இந்திய பிரதமராக பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் ஆற்றிய அரும் பணிகள் அநேகம். அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா துறைகளிலும் தனது அரசு சாதனைகளை நிகழ்த்தினாலும், புற்றீசல் போல் கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டுகள், நேர்மையான மனிதரின் மனசாட்சியை உலுக்கி விட்டன. ஏறத்தாழ ஓர் உரை முழுதும் அது குறித்தே பேசினார். நாணயமான நேர்மையான நிர்வாகத்தின் மீது அவருக்கு இருந்த அக்கறை புலப்பட்டது. 2011 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ:
அன்பான நாட்டு மக்களே, 64-வது சுதந்திர தின நாளில் 120 கோடி இந்தியர்களை நான் மனதார வாழ்த்துகிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக வரலாற்று சிறப்புமிக்க இந்த செங்கோட்டையில் இருந்து உங்களுடன் நான் உரையாடுகிறேன். இந்த காலத்தில், வளர்ச்சிப் பாதையில் நாம் விரைவாக பயணித்து இருக்கிறோம்; பல துறைகளில் வெற்றி கண்டிருக்கிறோம். ஆனாலும் இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது என்பதை நான் அறிவேன். நமது நாட்டில் இருந்து அறியாமையும் வறுமையும் ஒழிக்கப்பட வேண்டும். மேம்பட்ட சுகாதார சேவைகளை சாமானியனுக்கு வழங்க வேண்டும். நமது இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்புகளை நல்க வேண்டும்.
நம் முன்னே உள்ள பாதை நீளமானது, கடினமானது. குறிப்பாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தற்போதுள்ள சூழல் இவ்வாறு உள்ளது - புரிதலுடன் அடக்கத்துடன் நடந்து கொள்ளவில்லை எனில் நமது பாதுகாப்பும் வளமையும் மோசமாக பாதிக்கப்படலாம். உலகப் பொருளாதாரம் மந்தமாகி வருகிறது. வளர்ந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கில் பல அரேபிய நாடுகளில் அமைதியின்மை நிலவுகிறது. நமது வளர்ச்சியை தடுப்பதற்காக நாட்டில் தொல்லைகளை உருவாக்க சிலர் முனைகிறார்கள். இவையெல்லாம் நம் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால் இது நிகழ நாம் அனுமதிக்க மாட்டோம். நாம் அனைவரும் இணைந்து உழைத்தால் எந்த சவாலையும் நம்மால் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனாலும், தனிப்பட்ட அரசியல் நலன்களுக்கு மேலாக எழுந்து நாம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் கருத்தொற்றுமையைக் கட்டமைக்க வேண்டும்.
சகோதரர்களே சகோதரிகளே, நமது வீரர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகங்களின் மீது நவீன இந்தியா என்கிற கட்டிடத்தை எழுப்பி வருகிறோம். இவர்களின் கடின உழைப்பும் தியாகமும் வீண் போக அனுமதிக்க மாட்டோம். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம்.
சகோதரர்களே சகோதரிகளே, கடந்த ஏழு ஆண்டுகளில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக நமது அரசு பாடுபட்டு வருகிறது. நாட்டில் சமூக நல்லிணக்கத்துக்கான சூழலை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த ஏழு ஆண்டுகளில், நமது பொருளாதார வளர்ச்சி மிகவும் விரைவாக இருந்திருக்கிறது. 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார மந்தநிலையை மிஞ்சி, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரித்த போதும் இந்த வெற்றியை நாம் சாதித்து இருக்கிறோம்.
நாட்டில் சமமின்மையை குறைப்பதற்கு பாடுபடுகிறோம். கடந்த ஏழு ஆண்டுகளில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், மகளிர் மற்றும் குழந்தைகளின் தேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி இருக்கிறோம். மக்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தரும் சட்டங்களை இயற்றி உள்ளோம். கல்வி வேலை வாய்ப்பு தகவல் உரிமை சட்டங்களைத் தொடர்ந்து, மக்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தை விரைவில் இயற்ற இருக்கிறோம்.
கடந்த ஏழு ஆண்டுகளில் உலகின் வெவ்வேறு நாடுகளுடன் நமது உறவு வலுப்பெற்று இருக்கிறது, ஆழமாகி இருக்கிறது. நமது கடின உழைப்பின் விளைவாக நமக்கு சுயமரியாதை, தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.
சகோதரர்களே சகோதரிகளே, இந்த வெற்றிகள் சாதாரணமானவை அல்ல. உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக நாம் திகழ்வதற்கான திறன் நம்மிடம் இருப்பதை உலகம் இன்று அங்கீகரித்து இருக்கிறது. ஆனால் இந்த பெரும் நல்மாற்றத்திற்கு ஊழல் பெரும் தடையாக இருக்கிறது.
கடந்த சில மாதங்களில் பல்வேறு ஊழல் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. சிலவற்றில் மத்தியில் செயல்படுவோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். பிறவற்றில் மாநில அரசில் செயல்படுவோர் அடங்கியுள்ளனர். வெளிவந்துள்ள இந்த ஊழல் செயல்பாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இது நீதிமன்றங்களில் வழக்காக இருப்பதால் இது குறித்து நான் மேலும் சொல்லப் போவதில்லை.
இந்தப் பிரச்சினைகளை நாம் பரிசீலிக்கும் போது நமது நாட்டின் வளர்ச்சி கேள்விக்குறி ஆகிற சூழலை ஏற்படுத்தி விடக் கூடாது என்பது முக்கியமாகும். இதன் மீதான வாதம், இந்த சவால்களை எதிர்த்து வெற்றி காண முடியும் என்கிற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
ஊழல் பல வடிவங்களில் வெளிப்படுகிறது. சில உதாரணங்களில், சாமானிய மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களுக்கான நிதி, அரசு அலுவலர்களின் பைகளுக்கு சென்று விடுகிறது. வேறு சில உதாரணங்களில், அரசின் விருப்பத் தேர்வு குறிப்பிட்ட சிலரின் நன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது. அரசு ஒப்பந்தங்கள் தவறான நபர்களுக்கு தவறான வழியில் தரப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளை நாம் இனியும் தொடர அனுமதிக்க முடியாது.
ஊழலை ஒழிப்பதற்கு தனிப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கை எதுவும் இருப்பதாக நான் நம்பவில்லை. உண்மையில் நாம் அனைவரும் ஒரே சமயத்தில் பல்வேறு முனைகளில் செயல்பட வேண்டும். நமது நீதி பரிபாலன முறையை நாம் மேம்படுத்த வேண்டும். ஊழல்வாதிகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். நமது நீதி பரிபாலான முறை திறன்பட அமைந்தால், அரசு அலுவலர்கள் யாரும், அரசியல் அழுத்தம் அல்லது சொந்த ஆசை காரணமாக தவறான செயல்புரிவதற்கு முன்பு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்.
உயர் இடங்களில் ஊழலைத் தடுக்க வலுவான லோக்பால் வேண்டும். இதனை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளோம். எது மாதிரியான லோக்பால் சட்டம் வேண்டும் என்பதை இனி நாடாளுமன்றம் தான் தீர்மானிக்க முடியும். இந்த மசோதாவை ஏற்றுக்கொள்ளாதவர்கள், தமது கருத்துகளை நாடாளுமன்றத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அல்லது ஊடகங்களுக்கும் கூடத் தெரிவிக்கலாம். ஆனாலும் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் சாகும்வரை உண்ணாவிரதம் என்றெல்லாம் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
லோக்பால் வரம்புக்குள் நீதியத்தைக் கொண்டு வருதல் முறையல்ல. இத்தகைய சட்டப்பிரிவு, நீதியத்தின் சுதந்திரத்துக்கு எதிராகப் போய்விடும் என்று கருதுகிறோம். ஆனாலும், பதில் சொல்லக் கடமைப் பட்டதான நீதியம் கொண்ட கட்டமைப்பு நமக்கு வேண்டும். இதனை மனதில் கொண்டு தான் நாடாளுமன்றத்தில் நீதிய பொறுப்புணர்வு மசோதா (Judicial Accountability Bill) அறிமுகப்படுத்தி உள்ளோம். விரைவில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்.
எச்சரிக்கையுடன் செயல்படும் ஊடகம் மற்றும் விழிப்புணர்வு கொண்ட குடிமக்கள், ஊழலுக்கு எதிரான போரில் மிகவும் உதவிகரமாக இருக்க முடியும். இந்திய ஊடகம் அதன் சுதந்திரத் தன்மை மற்றும் தீவிர0 செயல்பாடுக்காக உலகம் முழுதும் அறியப்பட்டது. நாம் இயற்றியுள்ள தகவல் உரிமைச் சட்டத்தால், அரசாங்கத்தின் செயல்பாடுகளை மக்களும் ஊடகங்களும் கடுமையாக கண்காணிக்க முடிகிறது.
இந்தச் சட்டம் இல்லாத போது மக்களின் கண்காணிப்பில் இருந்து தவறிய அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் இன்று வெளிச்சத்துக்கு வருகின்றன. ஊழலை ஒழிப்பதில் இது மிக மிக முக்கிய முன்னெடுப்பு என்று நம்புகிறேன்.
சகோதரர்களே சகோதரிகளே, பல சமயங்களில், ஒப்புதல் வழங்குதல் மற்றும் வளங்களை ஒதுக்கீடு செய்வதில் அரசாங்கத்தின் விருப்பத் தேர்வு (discretion) தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிரச்சினையை ஆய்வு செய்தோம். இயன்றவரை இத்தகைய விருப்பத்தேர்வு அதிகாரங்களை முடிவுக்குக் கொண்டு வருவோம்.
ஒவ்வோர் ஆண்டும் எந்த அரசும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்குகிறது. இந்த முடிவுகளில் அடிக்கடி ஊழல் தொடர்பான புகார்கள் எழுகின்றன. அரசு கொள்முதலில் ஊழலை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு ஒரு குழுவை நியமித்து உள்ளோம். மற்ற பல நாடுகளில் உள்ளது போல இங்கும், அரசு கொள்முதல் தொடர்பான கொள்கைகளை வடிவமைக்க பொது கொள்முதல் சட்டம் வேண்டும் என்று இந்தக் குழு பரிந்துரைத்து உள்ளது. இத்தகைய சட்டத்தை இயற்றுவதற்கு இந்த ஆண்டு முடிவில் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்துவோம்.
சமீப ஆண்டுகளில், பல துறைகளில் சுயமாக இயங்கும் கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவி உள்ளோம். முன்னர் அரசியல் வசம் இருந்த பல பொறுப்புகள் இப்போது இந்த அமைப்புகளின் வசம் வந்துள்ளது. இந்த அமைப்புகளின் சுய அதிகாரம் பறிக்கப்படாமல், இவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சட்டம் நம்மிடம் இல்லை. இத்தகைய சட்டம் இயற்றுவது குறித்தும் பரிசீலிக்கிறோம்.
சகோதரர்களே சகோதரிகளே, ஊழல் குறித்து நான் இவ்வளவு சொல்கிறேன். ஏனென்றால், இது நம் அனைவருக்கும் கவலை தரக்கூடிய மிகவும் ஆழமான பிரச்சினை என்பதை நான் அறிவேன். ஆனாலும் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு 'மேஜிக்' கோல் எந்த அரசிடமும் இல்லை. (no government has a magic wand) ஊழலுக்கு எதிரான நமது போரில் பல முனைகளில் நாம் இணை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இந்தப் போரில் எல்லா அரசியல் கட்சிகளும் நம்மோடு தோளோடு தோள் நிற்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஊழலை ஒழிப்பதற்கு நாடாளுமன்றத்தில் பல மசோதாக்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். இனியும் அறிமுகப் படுத்துவோம். முடிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஒத்துழைத்தால் மட்டுமே ஊழலுக்கு எதிரான போரில் நாம் வெல்ல முடியும்.
சகோதரர்களே சகோதரிகளே, இந்த ஆண்டு நமது நாட்டு விவசாயிகளின் சாதனைகளுக்கு அவர்களை வாழ்த்துகிறேன். உணவுப் பொருள் உற்பத்தி சாதனை அளவை எட்டி உள்ளது. கோதுமை, சோளம், பருப்புகள், எண்ணெய் வித்துகள்... எல்லாம் உற்பத்தியில் சாதனை புரிந்துள்ளன. உணவுப் பொருட்கள், சர்க்கரை, பருத்தி ஆகியவை இன்று ஏற்றுமதி அளவுக்கு வந்திருக்கிறது என்றால் நமது விவசாயிகளின் கடின உழைப்பால் மட்டுமே இது சாத்தியமானது.
விவசாயத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சி தேவை. வேளாண் உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிப்பதால் மட்டுமே உணவு விலை ஏற்ற பிரச்சினையைத் தீர்க்க முடியும். உணவுப் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த, வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்த திசையில், 12-வது (ஐந்தாண்டு) திட்டத்தில் நமது முயற்சிகளை விரைவு படுத்துவோம்.
இன்று நமது வேளாண் சகோதர சகோதரிகளுக்கு, குறிப்பாக சிறு குறு விவசாயிகளுக்கு உறுதி கூறுகிறேன் - உங்களின் சிறப்புத் தேவைகளில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவோம். விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள், விதைகள் மற்றும் நிதிக்கடன் கிடைப்பதை உறுதி செய்வதே நமது லட்சியமாகும். மழைநீரை நம்பி இருப்பதைக் குறைக்கும் வகையில், விவசாயிகளுக்கு மிகச் சிறந்த நீர்ப்பாசன வசதிகளை வழங்க விரும்புகிறோம்.
சகோதரர்களே சகோதரிகளே, நமது நாடு உயர் பணவீக்க காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்துவது, அரசின் முக்கிய பொறுப்பாகும். இதனை அரசு முழுமையாக புரிந்து கொண்டுள்ளது. விலைகளை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம். சில சமயங்களில் விலைவாசி ஏற்றத்துக்கான சூழல் நாட்டுக்கு வெளியில் இருந்து வருகிறது. சமீப காலங்களில் சர்வதேச சந்தைகளில், பெட்ரோலிய பொருட்கள் உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் எண்ணெயின் விலை செங்குத்தாக ஏறி உள்ளது. இவற்றை பெரும் அளவில் நாம் இறக்குமதி செய்வதால், இந்த விலைகளில் ஏற்றம் உள்நாட்டில் பணம் வீக்கத்தை அதிகரிக்கிறது.
சில சமயங்களில் இந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெறுகிறோம். ஆனால் இந்த வெற்றி நீண்ட காலத்துக்கு நீடிப்பதில்லை. சில நாட்களுக்கு முன்பு விலைவாசி உயர்வின் மீது மக்களுக்கு இருக்கும் கவலை, நாடாளுமன்ற விவாதத்திலும் பிரதிபலித்தது. தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த புதிதாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று பார்த்து வருகிறோம். வரும் மாதங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதே நமது முன்னுரிமையாக இருக்கும்.
சகோதரர்களே சகோதரிகளே, நாட்டின் சில பகுதிகளில், தொழிற்சாலை, கட்டுமானம் மற்றும் நகரமயம் ஆக்கலுக்காக நிலம் பெற்றமை, பதட்டங்களை உருவாக்கியுள்ளது என்பதை அறிவேன். இந்த நடவடிக்கையால் குறிப்பாக நமது விவசாயிகள் பாதிக்கப் பட்டு உள்ளார்கள். பொதுநல திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் அவசியம் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது வெளிப்படையான, நியாயமான முறையில் நடைபெற வேண்டும். கையகப்படுத்தப்படும் நிலங்களைத் தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். நிலம் கையகப்படுத்துகிற நடவடிக்கையில் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது என்பதை உறுதி செய்வோம்.
117 ஆண்டு பழமையான நிலக்கையகப்படுத்துதல் சட்டத்துக்கு பதிலாக, முன்னோக்கிய சமநிலை கொண்ட புதிய நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்டம் கொண்டுவர அரசு விரும்புகிறது. ஏற்கனவே வரைவு சட்டம் தயாரித்து உள்ளோம். இதன் மீது கருத்தொற்றுமை ஏற்பட முயற்சிகள் எடுத்துள்ளோம். இதன் மீதான மசோதாவை விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவோம்.
சகோதரர்களே சகோதரிகளே, கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் கடந்த ஏழு ஆண்டுகளில் நமது சாதனைகளில் மனநிறைவு கொண்டுள்ளோம். தொடக்கக்கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி எதுவாக இருந்தாலும், எல்லா நிலைகளிலும் மேம்பாட்டுக்கு தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். இவை நல்ல விளைவுகளைத் தந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், கல்வித் துறையில் அடிப்படை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்று ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடக்கக் கல்விக்கான உரிமை இருக்கிறது. இடைநிலைக் கல்வியைப் பொதுமைப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாடு புதிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தகைய பெரிய மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, கல்வியின் எல்லா அம்சங்களையும் ஒட்டுமொத்தமாக பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும். ஆகவே கல்வியை எல்லா நிலைகளிலும் மேம்படுத்தத் தேவையான பரிந்துரைகளை வழங்க கல்வி ஆணையம் ஒன்றை நிறுவ முடிவு எடுத்துள்ளோம்.
நான் அடிக்கடி, பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தை கல்வித்திட்டம் என்றே குறிப்பிட்டு வருகிறேன். பதினோராவது திட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தந்தது போல, பன்னிரண்டாவது திட்டத்தில் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் தரப்படும். 12-வது திட்டம், சுகாதாரத்தின் மீது கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும் என்று தேசிய வளர்ச்சிக் குழுவுக்கு ஆலோசனை கூறுவோம். கல்வி மற்றும் சுகாதாரத்தின் முக்கிய பகுதிகளில் நிதி ஒதுக்கீடு ஒரு தடையாக இருக்காது என்று உறுதி தருகிறேன்.
நீண்ட காலமாக நமது நாட்டில் அமைப்புசாராத் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு வசதி இல்லை. 2008 இல், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக ‘ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா’ தொடங்கினோம். கடந்த ஆண்டு, ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு’ திட்டத்தில் பணிபுரிவோர், தெரு விற்பனையாளர்கள் (street vendors) வீட்டுவேலை செய்வோர் (domestic workers) ஆகியோரையும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தோம். இன்று ‘ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா’ திட்டம் 2 கோடியே 50 லட்சம் தொழிலாளர்களை அடைந்துள்ளது.
சகோதரர்களே சகோதரிகளே, நமது நாட்டின் உள்கட்டுமானங்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். இங்கே வெகு அதிக முதலீடு தேவைப்படுகிறது. இந்தக் காரணத்துக்காக, கடந்த ஏழு ஆண்டுகளில், உட்கட்டமைப்புக்கு முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் கொள்கைகளைப் பின்பற்றி வருகிறோம். ஜிடிபி சதவீத அடிப்படையில், கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தத் துறையில் முதலீடு ஒன்றரை மடங்கு அதிகரித்து உள்ளது. பெட்ரோலியத் துறை, மின்சக்தி தயாரிப்பு மற்றும் விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள் குறிப்பாக கிராமப்புற சாலைகள் ஆகியவற்றில் நமது திறன் மேம்பட்டு உள்ளது. உதாரணத்துக்கு, 11 ஆம் திட்டத்தில் நாம் சேர்த்த மின்சக்தி உற்பத்தி திறன், 10 ஆம் திட்டத்தைப் போல இரு மடங்காகும். 12 ஆம் திட்டத்தில், உட்கட்டமைப்பு முதலீட்டில் இன்னமும் விரைவுபடுத்துவோம். கிராம பகுதிகளுக்கும் நாட்டின் உள்ளமைந்த பகுதிகளுக்கும் சிறப்பு கவனம் செலுத்துவோம்.
சகோதரர்களே சகோதரிகளே, மாநகரங்களில் வாழும் நமது ஏழை சகோதர சகோதரிகளுக்காக இவ்வாண்டு மிக முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளோம். சமீபத்தில் நாம் ‘ராஜீவ் ஆவாஸ் யோஜனா’வை அங்கீகரித்து உள்ளோம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவை குடிசை பகுதிகள் இல்லாமல் செய்வோம். குடிசையில் வாழ்வோர் தூய இல்லத்துக்கு உரிமையாளராக தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பெற விரும்புகிறோம். மாநிலங்களுடன் சேர்ந்து ‘ராஜீவ் ஆவாஸ் யோஜனா’வை ஒரு தேசிய இயக்கமாக செயல்படுத்துவோம்.
சகோதரர்களே சகோதரிகளே, குழந்தைகள் மற்றும் பெண்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு நமக்கெல்லாம் கவலை தெரிகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இரண்டு முக்கிய திட்டங்கள் உட்பட பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அடுத்த ஆறு மாதங்களில், மேம்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் தொடங்க முடிவெடுத்துள்ளோம். இதன் மூலம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து பிரச்சினையை திறம்பட எதிர்கொள்ள முடியும்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பல துறைகளில் மேம்பாட்டைக் காட்டுகிறது. ஆனால், பாலின விகிதம் கடந்த மக்கள் தொகைக் கணக்கில் இருந்ததை விட சரிவைக் கண்டுள்ளது என்பது ஆழ்ந்த கவலை தரக்கூடியதாக உள்ளது. இந்த நிலை மேம்பட, தற்போதுள்ள சட்டங்களை திறம்பட செயல்படுத்துவது அவசியம் என்பது மட்டுமல்ல; பெண்கள், சிறுமிகள் குறித்த இந்த சமுதாயத்தின் பார்வை, அணுகுமுறை மாறுவதும் அவசியம். மகளிர் அதிகாரம் மற்றும் அவர்களின் சமூக நிலையை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளை நான் வேண்டிக் கொள்கிறேன்.
சகோதரர்களே சகோதரிகளே, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நமது கண்காணிப்பில் தொய்வு இருக்கக் கூடாது என்று, கடந்த மாத மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நம்மை எச்சரிக்கிறது. மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் சாமானியர்கள் இணைந்து போரிட வேண்டிய நீண்ட போர் இது. நமது உணவு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை, தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம்; வரும் காலத்திலும் இதனைத் தொடர்வோம்.
நக்சலிஸ சவாலை எதிர்கொள்ள, இயன்ற முயற்சிகள் அனைத்தையும் எடுத்து வருகிறோம். இந்த பிரச்சினை எழுவதற்கான காரணங்களை நீக்க முயற்சிக்கிறோம். ஆகையால், பிற்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் வாழும் 60 மாவட்டங்களில் விரைந்த வளர்ச்சிக்கான புதிய திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். இதற்காக இரண்டு ஆண்டுகளில் ரூ. 3,300 கோடி செலவிடப்படும்.
சகோதரர்களே சகோதரிகளே, நாம் குறைவாக வளரும் போதே, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மிகப் பெரும் சவாலாகும். பருவநிலை மாற்றம், நமது வளர்ச்சிக்கும் நமது இயற்கை வளங்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. பருவநிலை குறித்த எட்டு இயக்கங்களை தொடங்கி இருக்கிறோம்; இவற்றை நடைமுறைப்படுத்த கடுமையாக உழைத்து வருகிறோம். கங்கை நதியைப் பாதுகாக்க, தூய்மைப்படுத்த, தேசிய கங்கா ஆற்றுப்படுகை அமைப்பு (National Ganga River Basin Authority) நிறுவி உள்ளோம். சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் நிறுவியுள்ளோம். வரும் மாதங்களில், சுற்றுச்சூழல் தொடர்பான சான்றிதழ்களை வழங்குவதை முறை செய்யும் வகையில், சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு அமைப்பை நிறுவ இருக்கிறோம்.
சகோதரர்களே சகோதரிகளே, நமது விரைந்த பொருளாதார வளர்ச்சி காரணமாக நமது நாடும் சமுதாயமும் வேகமாக மாறி வருகின்றன. இன்று நமது மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்குகிறார்கள். அவர்களுக்கு உயர்ந்த இலக்குகள் உள்ளன. பல புதிய சாதனைகளை நிகழ்த்த நமது இளம் பெண்களும் ஆண்களும் கடுமையாக உழைக்கிறார்கள். நமது மக்களின் சக்தியும் ஆர்வமும், தேசத்தை நிர்மாணிக்கும் சரியான திசையில் செலுத்துவதற்கான சூழலை நாம் அனைவரும் ஏற்படுத்த வேண்டும். நமது மக்களின் திறமைகளை ஆக்கபூர்வமான பயன்பாட்டை நோக்கி நமது நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். நமது தொழில் முனைவோரும் வணிகர்களும் நமது நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாய் உணரக் கூடாது. நமது தொழில் அதிபர்கள், புதிய தொழில்களை நிறுவ வாய்ப்பு பெற வேண்டும். இதன் மூலம் நமது இளைஞர்களுக்கு ஆக்கபூர்வ வேலைக்கான கூடுதல் பாதைகள் கிடைக்கும். தொழில் வணிகம் மற்றும் முதலீட்டுடன் தொடர்பு உடையவர்கள் மத்தியில் ஐயம் அல்லது அச்சம் ஏற்படுத்துகிற அரசியலில் இருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.
சகோதரர்களே சகோதரிகளே, நமது பெரிய பல்வகை நாட்டை, விரைந்த வளர்ச்சியின் மூலம் மாற்றுகிற பயணத்தில் நாம் இறங்கி உள்ளோம். இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்மை பயக்கும் வளர்ச்சி. இந்த மாற்றத்துக்கான நடவடிக்கைகளால் சில சமயங்களில் பதற்றம் ஏற்படுதல் இயற்கைதான். ஜனநாயகத்தில் இத்தகைய பதற்றங்கள், அரசியல் பிரச்சினையாக மாறிவிடுகிறது. அரசியல் கட்சிகள் தங்களுக்குள் விவாதத்தில் ஈடுபடுகிற போது, நமது வளர்ச்சியின் வேகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது லட்சியமாகும்.
நமது ஜனநாயகம், நமது நிறுவனங்கள், நமது சமுதாய லட்சியங்கள் மற்றும் விழுமியங்கள், எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவை என்பதில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் அனைவரும் நம்முள் நம்பிக்கை வைக்க வேண்டும். நமக்கான நல்ல எதிர்காலத்தை நாமே கட்டமைத்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை வேண்டும். நாம் அனைவரும் இணைந்தால் மிகக் கடினமான பணியையும் நம்மால் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை வேண்டும். நமது நாட்டுக்கான ஒளிமயமான எதிர்காலத்தை கட்டமைக்க நாம் அனைவரும் தீர்மானித்துக் கொள்வோம். அன்பான குழந்தைகளே என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் - ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம்...)