடியேன் துடிக்கின்றேன். - ஆர்.நூருல்லா, மூத்த பத்திரிகையாளர்.