வலைஞர் பக்கம்

உ.வே.சா. விருது: நாறும்பூநாதன் இலக்கியத் திருவிழாவின் ஊற்றுக் கண்

செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் மக்களின் இலக்கிய முகமாக இருப்பவர் எழுத்தாளர் நாறும்பூநாதன். அவருக்குத் தமிழ்நாடு அரசு உ.வே.சா. விருது வழங்கிக் கெளரவித்துள்ளது. நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் பத்துக் கட்டுரைத் தொகுப்புகளும் இவரது இலக்கியப் பங்களிப்பு. தற்போது சிறுவர் நூல்களும் எழுதிவருகிறார்.

தமிழ்நாடு அரசு முன்னெடுப்பில் திருநெல்வேலியில் ஒருங்கிணைக்கப்படும் பொருநை இலக்கியத் திருவிழா, நெல்லை புத்தகக் காட்சி ஆகியவற்றின் பின்னணியில் நாறும்பூநாதனின் பங்கும் இருக்கிறது. 2014க்குப் பிறகு புத்தகக் காட்சி திருநெல்வேலியில் நடைபெறவில்லை என ஆட்சியரிடம் மனு கொடுத்து, இந்த வாசிப்பு இயக்கத்துக்கு வித்தாக இருந்தவர் இவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க நண்பர்களுடன் சென்று அன்றைய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிடம் அதற்காக மனு கொடுத்தார். அன்று மாலையே மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தகத் திருவிழாவிற்கான (2017) வேலை தொடங்கப்பட்டது. 2022இல் புத்தகத் திருவிழாவோடு இலக்கியத் திருவிழாவும் நடத்தத் தமிழக அரசு தீர்மானித்தது. ஐந்து மண்டலங்களாகத் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டுவரும் இலக்கியத் திருவிழாவுக்குத் தொடக்கமாக அமைந்தது, திருநெல்வேலியில் நடத்தப்பட்ட பொருநை இலக்கியத் திருவிழாதான். அதன் தூண்களில் ஒருவர் நாறும்பூநாதன். இவரது யோசனையின் பேரில்தான் 97 அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான கையெழுத்துப் பத்திரிகைகள் மாநிலத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் அறிமுகப்படுத்தப்பட்டன. அரசு நடத்தும் சிறார்களுக்கான ‘தேன்சிட்டு’ இதழில் இந்தப் படைப்புகளில் சில வெளியிடப்பட்டன. விருதுநகரில் நடைபெற்ற கரிசல் இலக்கியத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராகவும் இவர் செயல்பட்டார். அதை ஒட்டி நூல்களைத் தொகுக்கவும் இவர் உறுதுணையாக இருந்துள்ளார்.

வெறும் இருபதே நாள்களில் ‘நெல்லைச் சீமையில் ஒரு நூற்றாண்டு’ சிறுகதைத் தொகுப்பும், ‘ஒரு நூற்றாண்டுக் கவிதைத் தொகுப்பும்’ இவரின் சீரிய முயற்சியால் வெளியிடப்பட்டன. எமக்குத் தொழில் எழுத்து மட்டும்தான் என்றில்லாமல் இலக்கியச் செயல்பாட்டாளராகவும் எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்துவருகிறார் நாறும்பூநாதன். இது பழந்தமிழைத் தேடிக் கோத்த உ.வே.சா.வின் பணிக்கு ஒப்பானது.

- நெல்லை மா. கண்ணன், படம்: வை.ராஜேஷ்

SCROLL FOR NEXT