ஜூலை 29, 1981-ல் 74 நாடுகளின் 10 கோடி மக்கள் தொலைக் காட்சியில் நேரடியாகக் கண்டுகளித்த திருமணம் அது. அழகான ஆங்கில ஆசிரியையான டயானாவின் கையில், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் முத்தமிடும் காட்சி உலகப் பிரசித்தம்.
ஆசிரியை என்றாலும் டயானா பிரபு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். இந்தத் தம்பதிக்கு வில்லியம், ஹாரி என்று இரண்டு குட்டி இளவரசர்கள் பிறந்தனர்.
எனினும், இந்தத் தம்பதியின் குடும்ப வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள். அவர்களது மகிழ்ச்சியான தருணங்களையே பரபரப்பாக வெளியிட்ட பிரிட்டன் பத்திரிகைகள், பிரச்சினைக்குரிய விஷயங்களை விட்டுவைப்பார்களா என்ன? இருவருக்கும் இடையிலான சின்னப் பிரச்சினைகள்கூடப் பூதாகாரமாக்கப்பட்டது. ஒருகட்டத்தில், ராணி எலிசபெத் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு சொன்னார். பேசாமல் இருவரும் பிரிந்துவிடுங்கள் என்பதுதான் அந்தத் தீர்வு. அதன்படி,1996-ல் இதே நாளில் இருவரும் சட்டபூர்வமாக விவா கரத்து செய்துகொண்டனர். விவாகரத்துக்குப் பின்னரும் வேல்ஸ் இளவரசி என்ற பட்டம் அவருக்குத் தொடர்ந்து இருக்கும் என்று முடிவுசெய்யப்பட்டது. அதேசமயம், எதிர்காலத்தில் அரியணை வேண்டும் என்று பிரச்சினை செய்யக் கூடாது என்றும் பேசி முடிக்கப்பட்டது.
அதன் பின்னரும் டயானாவின் தனிப்பட்ட வாழ்வுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருந்தன. 1997-ல் ஆகஸ்ட் 31-ல், பாரிஸில் நடந்த ஒரு கார் விபத்தில் டயானாவும் அவர் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த டோடி பயதும் உயிரிழந்ததுதான் அவரைப் பற்றிய பரபரப்பான கடைசிச் செய்தி. தனது அழகாலும், துணிச்சலான நடவடிக்கையாலும் உலக மக்களின் அன்பைப் பெற்றிருந்த டயானா, அன்றுடன் உலகத்திடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.